மக்களை கொடிய வியாதிகளுக்குள் வீழ்த்தும் இரசாயன பசளை பாவனை!

இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள நாடான போதிலும், விவசாயத்திற்கு ஏற்ற சீதோஷண மற்றும் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆரம்ப காலம் முதல் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நாடாக இந்நாடு விளங்குகின்றது. நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்நாட்டின் விவசாயத் துறையானது தனித்துவம் மிக்க நீர்ப்பாசன, விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

இந்நிலையில்தான் 'கிராமமும் வழிபாட்டிடமும், குளமும் வழிபாட்டிடமும்' என்ற சொற்றொடர் கூட உருவாகியுள்ளது. அதாவது பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவதொரு வழிபாட்டிடம் அமைவுற்று இருப்பது போன்று, குளங்களும் வழிபாட்டிடங்களும் காணப்படுகின்றன. இது விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள நாடுகள் மத்தியில் ஒரு விஷேட அம்சமாகும்.

அதேநேரம் உலகிலேயே சிறந்த முன்னேறிய நீர்ப்பாசனக் கலாசாரத்துக்கு உரிமை கொண்ட நாடாகவும் விளங்கியுள்ளது இந்நாடு. ஒரு காலத்தில் தானியக் களஞ்சியமாகத் திகழ்ந்துள்ள இந்நாட்டிலிருந்து அரிசி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக வரலாற்று தகவல்கள் உள்ளன. அந்நிய ஆக்கிரமிப்புகள் குறிப்பாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் விளைவாக இந்நாடு தனக்கே உரித்தான விவசாயப் பாரம்பரியத்தை இழந்ததோடு, சுதந்திரத்தின் பின்னர் அரிசி உள்ளிட்ட உணவு உற்பத்திப் பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாகவும், அரிசியில் தன்னிறைவு அடைந்த நாடாகவும் விளங்கிய காலப் பகுதியில் இரசாயனப் பசளை மற்றும் கிருமிநாசினிப் பாவனை இங்கு காணப்படவில்லை. அவற்றின் மூலம் விவசாயத்தில் உயரிய அடைவை இந்நாடு பெற்றுக் கொள்ளவுமில்லை. முற்றிலும் இயற்கை பசளையைப் பயன்படுத்தியே அந்த அடைவை எமது முன்னோர் அடைந்துள்ளனர்.

அப்படியென்றால் இந்த மண்ணில் மீண்டும் அவ்வாறான உற்பத்தி பாரம்பரியத்தை ஏன் கட்டியெழுப்ப முடியாதுள்ளது என்று சிந்திப்பவர்களும் வினவுபவர்களும் நிறையவே இருக்கின்றனர். அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படவே செய்கின்றன. ஆனால் இரசாயனப் பசளை மற்றும் கிருமிநாசினி உற்பத்தி விற்பனை நிறுவனங்கள் அதிக செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால் அம்முயற்சிகளும் அவ்வப்போது பலவீனப்படுத்தப்பட்டு போய் விடுகின்றன. இதுதான் இது கடந்த 60 - 70 வருடங்களாக இடம்பெற்று வருகின்றது.

இதன் விளைவாக தென்னாசியப் பிராந்தியத்தில் ‘அதிக இரசாயனப் பசளையைப் பயன்படுத்தும் நாடு’ என்ற பெயரை இந்நாடு பெற்றுள்ளது. இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 28,116 சதுர கிலோமீற்றர் விவசாய நிலமாகக் காணப்படுகின்றது. இந்நாட்டு சனத்தொகையில் 27.1 வீதமானோர் விவசாய உற்பத்தி துறையில் ஈடுபடக் கூடியவர்களாக உள்ளனர். இத்துறை மூலம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு 7.4 வீத பங்களிப்பு நல்கப்படுகின்றது.

விவசாய அமைச்சின் தகவலின்படி, 2020 இல் 1.3 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல்லும், 97,120 ஹெக்டேயரில் உப உணவுப் பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்பயிர்ச்செய்கைகளின் பாவனைக்காக வருடாந்தம் 1,26,005.3 மெற்றிக் தொன் இரசாயனப் பசளை இறக்குமதி செய்யப்படுவதாக தேசிய பசளை செயலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3,83,000 மெற்றிக் தொன் நெல்லுக்கும், 8,77,053.5 மெற்றிக் தொன் ஏனைய உப உணவுப் பயிர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வகையில் இந்நாட்டில் ஒரு ஹெக்டேயருக்கு 300 கிலோ கிராம் இரசாயனப் பசளை வருடமொன்றுக்குப் பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய நாடுகளான அவுஸ்திரேலியா 68.1 கிலோ கிராம், இஸ்ரேல் 280.7 கிலோ கிராம், இந்தியா 165.8 கிலோ கிராம், பாகிஸ்தான் 144.3 கிலோ கிராம், பூட்டான் 13.3 கிலோ கிராம், பங்களாதேசம் 289.4 கிலோ கிராம் என்றபடி தான் ஹெக்டேயரொன்றுக்கு இரசாயனப் பசளையைப் பயன்படுத்துகின்றன. இத்தரவுகள் தெற்காசியாவில் அதிகளவில் இரசாயனப் பசளையைப் பயன்படுத்தும் நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரத்தின் பின்னர் இரசாயனப் பசளை, கிருமிநாசினி, களைகொல்லி என்றபடி இரசாயனப் பாவனைகள் கட்டங் கட்டமாக அதிகரித்து வரத் தொடங்கியது. இதற்கு விவசாயிகள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஊக்குவிப்புகள் முக்கிய காரணமாக அமைந்தன. அதன் காரணத்தினால் கடந்த நான்கைந்து தசாப்தங்கள் இவற்றை அதிகளவில் பயன்படுத்தும் நிலைமை உருவானது.

