உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 60 பேருக்கு வருடாந்த ஒப்பந்தங்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தினைக் கருத்தில் கொண்டு உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் 60 பேருக்கு வருடாந்த ஒப்பந்தங்களை வழங்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபையின் முதலாவது நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு தங்களது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு நிதி ரீதியாக உதவும் நோக்கில் 60 பேருக்கு வருடாந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கு நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது. இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள தகுதியான வீரர்கள் தெரிவுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் கழங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட் முடிவு செய்துள்ளது.

பெரும்பாலான கழகங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் குழுவொன்றின் சிபாரிசுகளுக்கு அமைய நிதி உதவி வழங்கப்படுவதுடன், இந்த நிதி கழகங்களின் கிரிக்கெட் திட்டங்களுக்கும் வீரர்களின் நலன்புரி விடயங்களுக்கும் பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...