அச்சுறுத்தும் டெல்டா பிளஸ் வைரஸ்

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியாவின் அறிக்கை நம் கவனத்தைப் பெறுகிறது. “இரண்டாம் அலையின்போது ‘ஆல்பா வைரஸ்’ (B.1.1.7.) இங்கிலாந்தில் வேகமெடுத்துப் பரவியதுபோலவும், ‘டெல்டா வைரஸ்’ (B.1.617.2) இந்தியாவில் தீவிரமடைந்ததுபோலவும் இப்போது புதிதாகப் புறப்பட்டிருக்கும் ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ மூன்றாம் அலைக்குக் காரணம் ஆகலாம்” என்று அறிவித்திருக்கிறார் குலேரியா.

டெல்டா பிளஸ் வைரஸ்

இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா வைரஸின் மரபணு வரிசையில் ‘K417N’ எனும் புதிய திரிபு (Mutation) ஏற்பட்டுள்ளது. இந்த வேற்றுருவத்துக்கு ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ (B.1.617.2.1 அல்லது AY.1) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூட்டுக்குள் சாவி நுழைவதுபோல இந்த வைரஸ் நம் உடல் செல்களுக்குள் ‘ஏசிஇ2’ புரத ஏற்பிகளுடன் இணைந்து நுழையும் கூர்ப்புரதங்களில் (Spike proteins) இந்த மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் மூலம் செல்களில் கூர்ப்புரதப் பிணைப்புகள் வலுவடைந்து, டெல்டா வைரஸைவிட அதிவேகமாகப் பரவும் தன்மையைப் பெற்று விடுகிறது. மேலும், கொரோனாவை ஆரம்பத்திலேயே முறியடிக்கும் ‘ஒற்றைப்படியாக்க எதிரணு மருந்துகள்’ (Monoclonal antibodies) மற்றும் தடுப்பூசிகளிடமிருந்தும் கூடத் தப்பித்துவிடும் அளவுக்கு வீரியமிக்கதாகக் கருதப்படுகிறது. அதனால், ‘விஓசி’ (Variant of concern) எனும் கவலை தரும் பிரிவுப் பட்டியலில் ஒன்றிய அரசு இதைச் சேர்த்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது என்று வல்லுநர்கள் கூறியிருக்கும் நிலையில், தற்போது ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ குறித்த கவலை தரும் கணிப்புகளுக்கும் நாம் தயாராக வேண்டியதுள்ளது.

உலகில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யா, சீனா, நேபாளம், போலந்து, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ ஏற்கெனவே தொற்றியுள்ளது. இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு இந்தத் தொற்று உறுதியாகியுள்ளது. மஹாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கர்நாடகம், கேரளத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இந்தத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த எண்ணிக்கை மிகக் குறைவாகத் தெரிந்தாலும் இன்னும் அதிகமாகவே காணப்படலாம் என்றும், மரபணு வரிசைக்கான ஆய்வுகளை அதிகப்படுத்தினால் மட்டுமே உண்மையான தரவுகள் தெரியவரும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் டிசம்பரில் ‘டெல்டா வைரஸ்’ இதேபோல் குறைவாகத்தான் பரவியிருந்தது. ஏப்ரலில் தமிழ்நாடு உட்பட பத்து மாநிலங்களில் அது தீவிரமாகி, உயிரிழப்புகள் புதிய உச்சம் தொட்டதை இங்கு நினைவுகூரலாம்.

மக்கள் கற்க வேண்டிய பாடம்

டிசம்பரில், பிரிட்டனில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டதும், மக்கள் முகக்கவசம் அணிவது, கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்ட தற்காப்புகளை அலட்சியப்படுத்தியதால்தான், ‘ஆல்பா வைரஸ்’ என்றுமில்லாத வேகத்தில் பரவியது. அதேபோல், இந்தியாவில் முதல் அலை முடிவதற்கு முன்னரே மக்கள் அவசரப்பட்டு கொரோனாவுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைக் கைவிட்ட காரணத்தால்தான் ஏப்ரலில் ‘டெல்டா வைரஸ்’ புது வேகம் எடுத்து இரண்டாம் அலை பாதிப்புகளைத் தீவிரப்படுத்தியது.

