சீனாவைத் தாக்கும் குரங்கு பி வைரஸ் | தினகரன்

சீனாவைத் தாக்கும் குரங்கு பி வைரஸ்

பேரழிவு தரும் கோவிட்-19 தொற்றுநோயுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கையில், சீனாவில் ஒரு புதிய குரங்கு பி வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் முதன்முதலாக 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இரண்டு இறந்த குரங்குகளைப் பிரிக்கும் போது கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் குரங்கு பி வைரஸைத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த வாரம் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. குரங்கு பி வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட அந்த அறுவை சிகிச்சை நிபுணர் மே மாதம் பல மருத்துவமனைகளுக்குச் சென்று இறந்துள்ளார். இது குறித்த அறிக்கைகளின் படி, வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து செரிப்ரோஸ்பைனல் திரவத்தை சோதனை செய்ததில், அந்நோயாளிக்கு ஆல்பாஹெர்பெஸ் வைரஸ் தொற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

அதோடு அந்த நோயாளியின் உடலில் இருந்த கொப்புளத்தின் திரவம், இரத்தம், நாசி மற்றும் தொண்டை மாதிரிகள் மற்றும் பிளாஸ்மா ஆகியவையும் நோயாளியிடமிருந்து சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் சீனாவின் சி.டி.சி-யின் வைரஸ் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான தேசிய நிறுவனத்திற்கு (ஐ.வி.டி.சி) அனுப்பப்பட்டன. அங்கு இந்த குரங்கு பி வைரஸ் கண்டறியப்பட்டது.

குரங்கு பி வைரஸ் என்றால் என்ன?

குரங்கு பி வைரஸ் சிம்பன்சிகளையும், கபுச்சின் குரங்குகளையும் பாதிப்பதோடு, மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். பி வைரஸ் பொதுவாக ஹெர்பெஸ் பி, குரங்கு பி வைரஸ், ஹெர்பெஸ்வைரஸ் சிமியா மற்றும் ஹெர்பெஸ்வைரஸ் பி என்றும் குறிப்பிடப்படுகிறது.

1932 ஆம் ஆண்டு தோன்றியது

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், குரங்கு பி வைரஸ் தொற்று மக்களிடையே ஏற்படுவது மிகவும் அரிதானவை என்றும், 1932 ஆம் ஆண்டில் முதன் முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, இன்று வரை வெறும் 50 பேரை மட்டுமே பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும் பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 21 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

மேலும் சீன அறுவை சிகிச்சை நிபுணர் குரங்கு பி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மனிதனுக்கு மனிதன் பரவுவது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வரவில்லை. 1932 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 50 பாதிப்புகளும், ஒரு குரங்கால் கடித்த அல்லது கீறப்பட்ட பின் அல்லது ஒரு குரங்கிலிருந்து திசு அல்லது திரவங்கள் உடைந்த தோலில் சேர்ந்த பின்னர் பாதிக்கப்பட்டன.

யாரெல்லாம் பாதிக்கப்படுவற்கான அதிக வாய்ப்புள்ளது?

அதோடு குரங்கு பி வைரஸ், உமிழ்நீர், மலம், சிறுநீர், மூளை அல்லது தண்டுவடத் திசுக்களில் காணப்படுகிறது. இது ஈரமான பகுகுதிகளில் நீண்ட நேரம் உயிர் வாழும். பொதுவாக இந்த வைரஸ் மூலம் மக்கள் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து குறைவாக இருந்தாலும், ஆய்வகத் தொழிலாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் குரங்கள் அல்லது அவற்றின் மாதிரிகளை கையாளக்கூடியவர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

குரங்கு பி வைரஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் போலவே, குரங்கு பி வைரஸின் முதல் அறிகுறி காய்ச்சல் போன்று ஆரம்பிக்கும். அதன் பின் காய்ச்சலுடன், குளிர், தலைவலி, உடல் சோர்வு, தலைவலி ஆகியவை அடங்கும். மேலும் வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிறிய கொப்புளங்கள் உருவாகக்கூடும். மேலும் மற்ற அறிகுறிகளாக மூச்சுத்திணறல், குமட்டல், வாந்தி, அடிவயிற்று வலி, விக்கல் ஆகியவை அடங்கும்.

நோய்த்தொற்றின் நிலைமை மோசமாகும் போது, குரங்கு பி வைரஸ் மூளை மற்றும் முதுகெலும்பு வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக நரம்பியல் மற்றும் அழற்சி அறிகுறிகள், தசை ஒருங்கிணைப்பு பிரச்சினைகள், மூளை பாதிப்பு மற்றும் நரம்பு மண்டலத்தில் கடுமையான சேதம் ஆகியவை ஏற்பட்டு, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும். சிடிசி-யின் கூற்றுப்படி, அறிகுறிகள் ஒரு நாள் முதல் மூன்று வாரங்கள் வரை வேறுபடலாம்.
குரங்கு பி வைரஸ் தொற்றிற்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

தற்போது, குரங்கு பி வைரஸை எதிர்கொள்ள தடுப்பூசி இல்லை. சரியான நேரத்தில் ஆன்டி-வைரல் மருந்துகளைக் கொடுத்தால், அது உயிருக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உதவும்.
 


Add new comment

Or log in with...