பொலிசாரையும், சுகாதாரப் பரிசோதகர்களையும் கண்டதும் முகக்கவசம் அணிவதால் பயனில்லை!

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுத் தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார விதிமுறைகள் பற்றிய கொரோனா விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் அவர்கள் வழங்கி வருகின்றனர். அத்துடன் இங்குள்ள கிராமங்கள் தோறும் தொடர்ச்சியாக பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சேனைக்குடியிருப்பு, துறைவந்தியமேடு, நற்பிட்டிமுனை ஆகிய தமிழ்க் கிராமங்களில் கொரோனா தொற்றாளர்களின் வீதம் சமீப காலமாக அதிகரித்துச் செல்கின்றது.

கல்முனை வடக்கில் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களாக 265 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக சில தினங்களுக்கு முன்னர் 147 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 474 குடும்பங்களைச் சேர்ந்த 1432 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 384 குடும்பங்களைச் சேர்ந்த 1048 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 90 குடும்பங்களைச் சேர்ந்த 384 பேர் தனிமைப்படுத்தல் தடுப்பு முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனையினால் 4435 பேருக்கு கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கென 1304 பி.சி.ஆர் பரிசோதனைகளும், 3131 அன்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கில் மூன்றாவது அலையில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்துச் செல்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இங்குள்ள கிராமங்களில் கொவிட்19 விழிப்புணர்வு செயலணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அக்குழுவினர் கிராமங்களில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்து மக்களை அறிவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது சுகாதாரப் பிரிவினரதும், பொலிஸ், இராணுவப் படையினரினதும் கடமை என பலர் நினைக்கின்றனர். கொரோனா என்பது விலைமதிப்பற்ற உயிரைப் பறிக்கின்ற கொடிய நுண்கிருமியாகும். இக்கிருமி பரவுவதை அனைவரும் ஒன்றிணைந்தே தடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமுக இடைவெளியை பேணுதல், கைகளைக் கழுவுதல், கூட்ட நெரிசல்களைத் தவிர்த்தல் போன்ற தனிமனித சுகாதரப்பழக்க வழக்கங்களை பேணுவதன் முலமாகவே தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும்.

வீதியில் செல்லும் போது பொலிஸாரையும், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களையும் கண்டால் மாத்திரம் முகக்கவசம் அணிதல் என்பது எம்மை நாமே ஏமாற்றும் செயலாகும். உங்கள் உயிரை கொரோனா தொற்றில் இருந்து காப்பத உங்கள் கடமையாகும். மற்றவர்களுக்காக முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. உங்களை நீங்கள் உணர்ந்து, உங்கள் வீட்டிலுள்ள அருமை உறவுகளை நினைத்து அரசாங்கம் சொல்லும் சுகாதாரவிதியை கடைப்பிடித்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்புபெற முடியும் என்று மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

தற்போது 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் தயங்குதல் கூடாது. அத்தடுப்பூசியை அனைவரும் ஏற்றிக் கொள்ள வேண்டும். பல இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதை காண முடிகின்றது.

எதிர்வரும் வாரங்களில் கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிராந்திய சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது. தடுப்பூசி ஏற்றுவதன் அவசியம் பற்றிய சுவரொட்டிகளும், துண்டுப் பிரசுரங்களும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களினால் இங்குள்ள அரச அலுவலகங்களின் விளம்பரப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கல்முனை வடக்கு பிராந்தியத்திற்குட்பட்ட கிராமங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், வெளிநாடு மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் இருந்து வருகை தருவோர் பற்றிய விபரங்களை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தெரியப்படுத்துமாறும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா என்னும் இக்கொடிய நோயை அனைவரும் ஒன்றிணைந்தே வெல்ல வேண்டும். இதில் அரசியலை புகுத்தி எவரும் குளிர்காய முற்படக் கூடாது. இன்று உலகமே கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றது. எமது உயிரை பாதுகாத்து, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...