தமிழ்நாட்டில் தளர்வுகள் தாராளமாக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில், இந்த இரண்டு நிகழ்வுகளிலிருந்தும் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். துறைசார் வல்லுநர்களின் கணிப்பின்படி, ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ மூன்றாம் அலை வழியாக அடுத்த தாக்குதலை நடத்தலாம் என்றாலும், அதன் ஆபத்துகள் அதிகமாவதும் அடங்குவதும் மக்களின் கைகளில்தான் உள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுப்பரவல் முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். இன்னமும் சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் முகக்கவசம் அணிவதில் பெரும் அலட்சியம் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும். ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும்கூட முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதும் தனிமனித இடைவெளி காக்கப்பட வேண்டியதும் மிக அவசியம். பொதுப் போக்குவரத்து வசதிகளிலும் தொழில் நிறுவனங்களிலும் கொரோனாவுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வேண்டியது முக்கியம்.

தேவை ஆய்வு மையம்

கோவிஷீல்டு, கோவேக்சின் உட்பட கொரோனா தடுப்பூசிகள் எல்லாமே முதன்முதலில் சீனாவிலிருந்து பரவிய ‘நாவல் கொரோனா வைரஸின் மரபணு வரிசையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடுத்தடுத்து புதிய வேற்றுருவங்களை அது உருவாக்கிவருவதால், இந்தத் தடுப்பூசிகளை எதிர்ப்பதற்கும் புதிய வைரஸ்கள் பழகிவிடலாம்; பயனாளிக்கு கொரோனா தொற்றால் கிடைக்கும் இயற்கைத் தடுப்பாற்றலிலிருந்து தப்பிக்கவும் அவை வழி தேடிக்கொள்ளலாம். ஆகவே, ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ பரவத் தொடங்கி, இப்போதுள்ள தடுப்பூசிகளைச் செயலிழக்கச் செய்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்திவிட வேண்டியது அவசியம். இரண்டாம் அலை இறங்கிவரும் இந்த நேரத்தில், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முடியும். தவறினால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ தாக்க வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா உலகின் முதல் பெருந்தொற்றுமல்ல; இதுவே கடைசித் தொற்றுமல்ல! ஆண்டுதோறும் உருமாறி வரும் ‘‘ஃபுளூ வைரஸ்’’ போன்று புதிய உருவங்களுடன் உலகில் அது இருக்கத்தான் போகிறது’ என்பது கொரோனா குறித்த அடுத்த கணிப்பு. அதனால், எந்த வகை வைரஸ், யாரை, எப்படித் தாக்கப்போகிறது, உள்நாடா, வெளிநாடா, தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தாக்குமா, மறுதொற்று ஏற்படுமா, மருத்துவக் கட்டமைப்பு போதுமா, யாருக்கு அதிக உயிரிழப்பு போன்ற தரவுகளை முன்னரே தெரிந்துகொண்டால் எந்தப் பெருந்தொற்றையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். அதற்கு, தொற்றுள்ள சளி மாதிரிகளில் மரபணு வரிசையை அடையாளம் காண்பது அவசியம்.

தமிழ்நாட்டில் இதற்கெனத் தனி ஆய்வு மையம் இல்லை. புனேயில் இருப்பதைப் போல் ‘மரபணு வரிசை ஆய்வு மையத்தைத் (Genome sequencing center) தமிழ்நாட்டிலும் அமைக்க வேண்டும். அப்படி அமைப்பதன் மூலம், புதிய தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் துடிப்புடன் செயல்படுத்த முடியும். பெருந்தொற்றின் தீவிரத்தன்மையை உடனடியாகக் கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்க முடியும். சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை மேம்படுத்த முடியும். அடுத்தடுத்த அலைகளைத் தடுக்க முடியும்.


Add new comment

Or log in with...