கைதிகளின் பெற்றோர், உறவுகள் நாமலுக்கு நன்றி தெரிவிப்பு

பொறுப்பான அரசியற் செயற்பாடு என பாராட்டு

இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியிட்ட விசேட அறிவித்தல் தமக்கு மகிழ்ச்சியளிக்கிறதென தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த போராட்டத்தின் பெயரில் நீண்ட காலமாக சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இனிமேலும் விளக்கமறியல் கைதிகள், தண்டனைக்கைதிகள், மேல் முறையீட்டு கைதிகள் என வகைபிரித்து பார்க்காமல் புனர்வாழ்வளித்தல் போன்ற     ஏதேனும் ஒரு பொதுப் பொறிமுறையினூடாக அனைவருக்கும் விடுதலையை பெற்றுக்கொடுப்பதே தர்மம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எமது உறவுகள், தண்டனைக்கும் அதிகமான காலத்தை சிறையில் கழித்த பின்பும் அவர்களை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது முறையல்ல என்பதையும் சந்தர்ப்பச் சூழ்நிலையால் செய்த செயற்பாடுகளுக்காக அவர்களது பாதி வாழ்க்கை வீணடிக்கப்பட்டு விட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு உட்படுத்தியேனும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

வரலாற்றில் முதற்தடவையாக ஆளும் அரசாங்கத்தின் பொறுப்புமிகு அமைச்சர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது எமது உறவுகளின் துரித விடுதலைக்கான நல்லெண்ண சமிக்ஞை என்றே நம்புகிறோம். அது மட்டுமன்றி ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்த் தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் வேண்டுகோளையும் அதற்கு சாதகமாக பதிலளித்த நீதி அமைச்சரின் கருத்தையும் முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கைதிகளின் விடுதலை விவகாரத்தை ஆதரித்திருந்தமை முக்கியமான விடயம். நீண்ட நெடுங்காலம் சிறையில் வாடும் எமது பிள்ளைகளின் உண்மை நிலையை சகோதர சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்திருக்கின்றமையானது எமது உறவுகளின் விடுதலைக்கு தீர்வை தருகின்ற முதற் புள்ளி என்றே கருதுகின்றோம்.

சமூகங்களுக்கிடையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாடுகளுக்கு தீர்வை அடைய, இதை விட பொருத்தமானதொரு நல்லெண்ண செயற்பாட்டை காண முடியாது. எனவே நடப்பு அரசாங்கம் இத்தருணத்தை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் இனச்சமூக முரண்பாடுகளற்ற இலங்கை தேசத்தை சமாதான பூமியாக மாற்றி அனைவரும் இன்புற்று வாழ முடியுமென பொறுப்புடன் நிச்சயப்படுத்துகின்றோம்.

கனிந்துள்ள இந்த பொன்னான தருணத்தின் பொறுப்புணர்ந்து இனம், மதம், மொழி, கட்சி, கொள்கை, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் சிந்தித்து செயலாற்றுமாறு பிள்ளைகளை பிரிந்து வாழும் தாயுள்ளங்களான நாம், பிராத்தனையோடு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றும் தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 


Add new comment

Or log in with...