கோவாக்‌ஷினுக்கு உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் இந்திய நிறுவனம் | தினகரன்

கோவாக்‌ஷினுக்கு உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரத்தைப் பெறும் முயற்சியில் இந்திய நிறுவனம்

கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தாயரித்து உற்பத்தி செய்துள்ள கோவாக்‌ஷின் தடுப்பூசிக்கு மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்னர் அதனை அவசர தேவையின் நிமித்தம் பயன்படுத்த இந்தியா கடந்த ஜனவரி மாதம் முதல் அனுமதி அளித்துள்ளது.

என்றாலும் இத்தடுப்பூசி தொடர்பான மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் இம்மாதம் வெளியாகுமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வளர்ந்தவர்கள் சகலருக்கும் கொவிட் 19 தொற்று தடுப்புக்கான தடுப்பூசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை இந்தியா அண்மையில் ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் ஒரு நாளில் சுமார் 5 மில்லியன் தடுப்பூசிகள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இவ்வருட இறுதிக்குள் வளர்ந்தவர்கள் சகலருக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க இந்தியா எதிர்பார்த்துள்ளது.

என்றாலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர பயன்பாட்டுக்கான பட்டியலில் கோவாக்‌ஷின் தடுப்பூசி இன்னும் உள்ளடக்கப்படவில்லை. அதனால் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு பயணம் செய்யும் இந்திய மாணவர்கள் கொவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அதுவொன்றே உலக சுகாதார ஸ்தாபன அங்கீகாரம் பெற்ற தடுப்பூசியாக இந்தியாவில் காணப்படுகின்றது. அதாவது அஸ்ட்ரா செனெகாவின் தடுப்பூசி தான் இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

என்றாலும் பாரத் பயோடெக் நிறுவனம் தமது தடுப்பூசிக்கு அவசரகாலப் பயன்பாட்டுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரத்தைப் பெற்று அதன் பட்டியலில் உள்ளடக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கடந்த ஏப்ரல் மாதம் உலக சுகாதார ஸ்தாபனத்திடம்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் "கூடுதல் தகவல்கள் தேவை' என உலக சுகாதார ஸ்தாபனம் அச்சமயம் குறிப்பிட்டது. அதற்கேற்ப கூடுதல் தகவல்களை நிறுவனம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனக் குழுவுக்கும் பாரத் பயோடெக் நிறுவனப் பிரதிநிதிகளுக்குமிடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இவ்விடயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சும் விஷேட கவனம் செலுத்தியுள்ளதோடு மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளைப் பெற்றுக்ெகாடுக்கவும் எதிர்பார்க்கின்றது.

இந்தியா தடுப்பூசி உற்பத்தியில் வளர்ந்துவருவதையிட்டு இந்தியா மிகுந்த பெருமை அடைந்துள்ளது. இது நாட்டின் மருந்தியல் திறன்கள் மற்றும் தன்னம்பிக்கை உந்துதலின் அடையாளம் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஆளும் கட்சியின் தலைவர்கள் அனைவருக்கும் கோவாக்‌ஷின் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியில் செயலற்ற கொரோனா வைரஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு தடுப்பூசி திட்டத்தில் தற்போது பயன்படுத்தப்படும் மூன்று தடுப்பூசிகளில் இதுவும் ஒன்றாகும். மற்றவை ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உற்பத்தி செய்யும் ஸ்பூட்னிக் தடுப்பூசியும், கொவிஷீல்ட்டும் ஆகும். இவற்றில் ஸ்புட்னிக் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரப் பயன்பாட்டு பட்டியிலில் உள்ளடக்கப்படவில்லை.

கோவாக்‌ஷின் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளில் கொரோனா வைரஸுக்கு எதிராக இத்தடுப்பூசி 78 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும், முதலாம் இரண்டாம் கட்டங்களுக்கான சோதனைகளின் முழுமையான தரவுகளையும் மூன்றாம் கட்ட சோதனைகளுக்கான பகுதி தரவுகளையும் இந்தியாவின் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டாளர்களால் முழுமையாக ஆராயப்பட்டுள்ளன என்று பாரத் பயொடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் கடந்த 12 மாத காலப்பகுதியில் உலகளவில் புகழ்பெற்ற ஐந்து மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ சஞ்சிகைகளில் கோவாக்சினின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த ஒன்பது ஆராய்ச்சி ஆய்வுகளை வெளியிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவிட் -19 தடுப்பூசிகளின் திட்டத் தலைவரான டாக்டர் ரேச்ஸ் எலா ஒரு ட்விட்டர் பதிவில், 25,800 மாதிரி அளவு கொண்ட மூன்றாம் கட்ட சோதனை "வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய செயல்திறன் சோதனை" என்று கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...