சேதன பசளைகளின் இறக்குமதி தற்காலிக இடைநிறுத்தம்

சேதன பசளைகளின் இறக்குமதி தற்காலிக இடைநிறுத்தம்-Importing Organic Fertilizer Temporarily Suspended-DG Agricultural Department

அமைச்சரவை அனுமதி வழங்கியபோதிலும், நாட்டிற்குள் நுண்ணுயிர்கள் பரவும் அபாயம்

சேதன பசளைகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில், அரசாங்கத்திற்குச் சொந்தமான பசளை இறக்குமதி நிறுவனங்கள் மூலம் 2021/2022 பெரும்போக நெற்செய்கையின் 500,000 ஹெக்டயர்கள் மற்றும் ஏனைய பயிர்கள் 600,000 ஹெக்டயர்களுக்குத் தேவையான பசளை மற்றும் கனிமங்கள் தேவைகளை சர்வதேச போட்டி விலைமனு பொறிமுறையைப் பின்பற்றி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதியளித்தது.

ஆயினும், சேதனப் பசளை இறக்குமதி மூலம் இலங்கைக்கு மாற்றமான நுண்ணுயிர்கள் நாட்டிற்குள் நுழையும் ஆபத்து உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு, தற்போது சேதனப் பசளைகளை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு ஹெக்டயருக்கான (2 1/2 ஏக்கர்) சேதனப் பசளையை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 10,000 பணத்தை செலுத்த தீர்மானித்துள்ளதாக, விவசாய அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...