இலக்கியங்களில் பெண்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்களா? | தினகரன்

இலக்கியங்களில் பெண்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்களா?

சிலப்பதிகாரத்தின் தலைவன், தலைவி கண்ணகியாவாள். அவள் கற்பின் திறம் உலகம் அறிந்தது. கோவலனின் மனைவியான கண்ணகி அவளது சிறந்த ஒழுக்கத்தினாலும் மற்றும் கற்பின் இலக்கணமாகவும் பத்தினி பெண்களின் அடையாளமாக திகழ்ந்தவர்.இங்கே கண்ணகியின் பெருமையை அல்ல, எந்த தவறு செய்தாலும் மீண்டும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை. இது உங்களால் மறுக்கமுடியுமா? நீண்டநாட்களாகவே எனக்குள் நம் இலக்கியங்களில் பெண்கள் பெருமைப்படுத்தப்படுகிறார்களா இல்லை அவளை கதாநாயகர்களின் சிறப்பிற்காக போலியாக போற்றப்படுகின்றார்களா என்ற சந்தேகம் உண்டு.

ஒரு பெண்ணின் தைரியம், ஆற்றல், ஆளுமை மற்றும் திறன் ஆகிய மொத்த பண்பிற்கும் அடையாளமாக வாழ்ந்தவள்  கண்ணகி. தனது காதல் கணவன் திருட்டுப் பழிபெற்று செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதால் மதுரை முற்றாக எரித்தவள் கண்ணகி.

திருமணத்தின் பின்னர் ஒருநாள் பூம்புகாரில் நடனமாதான மாதவி என்பவளை சந்தித்து காதல் கொண்டு ஒரே வீட்டில் இணைந்து வாழ ஆரம்பித்தனர். இந்தச்சமயத்தில் தான் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வந்து மாதவியுடன் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தான். கண்ணகியோ தனது கணவன் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன்  கணவன் இருப்பதனை நினைத்து மிகுந்த வருத்தத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிறாள். ஆனாலும் தனது கணவன் பிரிந்து சென்றதும் அவனை பற்றி தப்பாக நினைக்காமல், யாரை பற்றியும் பழிகூற நினைக்காமல் எப்படி கோவலனுடன் நாம் ஒன்று சேர்வது என்று மட்டுமே கண்ணகி சிந்திக்களானால். அவன் ஒருநாள் மாதவியை விட்டு திரும்பிவருகின்றான். திருந்திவரும் அவனை அப்படியே ஏற்கிறாள் கண்ணகி. அதனால் அவள் மாதர்களில் புனிதமானவள்.

இதனையே அவள் ஏற்காதபட்சத்தில் கண்ணகி கடவுளாக அல்ல சகமனிசியாக கூட மதித்திருக்காது இந்த உலகம். இதே தவறை கண்ணகி செய்து மீண்டிருந்தால் அவளை கோவலன் ஏற்றிருப்பானா?  தானகவிரும்பி ஒருவன் தன்மனையாளை பிரிந்து சென்று அவன் மீண்டுவந்ததும் அவனை அவள் ஏற்கிறாள். அவனுக்காக மதுரையை எரிக்கிறாள். அப்படித்தான் பெண்மனம். ஆனால் கடந்த எனது கட்டுரையில் நாம் சீதையைபற்றி பார்த்தோம். அவளுக்கு நேர்ந்தது என்ன? கடத்தப்பட்டவளை மீட்டு கற்பை நிரூபிக்க சொல்கிறது. இங்கே திருந்திவந்தான் என கோவலனை கொண்டாடுகின்றது. நமது இலக்கியங்களும் பெண்ணுக்கு அப்படியொன்றும் பாராட்டுதரவில்லை. அதன்வழி ஆடவனைதான் பலப்படுத்துகின்றது. சீதைக்கு வைக்கப்பட்ட கற்பு கோவலனுக்கு இல்லை.

மாதவியுடன் ஒரே இல்லத்தில் தங்கி இருந்த கோவலன் மாதவி மீது தீரா மோகத்தில் இருந்தான். இதன் காரணமாக மாதவி எதை கேட்டாலும் தயங்காமல் அனைத்தையும் செய்தான். கோவலன் மாதவியுடன் இருக்கும் போது கோவலனுக்கு தனது சுயஅறிவு மங்கிய நிலையில் இருந்தான் என்றுதான் புலவர் கூறுகின்றார். இது பெண்மீது கொண்ட மோகம். அதற்கு எப்படி மாதவியில் பழிதிருப்புகின்றது இலக்கியம். அவள் அவனை ஏற்றாள். மாதவி கோவலனுடன் வாழ்ந்த காலத்தில் அவள் வேறு எந்த ஆடவனையும் நெருங்கவிடவில்லை. அதற்கான கலாசாரமுறைக்குள் அவள் இருந்தாலும் அவள் அதனை ஏற்கவில்லை. உண்மையாய் இருந்தாள்.

ஆனால் கோவலன் அவள் இன்னுமொரு ஆடவனை நேசிப்பதாக நினைத்தே அவளை விலகுகின்றான். அப்படியென்றால் தான் மட்டும் மனைவியிருக்க இன்னொரு பெண்ணை தேடிச்சென்று வாழ்ந்து மனையாளின் சொத்துக்களையும் அழித்திருக்கிறான். ஏன் மாதவி அப்படி விரும்பினால் என்ன தவறு. கோவலன் செய்ததைதானே அவளும் செய்கிறாள்.

“அவளுந்தான் போதில் ஆர் திருவினாள் புகழ்உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய
பெருங்குணத்துக் காதலாள்”

இதில் மூன்று செய்திகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன. இங்கு கண்ணகி தெய்வத்தோடு உவமிக்கப்படுகின்றாள். இவள் கற்பின் திறம்,நற்குணங்கள் இந்த மூன்றுமே கண்ணகியின் குணச் சித்திரங்கள் என்று கூறலாம். மாதர் வணங்கக்கூடிய தெய்வப்பெண்ணாக வர்ணிக்கப்படும் கண்ணகி அதற்கு காரணம் அவள் கணவனை மீள ஏற்றபதனால் என்பது தான் வேதனையானது.

கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கி புகழும் வேளையில் கண்ணகி பெண் அடிமைத்தனத்தின் ஒட்டுமொத்த உருவமாய் இருப்பதை மறந்து விடுகின்றோம். பெண்ணியப்பார்வை வளர்ந்து விட்ட இக்காலத்தில் கண்ணகியைப் பற்றிய ஒரு மறு பார்வையும் அவசியமானதுதான்.  கண்ணகி பெருவணிகனின் மகள் . அவளால் நினைத்தபடி வாழ முடியும். இப்படிதான்; இதுதான் கற்பு என திணித்திருக்கிறோம். அவள் விரும்பியதை செய்ய முடியாத மாயசூழலுக்குள் பெண்ணை தள்ளுகின்றோம். இந்த உலகம் எப்போதும் அவளை அவளாகவே வாழவிடுவதில்லை.

பவதாரணி ராஜசிங்கம்


Add new comment

Or log in with...