கொவிட் 19 தடுப்பூசி தொடர்பில் இஸ்லாத்தின் பார்வை | தினகரன்

கொவிட் 19 தடுப்பூசி தொடர்பில் இஸ்லாத்தின் பார்வை

இஸ்லாம் எப்போதும் மனிதனின் வணக்க வழிபாடுகள், சமூக, ஒழுக்க, குடும்ப மற்றும் பொருளாதார வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது. அதேநேரம் இஸ்லாத்தில் இஸ்லாமிய மருத்துவம், நபிவழி மருத்துவம் ஆகியன கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் விவசாயம், பொறியியல், மருத்துவம் போன்றவாறானவற்றை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பன தொடர்பிலான வழிகாட்டல்களை வழங்குவதும் வஹியின் நோக்கமல்ல. அவற்றை மனித அறிவுக்கே அல்லாஹுதஆலா விட்டுள்ளான்.

நான் பூமியிலேயே ஒரு பிரதிநிதியை ஆக்கப் போகின்றேன் என்று கூறிய போது, அதற்கான மனித தகுதி பற்றி குர்ஆன் விளக்குகின்ற போது ஆதமுக்கு நான் அனைத்து வகைப் பெயர்களையும் படித்துக் கொடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல் குர்ஆன் 2-30,31)

இதன்படி பௌதீக உலகம் சார்ந்த அறிவு மனிதனோடு சம்பந்தப்பட்டதாகும். அது வஹியின் ஊடாக அருளப்படுவதில்லை என்ற உண்மையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் நபி (ஸல்) அவர்களும், 'நோயைக் குணப்படுத்துகின்ற வழிவகைகளைத் தேடுங்கள்' என ஏவினார்கள். அவர்கள் ஒரு மருத்துவராக இருக்கவில்லை. ஆனால் நோய் நொடிகளில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு பெற்றுக்கொள்வது குறித்து எடுத்துக்கூறினார்கள். உணவு, சுத்தம், சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல் என்பன தொடர்பில் அறிவுரை வழங்கினார்கள். அத்தோடு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது நபி (ஸல்) அவர்கள் வைத்தியத் துறைக்கான அடிப்படை வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்களே தவிர ஒவ்வொரு நோய்க்கும் எவ்வாறு வைத்தியம் செய்ய வேண்டும் என்று அன்னார் எடுத்துக் கூறவில்லை. மாறாக வைத்தியத்துறை தொடர்பிலான தூண்டுதல்களை மாத்திரமே வழங்கியுள்ளார்கள்.

ஒரு தடவை சஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களை நோய் பார்க்கச் சென்ற நபி (ஸல்) அவர்கள், சஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு நெஞ்சு வலி காணப்படுவது கண்டு, நீங்கள் ஹாரிஸ் இப்னு கலதா என்ற தாயீபைச் சேர்ந்த மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் உங்களுக்கு இதற்கான வைத்தியத்தை அளிப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நோய் பார்க்க வந்த ஒரு அன்ஸாரி தோழர் ஒருவர் காயப்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளிக்க இரண்டு வைத்தியர்கள் வருகை தந்தார்கள். அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் வைத்தியத் துறையில் கூடுதலான தேர்ச்சி பெற்றவர் யார்?' என்று வினவினார்கள்.

அந்த வகையில் இஸ்லாமிய வரலாற்றில் இப்னு சீனா, இப்னுன் நபீஸ், ஷஹ்ராவி, இப்னு ருஸ்த் போன்ற பல்வேறு வைத்தியர்களையும் அவர்கள் எழுதி வைத்த நூல்களையும் ஆய்வுகளையும் எம்மால் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் அவர்கள் எவரும் நபி மருத்துவம் என்று எதனையும் உருவாக்கவில்லை.

ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரியின் மகன் தான் ஹிஸாம் இப்னு உர்வா என்ற தாபிஈ (ரஹ்) ஆவார். அவர் தன்னுடைய தந்தை கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் இவ்வாறு வினவியதாகவும் அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு பதிலளித்துள்ளதாகவும் அறிவித்திருக்கின்றார்.

அதாவது, 'நீங்கள் இறைத்தூதரிடமிருந்து ஸுன்னாவைப் பெற்றீர்கள். கவிதையையும் அரபு மொழியையும் அரபுகளிலிடமிருந்து பெற்றீர்கள். ஆனால் நீங்கள் வைத்தியம் பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறீர்களே. அதனை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்' என்று வினவ, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் , 'நபி(ஸல்) அவர்களுக்கும் நோய்கள் ஏற்படும். அச்சமயங்களில் அவர்களிடம் அரபு வைத்தியர்கள் வருவார்கள். அவர்களிடமிருந்து தான் இவற்றைக் கற்றுக்கொண்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் - முஸ்ததருல் ஹாகீம்)

ஆகவே நபி (ஸல்) அவர்கள் நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளார்கள், நோய்களுக்கு உள்ளானவர்களை சிகிச்சை பெற ஊக்குவித்துள்ளார்கள். தொற்று நோய்களைத் தவிர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்கள். அல்லாஹ்தஆலா உலகில் எந்தவொரு நோயை ஏற்படுத்தி இருந்தாலும் அதற்கான மருந்தையும் அவன் ஏற்படுத்தி இருக்கின்றான் என்றும் 'எல்லா நோய்களுக்கும் மருந்து உள்ளது. அதனைத் தேடிப்பாருங்கள்' என்றும் அன்னார் கூறியுள்ளார்கள். இவ்வாறு வைத்திய துறை தொடர்பில் அன்னார் தூண்டுதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் தற்போது உலகிற்கு பெரும் சவாலாக விளங்கும் கொவிட் 19 தொற்றுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை எடுத்து நோக்கும் போது, இத்தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோய்க்கு எதிராகச் செயற்பட செய்யும் முக்கிய தொழிற்பாட்டையே மேற்கொள்வதாக வைத்தியத்துறை சார்ந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதேநேரம் குறிப்பிட்ட நபரொருவர் குறித்த நோயுடன் போராடுவதோடு தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நோய் பரவாமல் இருப்பதற்கும் இத்தடுப்பூசி காரணமாக அமையும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதனால் மிகப் பயங்கரமான இத்தொற்று நோய் தொடர்பிலான நீண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இத்தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இத்தொற்றின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறலாம் எனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். அத்தோடு சுகாதார, மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் அடங்கலாக எல்லா மக்களும் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதேவேளை நபி (ஸல்) அவர்கள் தமக்கு தீங்கு விளைவித்துக் கொள்ளவும் கூடாது. பிறருக்கும் தீங்கு விளைவிக்கவும் கூடாது. பிறர் தீங்கு விளைவித்தால் அதேபோன்ற தீங்கை தாம் விளைவிக்கவும் கூடாது என்று தௌிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்நோய்த் தொற்றின் அச்சுறுத்தல் மிகவும் தௌிவானது. அதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும். அதேபோன்று அடுத்தவர்களைப் பாதுகாப்பதும் எமது கடமையேயாகும். ஒருவர் தமக்கு கொவிட் 19 தொற்று இருப்பதை அறிந்து அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு பிறருக்கு தொற்றாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளாமல் செயற்படுவது அது ஒரு வகையில் பிறரது மரணத்துக்கு காரணமாக அமையும் குற்றச்செயலாகக் கூட அமையலாம். அதாவது ஒருவரது உயிரிழப்புக்கு காரணமான செயலாக அமைந்துவிடலாம் என்பதை மிகவும் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இஸ்லாத்தின் நிழலில் நோக்கும் போது முஸ்லிம்களும் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது கடமையாகவே அமையும் என்பது தான் எனது கருத்தாகும். இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதானது தமக்கும் பிறருக்கும் செய்யும் நற்காரியமாகவே அமையும். இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இஸ்லாம் ஏற்றுக்கொள்கின்றதும் அங்கீகரிக்கின்றதுமான ஒரு செயற்பாடாகவே இது அமையும்.

உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர்,
பணிப்பாளர்,
மிஷ்காத் ஆய்வு நிறுவனம்


Add new comment

Or log in with...