கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைய முற்பட்ட நால்வர் கைது

ஒருவர் சீனப் பிரஜை; ஏனையோர் பொத்துவில் வாசிகள்

கொழும்பு துறைமுகத்துக்குள் அநாவசியமாக நுழைய முற்பட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , கொழும்பு துறைமுகத்துக்கும் கொழும்பு துறைமுக நகரத்துக்கும் பயணிப்பதற்கான அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்கு மனித வளத்தை வழங்கும் சீன நிறுவனத்தின் உரிமையாளரான சீனப் பிரஜை ஒருவரால் அநாவசியமாக துறைமுகத்துக்குள் நால்வர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போதே குறித்த சீனப் பிரஜையுடன் ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் 3 ஆம் இலக்க விமலதர்ம நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த துறைமுக அதிகாரிகளால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கரையோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜை தவிர்ந்த ஏனைய நால்வரும் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். துறைமுகத்துக்குள் நபர்களை அழைத்துச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.


Add new comment

Or log in with...