மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவூட்டும் 2329வது பொசன் பண்டிகை | தினகரன்

மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவூட்டும் 2329வது பொசன் பண்டிகை

புனித பொசன் நோன்மதி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ் அலைவரிசையான நேத்திரா ரி.வியில் ஒவ்வொரு மாதமும் நோன்மதி தினத்தன்று விசேட பௌத்த கலந்துரையாடல் தமிழ் மொழியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பொசன் நோன்மதி தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகின்றது.

பௌத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தையே பொசன் தினம் குறிக்கிறது. மஹிந்த தேரர் முதன் முதலில் இலங்கைத் தீவில் காலடி வைத்து பௌத்த மத சிந்தனையை சிறப்பாக அறிமுகப்படுத்தினார்.  இத்தினத்தை நினைவு கூர்ந்து பொசன் நோன்மதி தினம் ஒரு தேசிய விழாவாக வருடாந்தம் இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் பௌத்த மக்களால் கொண்டாடப்படுகிறது.

மஹிந்த தேரர் சுமார் 45 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் பௌத்த மதம் நாட்டில் வேரூன்றத் தொடங்கியது. இம்மாதம் 21ம் திகதி தொடக்கம் 28ம்திகதி வரையான காலப் பகுதி பொசன் நோன்மதி வாரக் காலப் பகுதியாகும்.
பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெறுகின்றன. நேற்று 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இந்த வழிபாடுகளும் மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன.

நாட்டில் தற்சமயம் காணப்படும் கொவிட் தொற்று காரணமாக, இம்முறை பொசன் நோன்மதி தினத்தை, அனைத்து பௌத்த மக்களும் வீட்டில் இருந்த வண்ணமே அனுஷ்டிக்கும்படி வேண்டப்படுகின்றனர்.

தமிழ் பேசும் மக்களுக்கு பௌத்த தர்மம் தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கும் நோக்கில்  நேத்திரா ரி.வியில் ஒவ்வொரு மாதமும் நோன்மதி தினத்தில் விசேட கலந்துரையாடல் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக இடம்பெற்று வருகிறது.நோன்மதி தினத்தன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை நேரடி ஒளிபரப்பாக நேத்ரா ரி.வியில் இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது. சில சந்தர்ப்பங்களில் அவை பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகவும் அமைவது குறிப்பிடத்தக்கது.

2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பல்வேறு மத நல்லிணக்க செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதன் பின்னர் மீளவும் பிரதமராக பதவியேற்ற மஹிந்த  ராஜபக்ஷ அவர்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ், புத்த சாசன அமைச்சு வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும்,   பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ,  ஒரு மதம் பற்றி ஏனைய சமூகங்களுக்கு அந்த சமூகங்களின் மொழிகளில் இலகு நடையில் வழங்கும் போது நல்லிணக்கம் ஏற்படுகிறது.மேலும் மதங்கள் பற்றிய பல சந்தேகங்களும் முரண்பாடுகளும் நீங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நோன்மதி தினத்தின் வரலாற்று சிறப்பு, பௌத்த தர்மம், பஞ்சசீலம் தொடர்பான விளக்கம், தியானம் மற்றும் தானங்கள் பற்றிய விளக்கம், புத்த பகவானின் வாழ்க்கைச் சரித்திரம் உட்பட பல விடயங்கள் உள்ளடங்குகின்றன.  இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் பௌத்த பிக்கு மூலம் பௌத்த தர்மம் குறித்த விளக்கம் இலகு தமிழில் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும். 
புத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளரும்,  சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஜெயரஞ்ஜன் யோகராஜ் அமைச்சின் சார்பில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. புத்த பகவானின் போதனைகள் மற்றும் வரலாறு தொடர்பில் சிறந்த விளக்கங்களை முந்தலம,மங்கள எலிய, ஸ்ரீ தேவ்ராம் விகாரையின் பொறுப்பாளர் சங்கைக்குரிய  திருநெல்வேலி போதி தம்ம அரவணடிகள் வழங்குகிறார் என்பது சிறப்பம்சமாகும். இன்றைய தினம் காலை 9 மணி முதல் 10.30 வரை இந்த விசேட உரையாடல் இடம்பெறுகிறது. தமிழ் பேசும் மக்கள் பௌத்த மதம் தொடர்பான விடயங்கள் பலவற்றை அறிந்து கொள்வதற்கு இந்நிகழ்ச்சி உதவுகின்றது. இதேவேளை இம்முறையும் பொசன் நோன்மதி தினம் மற்றும் பொசன் தேசிய வைபவம் மத அனுஷ்டானங்களுக்கும் பிரதிபத்தி பூஜைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, அர்த்தபூர்வமாக கொண்டாடப்படுகிறது.

