மண்ணின் அடையாளக் கலைஞன்: நாதஸ்வர இளவரசன் பஞ்சமூர்த்தி குமரன்

கலையும் வாழ்வும் பின்னிப் பிணைந்த ஒரு மனிதனின் வாழ்வு எப்போதும் வரப்பிரசானமானது எனலாம். அந்தக் கலை எல்லோருக்குள்ளும் ஊற்றெடுத்தாலும் ஒரு சிலர் மூலம் அது பிராந்தியங்களைக் கடந்தும் உலகத்தையே பார்வையிடச் செய்துவிடும். இந்தப் பொதுத்தளத்தில் மேற்குறித்தது போல கலை மூலம் தன்னை உலகமே வியந்து பார்க்குமளவிற்குத் தன் துறை சார்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் தான் நாதஸ்வர இளவரசன் பஞ்சமூர்த்தி குமரன். கலை மலிந்த கோண்டாவில் மண்ணைச் சேர்ந்த குமரன்  ஒரு கலைப்பாரம்பரியம் மிக்க குடும்பத்தின் சொத்து என்லாம். ஈழ மண்ணில் நாதஸ்வர கலை வரலாற்றில் ஒரு காலத்தில் நாதஸ்வர இசைமூலம் உலகையே வலம் வந்த நாதஸ்வர சகோதரர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் மூத்த கலைப் பொக்கிஷம் பஞ்சமூர்த்தியின் இளைய புத்திரரான குமரன் சிறுவயது முதலேயே கலைஞானம் இயல்பாக கைவரப் பெற்றவர். தன் தந்தை வழியாக நாதஸ்வரத்தையும், கர்நாடக சங்கீதத்தையும் சிறுவயது முதலேயே கற்றுக்கொண்ட இவர் நாதஸ்வரத்துடன் இணைந்து பல ஆசிரியர்கள் ஊடாக கற்றுக் கொண்ட சங்கீதத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்து சிறுவயதிலேயே தன் தந்தையோடு இணைந்து ஆலயங்கள், கச்சேரிகள் என்பவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

பதின்ம வயதுகளில் இன்னும் இன்னுமாய் நாதஸ்வரத்தில் கோலோச்சத் தொடங்கிய குமரனின் நாதஸ்வர சத்தம் ஒரு வித்தியாசமான இனிமையாக இருப்பதை மக்கள் உணரத் தலைப்பட்டனர். இந்த அற்புதமான ஓட்டத்தில் பதின்ம வயதுகளில் புலம் பெயர் நாடுகளிற்குத் தன் தந்தையோடு கச்சேரிகளிற்கு செல்ல ஆரம்பித்தார். இந்த காலப்பகுதியில் எதிர்காலத்தில் மிகப் பிரபல்யமான நாதஸ்வர வித்துவானாக மிளிரக்கூடியவர் என்கின்ற நம்பிக்கையையும் கூடவே விதைத்துக் கொண்டிருந்தார்.

குமரன் இன்று உலகத் தமிழினமே கொண்டாடுகின்ற ஒரு மாபெரும் கலைஞனாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றார். சிறப்பாக குமரனின் நயன மீட்டுகை மிக அற்புதமாக இருக்கும். அதிலும் அவர் வாசிக்கின்ற பாடல்களாகட்டும், கீர்த்தனைகளாகட்டும் அனைத்துமே சங்கதிகலோடு குமரனின் நாதஸ்வரத்தினூடாக கேட்கும் போது வேறு ஒரு மன உணர்வைத் தர வல்லது. அதற்குப் பிரதான காரணங்களாக இருப்பதில் மிக முக்கியமானது குமரன் மிகச்சிறந்ததொரு தரமான பாடகன் என்பதே, கர்நாடக சங்கீத அறிவும், ஸ்வரங்களை புதிய பாணியில் மிக வேகமாக பாடக்கூடிய திறனும், மெட்டுக்கலை இராகங்களில் அடிப்படியில் வரிகளிற்கு ஏற்ப உருவாக்குகின்ற தனித் திறன்கள் இவருக்கு நாதஸ்வரத்தில் மிகப் பெரிய பலம் சேர்க்கின்றவை ஆகும்.

