குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் | தினகரன்

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம்

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம்-Child Care in Islam

மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையே வித்தியாசம் பல உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான வித்தியாசம் வாரிசுகளை வளர்த்தெடுப்பதாகும். மிருகங்கள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்களின் குட்டிகள், குஞ்சுகள் தானாக வளர்கின்றன. ஆனால், மனிதக் குழந்தைகள் அவ்வாறல்ல. குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

மீன் குஞ்சுகளுக்கு நீந்த தாய் கற்றுக்கொடுப்பதில்லை. குஞ்சுகள் தானாகவே நீந்தக் கற்றுவிடுகின்றன. குஞ்சு பறவைக்கு பறக்க தாய் கற்றுக்கொடுப்பதில்லை. அவை தானாகவே பறக்கக் கற்றுவிடுகின்றன. மிருகங்களின் குட்டிகள் நடப்பதற்கும், உண்ணுவதற்கும் தாய் கற்றுக்கொடுப்பதில்லை. அவை தானாகவே நடக்கவும், ஓடவும், உண்ணவும், பருகவும் கற்று கரை சேர்ந்துவிடுகின்றன.

பகுத்தறிவு இல்லாத இவை தமது தேவைகளைத் தாமே நிறைவேற்றுகின்றன. பகுத்தறிவு உள்ள மனிதன் குழந்தையாக இருக்கும்போது தமது தேவைகளை தாமே நிறைவேற்ற முடியாமல் பெற்றோரைச் சார்ந்தே இருக்க வேண்டி இருக்கின்றது. குழந்தைகள் தானாக வளர்வதில்லை. அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

அந்த வளர்ப்பு அழகிய முறையில் அமைவதை அன்னையின் வளர்ப்பிலும், சுற்றுச்சூழலும்தான் தீர்மானிக்கின்றன. மனைவியை மார்க்கப்பற்றுள்ளவராக தேர்ந்தெடுத்தால் குழந்தை வளர்ப்பு சரியாகி விடும். குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை தன்னுள் உணர்ந்து கொண்டு, தமது சிந்தனையில் உள்வாங்கிக் கொண்டு வளர்கிறார்கள்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர், 'இறைவா, எனக்கொரு நற்பாக்கியமுள்ள குழந்தையை நீ வழங்குவாயாக' என்று தான் கேட்க வேண்டும். இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் குழந்தை வரம் வேண்டியதை அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது, 'என் இறைவனே... நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக' என்றார். ஆதலால் மிகப் பொறுமையுடைய (இஸ்மாயீல் எனும்) மகனைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்' (அல் குர்ஆன் 37-100,101)

அதேபோன்று ஸகரிய்யா (அலை) அவர்கள் தனக்கு ஒரு வாரிசு தருமாறு இறைவனிடம் வேண்டியதை அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது, '(அப்போது ஸக்கரிய்யா அவ்விடத்தில் (தனக்காகத் தன் இறைவனிடம் பிரார்த்தித்து 'என் இறைவனே உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக, நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்' என்று கூறினார். (அல் குர்ஆன் 3:38)

இரண்டு பெற்றோரின் அழகான பிரார்த்தனையால் அவ்விருவருக்கும் நற்பாக்கியமுள்ள குழந்தைப் பாக்கியம் கிடைக்கப்பெற்றன. அவ்விரு குழந்தைகளுமே நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுதான் வியக்கத்தக்க விடயமாகும். குழந்தை பாக்கியம் கிடைத்த பிறகு 'இறைவா, எனது குழந்தைகளிடமிருந்து எனக்குக் கண்குளிர்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையைத் தருவாயாக' என பிரார்த்திக்க வேண்டும். இது அழகிய குழந்தை வளர்ப்பின் அடுத்த நிலையாக உள்ளது. இது இறைநம்பிக்கையாளர்களின் வேண்டுதலாகவும் அமைந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயக் கடமை யாதெனில் குழந்தையின் வலது காதில் தொழுகையின் பக்கம் அழைப்பு வாசகங்களை (பாங்கு) கூறவேண்டும். அதன் இடது காதில் தொழுகையை நிலைநிறுத்தும் வாசகங்களை (இகாமத்) கூறவேண்டும். இதுகுறித்து இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள், பிறந்த குழந்தை அது முதன்முதலாக உலகில் கேட்கும் வாசகங்கள் இறை வல்லமையையும், இறைவனின் மகத்துவத்தையும், இறைவன் ஒருவன் எனும் சாட்சியத்தையும், இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே ஆவார்கள் எனும் உறுதிமொழியையும், தொழுகையின் பக்கம் கொடுக்கப்படும் அழைப்பிதழையும், வெற்றி நோக்கி வருவதையும் இவ்வாறாக அமைய வேண்டும். இவ்வாறு கூறப்படும் வாசகங்களை செவிமடுக்கும் சைத்தான் வெருண்டோடுகின்றான். சைத்தானின் அழைப்புக்கு முன்பு இறைவனின் அழைப்பு முந்திவிட வேண்டும். பிறகு, உடனே அர்த்தமுள்ள அழகான பெயரை சூட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் 'மறுமையில் உங்களின் பெயரைக் கொண்டும், உங்களின் தந்தை பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயரினைச் சூட்டுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: அபூதாவூத்)