மிஹிந்தலையில் லேக் ஹவுஸ் ஒளியூட்டு விழா:

இன்று 24ஆம் திகதி காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பல வழிபாட்டு நிகழ்வுகள் மிஹிந்தலையில் இடம்பெறுகின்றன. சம்புத்த பூஜை,அனுபுது மிகிந்து மா ஹிமி பூஜை,ஆலோக பூஜை மற்றும் அனைத்து இரா பிரித் பாராயணம் உட்பட பல மத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதில் புத்தசாசன அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து சிறப்பிக்கின்றார்.

அதேபோன்று லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 'ஆலோக பூஜை'  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது.

தம்மபதம்:

தம்மபதம் என்பது பௌத்த மதப் புனித இலக்கியங்களுள் ஒன்றாகும். கௌதம புத்தர் அருளிய அறவுரைகள் முதலானவை பௌத்தத்தின் திரிபீடகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவை ஆகும். இவற்றுள் சுத்த பிடகத்திலுள்ள ஐந்து பகுதிகளில், குத்தக நிகாயம் என்ற பகுதியில் தம்மபதம் என்ற இந்நூல் அமைந்துள்ளது.

பாளி மொழியில் அமைந்த தம்மபதம் 26 அத்தியாயங்களும் 423 சூத்திரங்களும் கொண்டது. புத்த பெருமான் அவ்வப்போது கூறிய வாக்கியங்களாக அவை அமைகின்றன. இதனால், பௌத்த சமயத்தவரின் பாராயண நூலாகவும், பிரமாண நூலாகவும் இது அமைகின்றது.

தம்மபதம் என்பது அறவழி, அறநெறி, அறக்கொள்கை, அறக்கோட்பாடு எனப் பல பொருள்களில் வழங்கப் பெறுகின்றது. முதலாம் பௌத்த சங்க மாநாட்டில் இந்நூல் அங்கீகரிக்கப்பட்டது என புத்தகோசரால் கூறப்படுகின்றது.

இம்முறை பொசன் தினத்தை வெசாக் போன்று வீட்டில் இருந்த வண்ணமே அர்த்தபூர்வமாக அனுஷ்டிக்கும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மலர் கொண்டு வழிபடும் ஆமிஸ பூஜை, பிரதிபத்தி பூஜை,தியானம்,தானம் உட்பட வழிபாடுகளையும் வீட்டில் இருந்த வண்ணமே மேற்கொள்தற்கு ஏதுவாக அரச மற்றும் தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளும் நிகழ்ச்சிகளை நேரடி அஞ்சல் செய்ய முன்வந்துள்ளன. அதனால், பௌத்த மக்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பினபற்றியே பொசன் நோன்மதியை அனுஷ்டிக்கக் கூடியதாக இருக்கும்.

வரலாற்று பதிவுகளில் சிலவற்றை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

புத்தர் பெருமானின் காலம்:

பொ.மு 563 முதல் 483 வரை வாழ்ந்த புத்தர் பெருமானின் காலத்தில் பதினாறு மகாஜனபதங்கள் இருந்தன. சித்தார்த்த கௌதமரே பௌத்தத்தைத் தோற்றுவித்தவர். இவர் இன்றைய நேபாளத்திலுள்ள  கோசல அரசின்  சாக்கியக் (பாலி: சாக்க) குடியரசில் தோன்றினார்.

மிகப் பழைய நூல்களில் புத்தர் பெருமானின் வாழ்க்கை பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனினும், பொ.மு 200ஆம் ஆண்டுக்குப் பிந்திய நூல்களில் பல்வேறு மீமாந்தச் சித்தரிப்புகளுடன் புத்தர் பெருமானின் வாழ்க்கை பற்றிய தொன்மங்கள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. புத்தர் பெருமான் தன் வாழ்வின் நாற்பத்தைந்து ஆண்டுகளை, மத்திய இந்தியாவின் கங்கை சமவெளி பகுதியிலேயே கழித்திருக்கிறார். பல்வேறு குலத்தைச் சேர்ந்தோர் அவரது போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது சீடர்கள் ