'எரிமலை' ஆசிரியர் அபூபக்கர் காலமானார்

'எரிமலை' ஆசிரியர் அபூபக்கர் காலமானார்-Erimalai Newspaper Editor-ASM Aboobucker Passed Away

- கிழக்கில் முதல் தனிப்பத்திரிகையை ஆரம்பித்தவர்

‘எரி மலை’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் பத்திரிகை ஆசிரியர் ஏ.எஸ்.எம். அபூபக்கர் கடந்த சனி இரவு (17) பத்து மணியளவில் தனது இல்லத்தில் காலமானார்.

சிறிதுகாலம் சுகவீனமுற்றிருந்த இவர் தனது 88ஆவது வயதில் உயிரிழந்தார்.

அக்கரைபற்றில் வசித்துவந்த இவர் ஒரு சிறந்த ஜனரஞ்சகமானவராவார்.

தினகரன், வீரகேசரி, தினபதி போன்ற பத்திரிகைகளின் ஆரம்பகால நிருபராகவும் இவர் கடமைபுரிந்துள்ளார்.

கிழக்கில் எந்தவித பத்திரிகைகளுமே வெளிவராத ஒரு காலகட்டத்தில் 1956ஆம் ஆண்டு சொந்த முயற்சியால் ‘எரிமலை’ என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நிருபராக, கள நிருபராக, ஒப்புநோக்குநராக, ஆசிரியராக, பிரதம ஆசிரியராக, முகாமைத்துவப் பணிப்பாளராக மற்றும் விநியோகஸ்தராகவும் பத்திரிகையை நடாத்திவந்த ஒரு துணிச்சல்சல் மிக்கவர்.

இப்பத்திரிகை மூலம் சமூக, கலை, கலாசார விழுமியங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துவந்த இவர், சமூகங்களில் நடைபெற்றுவரும் ஊழல்கள், கொலைகள், கொள்ளைகள் மற்றும் சமூகவிரோத செயற்பாடுகள் போன்றவைகளை வெளிக்கொணர்வதிலும் அதிக கரிசனை காட்டிவந்தார்.

இளைஞர் முதல் முதியோர் வரை இப்பத்திரிகையை ஆவலோடு வாசிப்பவர்களாக இருந்ததனர்.

அவரது தொடர் கட்டுரைகளையும் வாசகர்கள் விரும்பி எதிபார்துக்கொண்டிருப்பர். விறுவிறுப்பான செய்திகளை முந்திக்கொண்டு எழுதுவதில் ஒரு முன்னோடியாக இருந்தார்.

இவரின் எழுத்துத்துறையை பாராட்டி கலாசார அமைச்சு 2017ஆம் ஆண்டு ‘முதிர் கலைஞர் விருது ‘ மற்றும் 2018ஆம் ஆண்டு ‘கலைஞர் சுவதம்’ போன்ற விருதுகளை வழங்கி கௌரவித்தமையும் குறிப்படத்தக்கது.

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...