நல்ல பெயர் வைப்பது குழந்தையின் நன்நடத்தையையும், நல்ல எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. பெயர் என்பது மனிதனுடைய குணநலன்களில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது உளவியல் ரீதியான உண்மையாகும். இந்த உண்மையை அன்றே உலகிற்கு உணர்த்தியவர்தான் நபி (ஸல்) அவர்கள்.

குழந்தை பிறந்த ஏழாவது தினத்தில் ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளையும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆட்டையும் அறுத்து தானும் சாப்பிட்டு, அடுத்தவருக்கும் தானம் செய்ய வேண்டும். இதுவே 'அகீகா' எனப்படுகின்றது. குழந்தை பிறந்த தினத்திலிருந்தே குழந்தைக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள்,'குழந்தைகள் ஏழு வயது எட்டும் வரை அவர்களுடன் விளையாடுங்கள். அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியைக் கொடுங்கள். அடுத்த எழு வயதில் அவர்களுடன் இணக்கமாகி விடுங்கள்' எனக் கூறினார்கள். (நூல்: நஸயீ, அஹ்மது) அதேநேரம் 'உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்தால், தொழும்படி ஏவுங்கள், பத்து வயதை அடைந்தால், தொழுகையை விட்டுவிடுவதின் மீது மிருதுவாக அடியுங்கள், மேலும், குழந்தைகளுக்கிடையில் படுக்கைகளை பிரித்து வையுங்கள்' என நபி (ஸல்) கூறினார்கள்' (ஆதாரம் - அபூதாவூத்)

பொதுவாகக் குழந்தையை அடித்து, நல் அறிவுரை வழங்கி ஏழு வயது முதல் பத்து, பன்னிரெண்டு வயது வரைக்கும் தான் வளர்க்கலாம். பன்னிரெண்டு வயதைக் கடந்ததும் அவர்கள் இளம் பருவத்தை அடையும்போது சுயமுடிவை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்குள் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக சீர்படுத்தி வளர்த்து ஆளாக்கி விட வேண்டும்.

பருவ வயதை அடைந்த குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், உடற்பயிற்சி, கல்வி அறிவியல், மனிதநேயம் போன்ற உன்னதமான அம்சங்கள் உள்ளிட்ட குழந்தை விரும்பும் துறைகளில் அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக வளர்த்து ஆளாக்கி விடுவது பெற்றோரின் தார்மீகக் கடமையாகும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடே கற்றலும், கற்பித்தலும் ஆகும். இவற்றை விட மேலானது நல்லொழுக்கமாகும்.

அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் 'தந்தை தன் தனயனுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் நல்லொழுக்கக் கல்வியை விட வேறு எந்த சிறந்த அன்பளிப்பையும் வழங்கிட முடியாது' என்று கூறினார்கள். (ஆதாரம்- திர்மிதி)

அதேநேரம் 'எவருக்கு குழந்தை பிறக்கிறதோ அவர், அக்குழந்தைக்கு அழகான பெயர் சூட்டி, ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால், அவனுக்கு அவர் திருமணத்தையும் நடத்திவைக்க வேண்டும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் அக்குழந்தை கேட்டில் விழும்போது, அதன் பாவம் குழந்தையின் தந்தையின் மீதும் சரிசமமாக போய் சேரும்' எனவும் நபி (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: பைஹகீ)

அத்தோடு பெற்றோர் இறந்த பிறகும் பெற்றோருக்காக பிரார்த்திக்கக்கூடிய வகையில் அழகான குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். இவ்வாறு வளர்ப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான். ஆகவே இஸ்லாமிய வழிகாட்டல்களின் அடிப்படையில் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம்.

அப்துர் ரஹ்மான்


Add new comment

Or log in with...