பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை...

பெண்களின் எழுச்சியின்றி மாபெரும் சமூக மாற்றங்கள் சாத்தியமே இல்லை. பெண்கள், எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கொண்டே சமூக முன்னேற்றத்தை நாம் அளவிட முடியும் என்றார் கார்ல் மாரக்ஸ்.

ஆனால் நமது இலக்கியங்கள் நமக்கு கற்றுத்தந்தவை விசித்திரமானவை.“பெருமையும் உரனும் ஆடூஉ மேன” எனும் களவியல் பகுதியின் அடிப்படையில் ஆண்மகன் உரனுடைய வனாகப் பெருமைக்குரியவனாக உருவாக்கப்படுகிறான்.ஆனால் பெண் “அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய” என்று பெண்ணுக்குரிய பண்புகளாகவும் சொல்லப்படுகிறது.

நாம் கடந்த வாரம் பாஞ்சாலியைபற்றி பார்த்தோம். ஒரு பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும். ஆனால் அதற்கான வீரம் அவளுக்கானதாக வரையறுக்கப்படுவதில்லை . விவேகத்தை மட்டும் கைக்கொண்டு வீரத்தால் வெற்றியை தனது என நம்பவைக்கும் தலைமகன்கள் நாம் இலக்கியவழி கண்டவர்கள் என்பேன்.

பெண்ணின் சாதுர்யத்தை கொண்டு கணவனின் உயிரை தக்கவைத்து அவன் உயிரை தக்கவைத்தமையால் அவள் பத்தினிபெண்ணாக இன்று கொண்டாடப்படும் சாவித்திரியை பற்றியே நாம் இன்று பார்ப்போம்.
அதற்கு முன்பாக இந்த கணவனே சகலதுமானவன் என நம்பவைக்கும் நமது சமூகத்தையும் அதை இலகுவாக ஏற்றுக்கொள்ளும் பெண்களை பற்றியும் வருந்தாமல் இருக்க முடியவில்லை.

அண்மையில் நான் முகப்புத்தகத்தில் ஒரு பெண் இட்ட பதிவை பார்த்தேன். ஒரு பெண்ணுக்கு நல்ல கல்வியை தருவதைவிட குணமான கணவனை அமைத்து கொடுத்தால் வாழ்க்கை சிறக்கும் என்று இருந்த அந்த பதிவு என்னை சிந்திக்கவைத்தது. பெண்ணிற்கு கல்வியை வழங்கினால் போதும் அவள் தனக்கான துணை யார் என்பதனை தீர்மானிப்பாள். தனது வாழ்வை சரியாக அமைத்துகொள்வாள். ஆனால் இப்போது ஆணினால் தான் அவளது வாழ்க்கை சிறப்பாக அமையும் என அவளையே நம்பவைத்துவிட்டதுதான் ஆச்சரியம். இவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு.

ஆமாம். பாஞ்சாலிக்கும் இதுவே நேர்ந்தது. அரசியல் இலாபங்களுக்காக முதலில் துண்டாடப்படுபவர்கள் பெண்கள். அவர்களுக்கு அரசாளும் உரிமை இருக்காது . ஆனால் அவளால்தான் அரசு ஆளப்படும். துரதிஷ்டம் என்னவென்றால் அது அவளுக்கே தெரியாது. பெண்ணின் வலிமையை எப்போதும் அவள் அறிந்துகொள்ள விடுவதில்லை. அறிந்துகொண்டிருப்பாளானால் இன்று இந்த நிலையும் இல்லை.

முதலில் திரெளபதியை தனது பழிதீர்க்கவே துருபதன் நெருப்பிலிருந்து உருவாக்கினான். அவளை மணந்தால் பாண்டவர்களுக்கு நன்மை விளையும் என்பதனால் துரோணர் அவளை அர்சுணனை வென்றெடுக்க சொன்னார்.

குந்தி மிகப்பெரிய தந்திரசாலி. அவளின் அரசியல் காய்நகர்த்தலில் தான் பாஞ்சாலி ஐவரை மணந்தாள். ஆமாம் வந்தது பெண்ணென்று தெரிந்திருந்தும் ஒவ்வொன்றில் மட்டும் தனித்துவமான தமது புத்திரர்களின் திறமையை ஒட்டுமொத்தமாய் கூட்டுவிக்க ஐவரையும் திறமையுள்ள தைரியமுள்ள பெண்ணான பாஞ்சாலியை மணக்க வைத்தார். அவள் மூலமாக இராஜ்யங்களை கைக்கொள்ள முடியும் என்று நம்பினாள். அந்த நம்பிக்கையில் நொருங்கியதே திரெளபதியின் வாழ்க்கை.

