போதைப் பாவனையற்ற சொர்க்கபுரித் தீவாக இலங்கையை மாற்றுவோம்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ஆம் திகதி போதைப்பொருள்துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதகடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. இவ்வாண்டு இத்தினத்தின் தொனிப்பொருள் 'போதைப்பொருள் தொடர்பான உண்மைகளை பகிர்வோம், உயிர் காப்போம்' என்பதாகும்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வுப் பிரிவின் தரவுகளின்படி (இலங்கையின் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் கையேடு 2020) 2019ம் ஆண்டில் பதினான்கு வயதிற்கு மேற்பட்டவர்கள் மத்தியில் அதிக பாவனை கொண்ட போதைப்பொருளாக கஞ்சா இருந்துள்ளது.

அதே ஆண்டில் அதிக போதைப்பொருள் தொடர்பான கைதுகளாக கஞ்சா தொடர்பான கைதுகள் இருந்தன. மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைவஸ்து தொடர்பான கைதுகளில் மொத்தம் 46 வீதம் கஞ்சா தொடர்பானதாகவும் இருந்தது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘போதையற்ற நாடு, சௌபாக்கியமான தேசம்’ என்ற மகுடத்திற்கு ஏற்ப நாட்டை கட்டியெழுப்ப பங்களிப்பு செய்கின்றது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையானது 1984ம் ஆண்டு 11ம் இலக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் நாட்டை விட்டும் போதையை ஒழித்துக் கட்டுவதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது பல்வேறுபட்ட பிரிவுகளைக் கொண்டது. அவை சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவு, தனியார் சிகிச்சை நிலையங்கள் தொடர்பான பிரிவு, வெளிக்களப் பிரிவு, முற்தடுப்பு கல்வி மற்றும் பயிற்சிப் பிரிவு, போதைப் பொருள் உற்பத்தியில் பயன்படும் இரசாயனங்களைக் கட்டுப்படுத்தும் அதிகார சபை, போதைப் பொருள் பரிசோதனை கூடம், ஆய்வுப் பிரிவு மற்றும் 1927 இலக்கம் மூலம் தொடர்பு கொள்ளக் கூடிய தகவல் பிரிவு என்பனவாகும்.

கொவிட் 19 காலப் பகுதியில் சட்டவிரோத போதைப் பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான உளவளத்துணை சேவைகளுக்காக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை 1927 என்ற இலக்கத்தை 2020ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இது மூன்று மொழிகளிலும் செயற்படக் கூடிய தொடரான உளவளத்துணை சேவையை பெற்றுக் கொள்ளக் கூடிய சேவையாகும். மேலும் கண்டி, நிட்டம்புவ, தலங்கம மற்றும் காலி போன்ற இடங்களில் அமைந்துள்ள சிகிச்சை நிலையங்கள் தொடர்பான விபரங்களையும் இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த சிகிச்சை நிலையங்கள் சுயவிருப்பின் பேரில் வருபவர்களுக்கும் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், நீதிமன்றம் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் இணைப்புச் செய்யப்படும் சேவைநாடிகளுக்கும் இலவச சிகிச்சையை வழங்குகின்றது. மேலும் இங்கு சேவைநாடிகள் சிகிச்சை பெற்று சிறந்த முறையில் சமூகமயப்படுத்தப்பட்டவர்களாக இணைப்புச் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சேவைநாடிகள் திறமை வாய்ந்த தகுதியான உளவளத்துணை உதவியாளர்கள் மற்றும் உளவளத்துணை உத்தியோகத்தர்களினால் விஞ்ஞான அடிப்படையில் சிகிச்சையளிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வளித்து நாட்டுக்கு பிரயோசனமானவர்களாக அவர்களை மாற்றுவதே தேசிய அபாகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் நோக்கமாகும்.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையானது சேவைநாடிகளுக்கு குழு உளவளத் துணை மூலம் ஆளுமை விருத்தியை செய்வதோடு, அவர்களது உளநலம் தொடர்பாகவும் கவனம் செலுத்துகின்றது. வெற்றிகரமான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு செயற்பாட்டிற்கு பின்னர் அவர்கள் மதிப்பீட்டிற்காக உளநல மருத்துவருக்கு இணைப்புச் செய்யப்படுகின்றனர்.

சமூகமயப்படுத்தப்பட்ட பின்னரும் அவர்கள் சிறந்த பின்னூட்டலுக்காக தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிக்களப் பிரிவு இது தொடர்பாக சிறந்த சேவை ஒன்றை வழங்கி வருவதோடு சபையின் சேவைகளை மாகாண ரீதியிலும் வழங்கி வருகின்றது. வெளிக்களப் பிரிவு பாதிக்கப்பட்ட சேவைநாடிகள் போன்றே அவர்களது குடும்பத்தினர் மற்றும் போதைப் பயன்பாட்டின் அவதான விளிம்பில் இருக்கக் கூடியவர்களுக்கும் தனது சேவையை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சமுதாயத்தை அடிப்படையாக கொண்டு செயற்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் வழங்கி வருகின்றது.

வெளிக்களப் பிரிவிற்கு மேலதிகமாக சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பிரிவு மற்றும் ஏனைய தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பிரிவுகள் சேர்ந்து நாம் வாழும் இந்த நாட்டை விட்டும் போதையை ஒழித்து இச்சிறிய தீவை வாழக் கூடிய சொர்க்கபுரியாக மாற்ற முயற்சி செய்து வருகின்றது.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...