கொரோனா தடுப்பூசி விடயத்தில் உலவுகின்ற தவறான வதந்திகள்! | தினகரன்

கொரோனா தடுப்பூசி விடயத்தில் உலவுகின்ற தவறான வதந்திகள்!

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தினகரனுக்கு பேட்டி

மக்கள் வீணாக அஞ்ச வேண்டியதில்லை

கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை என்று கூறுகின்றார் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி. தடுப்பூசி தொடர்பாக  டொக்டர் அஸ்மி தினகரனுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி: கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு மக்கள் சிலர் அஞ்சுகிறார்கள். இது ஏன்?

பதில்: உண்மையில் தடுப்பூசிகள் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் காலாகாலமாக எல்லாச் சமூகத்தினரிடமும் இருந்து வருகின்றன. தடுப்பூசிகள் பற்றிய தெளிவின்மையே இதற்குக் காரணமாகும். அந்த வகையிலே கொரொனா அதிகரித்த வேளையிலே பல மேற்கத்திய நாடுகள் குறிப்பாக நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிலே இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றார்கள். அந்த வகையிலே கொரோனாவினால் ஏற்படுகின்ற பாரிய விளைவுகள் இந்த தடுப்பூசிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

உண்மையில் இந்த தடுப்பூசியை ஏற்றுவதற்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை. தடுப்பூசி ஏற்றுவதற்கு யாரும் அஞ்சவும் தேவையில்லை. தடுப்பூசியினால் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக சுகாதாரப் பிரிவால் பல்வேறுபட்ட விழிப்புணர்வுகளையும், தெளிவுகளையும் ஏற்படுத்திவருகின்றோம்.

இருந்த போதிலும் அநேகமான மக்கள் மத்தியில் தடுப்பூசி தொடர்பில் அச்ச உணர்வு இருக்கின்றது. சில உண்மைகளை மக்கள் அறிந்திருக்க வேண்டும். போலியோ நோய் என்பது தடுப்பூசி மூலம் எமது நாட்டில் முற்றாக ஒழிக்கப்ட்டிருக்கின்றது. எனவே தடுப்பூசி ஏற்றுவதற்கு எந்தத் தயக்கமும் தேவையில்லை. யாரும் அச்சம் கொள்ளாமல் இந்த தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதன் மூலம் கொரோனாவில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா பரவலின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. எனவே எல்லோரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மிகவும் அவசியமாகும். எனவே எந்தத் தயக்கமுமின்றி தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் கொரோனாவில் இருந்து விடுபட முடியும்.

முதலில் 'அஸ்ட்ரா செனிக்றா' என்ற தடுப்பூசி ஏற்றினோம்; இப்போது வந்திருக்கின்ற 'சினோபாம்' என்கின்ற தடுப்பூசி மிகவும் வினைத்திறன் கூடியது. இந்த தடுப்பூசிகளினால் இலங்கையில் இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே யாரும் அஞ்சத் தேவையில்லை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

கேள்வி: தடுப்பூசி ஏற்றுவதனால் கொரோனா தொற்று ஏற்படாது என்று சொல்ல முடியுமா ?

பதில்: தடுப்பூசி ஏற்றப்பட்வர்களில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் அவர்களுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. கொரோனா தொற்றை காவுகின்ற தன்மை அவர்களிடம் இருக்குமே தவிர பாரிய விளைவுகளையும் ஏற்படுத்தப் போவதில்லை. எனவே பயப்படாமல் இந்த தடுப்பூயை ஏற்றிக் கொள்ள முடியும். இதன் மூலம் நல்ல பாதுகாப்பைப் பெற முடியும்.

கேள்வி: நீண்ட காலமாக நீரிழிவு, இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களால் பாதிக்கப்ட்டிருக்கின்றவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கிறதா?

பதில்: இவ்வாறான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே முக்கியமாக இந்த தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். அதே போன்று முதலில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதற்கு அடுத்தாக ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், நீண்ட காலமாக தொற்றா நோய்களால் பாதிக்கப்ட்டிருக்கின்றவர்களுக்கும் முக்கியமாக இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும். காரணம் என்னவென்றால் இவ்வாறானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானால் ஆபத்து நிலைமை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இக்காரணத்தால் இவ்வாறானவர்களுக்கே முன்னுரிமை வழங்க இருக்கின்றோம்.எனவே நோய் உள்ளவர்கள் எந்தத் தயக்கமும் அடையத் தேவையில்லை. தாங்களாக முன்வந்து தடுப்பூயை ஏற்றிக் கொள்வது சிறந்ததாகும்.

கேள்வி: ஒருவர் விரும்பவில்லையென்றால் இந்த தடுப்பூயை ஏற்ற முடியுமா?

பதில்: உண்மையில் இது ஒரு சிக்கலான விடயம்தான். நாங்கள் தடுப்பூசி ஏற்றுவதற்கு முன்னர் இந்த தடுப்பூசி பற்றிய தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்தி, பின்னர் அவர்களிடம் அனுமதியைப் பெற்ற பின்னரே இந்த தடுப்பூயை ஏற்றுகின்றோம். இதை விரும்பாமல் இருப்பதை விட ஒவ்வொருவரும் இதை விரும்பி ஏற்றிக் கொள்வது சிறந்தது என்பதே எங்களது ஆலோசனையாகும். தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றோம்.

கேள்வி: கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எவ்வாறானவர்களுக்கு தடுப்பூசி முதலில் ஏற்றப்படவுள்ளது?

பதில்: கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28,800 பேருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம்.முதற் கட்டமாக ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அறுபது வயது கடந்தவர்களுக்கும்,தொற்றா நோயாளர்களுக்கும், மக்களோடு தொடர்புபட்டு அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் ஏற்ற இருக்கின்றோம்.

நேர்காணல்:

பி.எம்.எம்.ஏ.காதர்

(மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...