இலங்கையில் சீன இராணுவமா? தூதரகம் மறுப்பு; டுவிட்டரில் பதிவு | தினகரன்

இலங்கையில் சீன இராணுவமா? தூதரகம் மறுப்பு; டுவிட்டரில் பதிவு

படையினரின் சீருடை போன்று அணிந்திருப்பவர்கள் சீன இராணுவத்தினரல்ல. அந்த நிறத்தில் உடையணிந்திருப்போர் தொழிலாளர்கள் மாத்திரமே எனவும் சீன இராணுவம் இலங்கையில் இல்லையெனவும் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சீன இராணுவம் கால்பதித்து விட்டதா? என்று மக்களைத் தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பதாக உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

திஸ்ஸமஹாராம வாவி அபிவிருத்தி நடவடிக்கைகள் சீன – இலங்கைக் கூட்டு நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இங்கு சீன இராணுவத்தின் சீருடையையொத்த ஆடைகள் அணிந்த சீனப்பிரஜைகள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகளை மேற்கோள்காட்டி, அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது. அத்தகைய ஆடையை அணிந்திருப்பவர்கள் சீன இராணுவத்தினரல்ல. அந்த நிறத்தில் உடையணிந்திருப்போர் தொழிலாளர்கள் மாத்திரமே என்று சீனத் தூதரகம் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை தவறாக வழிநடத்தக் கூடிய இத்தகைய செய்தியை வெளியிடுவதற்குப் பதிலாக உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தொழிலாளர்கள் அணிந்திருக்கும் ஆடை, சீனர்கள் பெரிதும் மதிப்பளிக்கும் இலங்கை இராணுவத்தின் சீருடையிலிருந்து மிகவும் வேறுபட்டதாகுமென்றும் இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் அதன் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...