மலையகத்தின் புரட்சிக் கவிஞன் பெரியசாமியின் 55 வது நினைவு | தினகரன்

மலையகத்தின் புரட்சிக் கவிஞன் பெரியசாமியின் 55 வது நினைவு

‘மலையகத்தின் புரட்சிப் பாவலன் பி.ஆர். பெரியசாமி அமரராகி ஐம்பத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னர் யட்டியாந்தோட்டையில் நடந்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் கூட்டமொன்றில் அமரர் அ. அசிஸ், கே.ஜீ. நாயர் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அவை எனக்கு இப்போது ஞாபகம் இல்லாவிட்டாலும் கூட, கவிஞர் பெரியசாமி வீரவேசத்தோடு மேடையில் ஏறி 'ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சிங்கம். அதில் நமது தலைவர் அசிஸ் வீரசிங்கம்' என்று பாடியது இன்றும் எனது மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

கவிஞர் பெரியசாமியால் 64 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட 'தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம்' என்ற நூல் இப்பொழுது மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது என்பது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரிய வரலாற்றுப் போராட்ட ஆவணத்தைத் தேடி எச்.எச். விக்கிரமசிங்க மறுபிரசுரம் செய்திருக்கிறார்.

அமரர் பெரியசாமி மறைந்து இன்றுடன் 55 ஆண்டுகள் நிறைவு பெற்ற இந்த நாளில் சமகாலத்தில் அவருடன் பழகியவன், அவரது எழுத்துகளைத் தேடித்தேடி வாசித்தவன் என்ற வகையில் இந்த நூலை வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.’ இவ்வாறு சண்முகாஸ் உணவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வீரப் போராட்ட நூலை வெளியிட்டு வைத்துப் பேசிய முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களின் யதார்த்தபூர்வமான அன்றைய நிலைமை பற்றி 1957 இல் வெளிவந்த அவரது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

'அக்கிரமத்தின் உச்சி, ஆணவத்தின் தலைமை, அதிகாரத்தின் குரூரம், ஏகாதிபத்தியத்தின் இறுமாப்பு, முதலாளித்துவத்தின் முரட்டு சுபாவம், நிறத்திமிரின் நிட்டூரம் அனைத்தும் கோரத் தாண்டவமாடும் உள்ளம் படைத்த வெள்ளையர்கள் துரை என்ற பெயரில் நடமாடிய வேளை...'

பிரித்தானிய சாம்ராஜ்யத்திலே சூரியன் என்றுமே அஸ்தமிக்காது என்று கனவு கண்டு இறுமாப்படைந்திருந்த ஏகாதிபத்திய காலகட்டத்தில்தான் கவிஞர் பெரியசாமி அவர்களின் நூல் வெளிவந்தது. ஆனால் இயல்பாகவே மனிதரிடம் குடிகொண்டிருந்த விடுதலை வேட்கை, மனிதனின் மாண்பை உள்ளார உணர்ந்து கொள்வதிலே இருந்த வீரியம், வீறுகொண்டெழுந்த மானுடம் ஆகியன ஏகாதிபத்தியத்தின் இறுமாப்புக் கனவுகளை மறையச் செய்து விட்டன.

இன்று பல பிரச்சினைகள் இருந்தாலும் மனிதத்துவம் மேலோங்கியுள்ளது. அன்று அடிமைப்பட்டிருந்த நாட்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலையகத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. தோட்டத் தொழிலாளர் மத்தியிலிருந்து கற்போர் தொகையும், கல்விமான்களும், தொழில்துறை வல்லுநர்களும் பலர் தோன்றியுள்ளனர். அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு. ஆனால் தோட்டத் தொழிலாளர் அன்று உயிர்களைப் பறிகொடுத்து, பச்சை இரத்தத்தைப் பரிமாறி, தூக்குமேடை ஏறி, மண்டை உடைபட்டு நிகழ்த்திய தியாகப் போராட்டங்களின் மூலம்தான் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கவிஞர் பி.ஆர். பெரியசாமி தொழிலாளர்கள் வடிக்கும் இரத்தக் கண்ணீரைக் கண்டு உள்ளம் குமுறி வடித்த நூல்தான் 'தோட்டத் தொழிலாளர் வீரப் போராட்டம்' என்கின்ற இந்த வெளியீடாகும். இவ்வளவு காலம் கடந்தாவது இந்த நூலை அமரர் பெரியசாமி குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் அற்புதமாக செய்து முடித்திருக்கின்றார் பிரபல இலக்கியவாதியும், ஆய்வாளருமான நண்பர் எச். எச். விக்கிரமசிங்க. அவர் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும்’.

இவ்வாறு பி.பி. தேவராஜ் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பேசுகையில் “பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக தமது தோட்ட உரிமையாளருக்கு எதிராக வெகுண்டெழுந்த போராட்ட வரலாறு சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற முறைப்பாடு உண்டு. நடேசய்யரோடு ஒன்றிணைந்து தொழிற்சங்கப் போராட்டங்களில் நேரடியாக பங்குபற்றி 1957 ஆம் ஆண்டு இந்த போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தி வரலாற்று சாதனை படைத்தவர் கவிஞர் பி.ஆர். பெரியசாமி. அதனைத் தேடி மீள்பிரசுரம் செய்த எச்.எச். விக்கிரமசிங்க அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த லண்டனில் வாழும் பெரியசாமியின் புதல்வர் சிவஞானத்திற்கும் அவருடைய புதல்வி இரத்னேஸ்வரி பெரியசாமிக்கும் எனது பாராட்டுக்கள்.

அந்நூலின் அருமை, பெருமைகளை நன்குணர்ந்த மூத்த பத்திரிகையாளர் எச்.எச். விக்கிரமசிங்க முழுமூச்சுடன் பணியில் இறங்கி 2ஆம் பதிப்பை வெளிக்கொண்டு வந்தது சிறந்த பணியாகும்” என்று குறிப்பிட்டார்.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப் பேசுகையில், பெரியசாமி அவர்களின் வீரம் ததும்பிய மேடைப் பாடல்களை நினைவுபடுத்தினார். தொழிலாளர்கள் போராட்டங்களில் தோளோடு தோள் நின்று அவர்களுக்கு ஊக்கம் வழங்கி உரிமைகளை வெல்வதற்கு பெரியசாமி ஆற்றிய பலவற்றை அவர் நினைவு கூர்ந்தார். ‘தோட்டத் தொழிலாளர்களின் வீரப் போராட்டம்’ என்ற இந்த நூல் சிறிதானாலும் அது நினைவுபடுத்தும் மலையக போராட்ட நினைவலைகள் கடல் போன்றவை” என்றார் தெளிவத்தை ஜோசப்.


Add new comment

Or log in with...