திரெளபதி கர்ணனை மணந்திருந்தால் தன் வாழ்க்கை இந்த இன்னல்கள் அற்று இருந்திருக்கும் என்றுகூட சிந்திந்திருக்கிறாள். இது எப்படி தவறாகும்.

நாம் நீரில் தத்தளிக்கும்போது தப்பித்துக்கொள்ள ஏதொவொன்றை பற்றிக் கொள்ள நினைப்போம் அது தவறா? சபையில் துகிலுரிகையில் தடுக்க திராணியற்ற கணவன்கள் ஐவரை காட்டிலும் அவளை தாசி என விழித்து காப்பாற்றினான் கர்ணன். ஆமாம் அக்காலத்தில் தாசியை எந்த அரசகுலத்தினரும் தீண்டுவதில்லை. ஆக அவளை தாசி என விழித்து அவன் காப்பற்றவே நினைத்தான்.

அவள் நினைத்ததை சகல குணங்களும் கர்ணனிடம் இருந்தும் அவள் அரசியல் பகடைக்காய் என்பதனால் விரும்பிய ஒருவரை மணப்பது அவளுக்கு மறுக்கப்பட்டது.

பாண்டவர்கள் ஐவரை விடவும் சகுனியின் பழிவாங்கல் தந்திரங்களுக்குள் பாசத்தால் சிக்கிக்கொண்ட துரியோதனன் நட்பிலும் குணத்திலும் சிறந்தவன்.அந்நாளில் அரசுகள் பெண்களால் காப்பாற்றப்பட்டன. பெண்களால் அழிந்தன. ஆனால் இவற்றின் பகடையாய் அவள். அவற்றை உருட்டும் கரங்கள் ஆணுக்கு உரியதாகவும் இருப்பதுதான் விசித்திரமானது.

மந்திரநாட்டு மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி. தான் மணமுடிக்க திறமை வாய்ந்த இளவரசனைக் கண்டறிய நாடு முழுவதும் சுற்றி இறுதியில், சத்தியவான் தங்கியிருந்த காட்டிற்கு வந்த சாவித்திரி, சத்தியவானைக் கண்டதும் தன் இதயத்தை சத்தியவானிடம் பறிகொடுத்தாள். தனது திருமணம் சத்தியவானுடன் நடக்க வேண்டும் என தந்தையிடம் கூற, அப்போது அங்கு வந்த முனிவர் 'இன்றிலிருந்து பன்னிரண்டு மாதங்களில் சத்தியவான் இறக்கப் போகிறான்' என கூறியும், சாவித்திரி சத்தியவானைத் தவிர எவரையும் மணக்க மாட்டேன் என உறுதிபடக் கூறினாள். இங்கே பெண்ணின் திடமோ உறுதியோ நாம் சிலாகிப்பதில்லை என்பது நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

சத்தியவான் மரணமடைந்த பின்பு யமனினம் போராடி தனது நாவின் வன்மையால் சாதுரியமாக என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்தியவானின் மகன்களுக்கு கிடைக்க வரம் வேண்டினாள். யமனும் வரமளித்தான்.

அதனால் சத்தியவானின் உயிர் மீண்டது. யமனிடம் போராடி வென்ற அவள் சாதுர்யத்தையோ அல்லது அவளது தீரத்தையோ நாம் கொண்டாட மறந்துவிடுவோம். தன் கணவனை மீட்டாளல்லவா அதனால் அவளே பத்தினி என காரணம் கற்பித்து விடுகின்றோம்.

இப்படித்தான் சாதனை எவ்வளவு பெரிதாகவேனும் இருக்கட்டும். சாதித்தவள் பெண் என்றால் பின்புலமும் ஆண் என்றால் நாட்டை ஆளும் அடைமொழிகாட்டும் நவீன சமூகத்தில்தான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பவதாரணி ராஜசிங்கம்


Add new comment

Or log in with...