ஒரு ஜனரஞ்சக தன்மை அடிப்படையில் 2012ஆம் ஆண்டில் வீரசிங்கம் மண்டபத்தில் தாயக இசையமைபாளர் இசைப்பிரியன் உள்ளிட்ட பல முன்னணிக் கலைஞர்களோடு இணைந்து இவர் ஆற்றிய நாத சங்கம நிகழ்வு அன்றைய நாளில் வட பகுதி மக்களிடையே பெரு வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின் அந்த நிகழ்ச்சி தந்த ஊக்கத்தின் விளைவாக 2014 இல் குமரன் தனக்கான 'நாதசங்கம' நிகழ்வு அணியொன்றை உருவாக்கி புதிய பாதையில் நாதஸ்வரத்தை இரசிக்கக் கூடிய ஒரு பாணியை உருவாக்கினார்.

தாயகத்தின் முன்னணிக் கலைஞர்களோடிணைந்து ஆற்றுகையால் தொடங்கிய இந்த 'நாத சங்கம' நிகழ்வு மக்கள் மத்தியில் பெருத்த விருப்பை பெற்று சமூக ஊடகங்கள் வாயிலாக உலக ரசிகர்களின் பார்வை இந்த நிகழ்வின் மீது மெல்ல மெல்ல விழ ஆரம்பித்தது. 2014இல் நிகழ்வொன்றில் குமரன் வாசித்த 'கூட மேல கூட வச்சு' என்ற பாடல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பல மில்லியன் பார்வையாளர்களை பார்க்கவைத்து இசையமைப்பாளர் குமரன் வரை வாழ்த்துக்களை தெரிவிக்க வைத்து 'நாதசங்கம' குழு நேரமின்றி பயணிக்க வேண்டிய சூழலை இற்றைவரை தந்து கொண்டிருக்கிறது. லண்டன், இந்தியா போன்ற நாடுகளிற்கும் இவர் தலைமையிலான அணி சென்றும் வந்தது.

நாதஸ்வர கலைஞனாய் புலம் பெயர் நாடுகள் அனைத்திற்கும் சென்று தன் நாத இசை கொண்டு ஒரு புறம் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இவர் மறுபுறம் தன் அழகிய குரல் மூலம் பல பாடல்கள் வாயிலாகவும் இன்றும் பல பாடல்களை தந்து கொண்டிருக்கிறார். திரைப்பட பின்னணிப் பாடகர் ஹரிஹரனின் தீவிர ரசிகனான குமரன்  அவருடைய சாயலிலேயே ஸ்வரங்களை இழுத்துப் பாடக்கூடிய வல்லமை கொண்டவர். பக்தி பாசுரங்கள் பலவற்றை தன் அழகிய குரல்களால் பாடி அந்தப் பாடல்கள் பலவற்றைக் காலம் கடந்தும் முணுமுணுக்கும் படியாக பாடிப் பிரபலப்படுத்தியவர் இவர் ஆவார். குறிப்பாக செல்வச் சந்நிதி மீது பாடப்பட்ட 'ஆற்றங்கரை வேலனுக்கு அரோகரா' குமரனுக்கும் அவரோடு இணைந்து பல கலைஞர்களிற்கும் நல்வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

குமரனைப் பொறுத்த வரையில் வளர்ந்து வருபவர்களை எத்துறை சாரினும் தட்டிக் கொடுக்கின்ற பங்கும், அனைவரோடும் சகஜமாக பழகுகின்ற தன்மையிம் எல்லோராலும் வியந்து பாராட்டப்படுகின்ற ஒன்றாக இருக்கின்றது. மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  ஐந்தாண்டுகளிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடாத்திய இசை நிகழ்வில் கங்கை அமரன் இசைக்குழுவின் இசையில் அரங்கில் இவர் மீட்டிய 'ராசாத்தி உன்னக் காணாத நெஞ்சு' பாடல் அரங்கில் இருந்த எஸ்.பி.பி, கங்கை அமரன் ஆகியோர்களின் ரசனை அந்நிகழ்வைப் பார்த்த அனைவராலும் பெருமையோடு உணர்வு பூர்வமாகப் பார்க்கப்பட்டது. தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் குமரனின் மிகுந்த தீவிர ரசிகரும் கூட.

இப்படி பல்திறன் கொண்ட ஒரு பாரம்பரியத்தின் இசை ஆளுமையாக தன்னை வளர்த்துக் கொண்டு இன்று ஈழத்து நாதஸ்வர இசையை உலகளாவிய ரீதியில் ரசிக்கும் படியாக பல திறன்களைக் காட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவராக மிளிரும் பஞ்சமூர்த்தி குமரன் இன்னும் இன்னும் இத்துறை சார்ந்து மிலிர்வார் என்பது  மறுக்கவியலா உண்மையாகும்.

வெற்றி துஷ்யந்தன்


Add new comment

Or log in with...