அதன் விளைவுகளை கடந்த இரண்டொரு தசாப்தங்களாக நாடு எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது. அவற்றில் தொற்றா நோய்களான புற்றுநோய், இதய நோய்கள், சிறுநீரகப் பாதிப்பு என்பவற்றில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நோய் அதிகரிப்பை முன்னொரு போதுமே இந்நாடு கண்டிருக்கவில்லை. இனங்காணப்படாத சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சில பிரதேசங்களில் கடந்த இரண்டொரு தசாப்தங்களாக பெரிதும் அதிகரித்துள்ளது. அவற்றில் அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மொனறாகலை, மாத்தளை, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா ஆகிய 11 மாவட்டங்களும் சுட்டிக் காட்டத்தக்கவையாகும். இச்சிறுநீரகப் பாதிப்பினால் இற்றை வரையும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இப்பாதிப்பு ஆரம்பத்தில் வடமத்திய மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட போதிலும், அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் பதிவாகத் தொடங்கியது. இப்பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ள எல்லா மாவட்டங்களும் இந்நாட்டின் பிரதான விவசாய உற்பத்தி மாவட்டங்கள் ஆகும்.

அம்மாவட்டங்களில் விவசாயச் செய்கைக்கு அளவுக்கு அதிகமாக இரசாயனப் பசளைப் பாவிக்கப்பட்டதன் விளைவாகவே இந்நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இந்நாட்டில் கல்பிட்டியும் ஒரு முக்கிய விவசாய செய்கைப் பிரதேசமாகும். அங்கும் பயிர்ச் செய்கைக்கு அதிக இரசாயனப் பசளை பயன்படுத்தப்படுவதால் நிலக்கீழ் நீர் மாசடைந்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதிகரித்த மற்றும் ஒழுங்குமுறையற்ற இரசாயனப் பசளைப் பயன்பாடே தொற்றாநோய்களின் அதிகரிப்புக்கு காரணம் என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.

இந்த நிலையில் இரசாயனப் பசளைப் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கைப் பசளை பாவனைக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

ஆனாலும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அபேட்சகரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இயற்கை பசளை பாவனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். நச்சுத்தன்மையற்ற உணவு மக்களின் உரிமை என்பது 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவிக்கு வந்தது முதல் இயற்கைப் பசளைப் பாவனையை அடிப்படையாகக் கொண்ட விவசாய செய்கைகயை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வரவு செலவுத் திட்டத்திலும் இது தொடர்பில் விஷேட திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக நாட்டில் இயற்கைப் பசளைப் பாவனையை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அரசங்கம் உறுதியாக உள்ளது.

இதன் நிமித்தம் பலவித நிவாரண திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இரசாயனப் பசளை இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. விவசாயத்துறைக்கு இயற்கைப் பசளை பாவனையை ஊக்குவிக்கவும் அவற்றை உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் என பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஹெக்டேயருக்கு 10 ஆயிரம் ரூபாபடியான ஊக்குவிப்பு கொடுப்பனவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இந்நாட்டு மக்களின் ஆரோக்கியம், எதிர்காலப் பரம்பரையினரின் நல்வாழ்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் வாய்ந்த குடிமக்களை உருவாக்க நச்சுத்தன்மையற்ற உணவு அவசியமானது.

அந்த வகையில் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்திக்கு இயற்கைப் பசளை அளிக்கும் முக்கியத்துவமும் பங்களிப்பும் அளப்பரியன. ஆனால் இது தொடர்பில் போதிய தெளிவு கிடைக்கப் பெறாததன் விளைவாகவே இப்பசளைப் பயன்பாடு தொடர்பில் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இப்பசளையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளும் ஒருவர் இரசாயனப் பசளையைப் பயன்படுத்துவதற்கே அச்சம் கொள்வாரே தவிர, இயற்கைப் பசளை பயன்பாடு தொடர்பில் எவ்வித அச்சத்துக்கும் உள்ளாக மாட்டார்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...