வருடாந்தம் 07 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைக்க திட்டம் | தினகரன்

வருடாந்தம் 07 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைக்க திட்டம்

ரூ.10 மில். வருமானம் கிடைக்குமென நம்பிக்கை

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கொரோனா வைரஸ் சூழ்நிலையால் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் கட்டியெழுப்பப் படும் என்றும் வருடாந்தம் நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கையை 07 மில்லியனாக அதிகரிக்கச் செய்து அதன்மூலம் 10 பில்லியன் ரூபாவை தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் யோசனைகளை முன்வைக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மாவட்ட இணைப்புக் குழுவின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீழ்ச்சிடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் மாவட்ட மட்டத்தில் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக தெரிவித்துள்ள அமைச்சர், அதன் மூலம் தற்போது மாவட்ட ரீதியிலுள்ள சுற்றுலா வலயங்களை அபிவிருத்தி செய்யவும் புதிய உல்லாசப் பிரயாண பிரதேசங்களை இனங்கண்டு அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமளிக்கவும் அவர் விசேட வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

சர்வதேச நாடுகளில் தடுப்பூசி திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நாடுகளில் சுற்றுலாத் துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளதால் இலங்கையிலும் சுற்றுலாத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கு முன்னோடி நடவடிக்கையாக சுற்றுலா வலயங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...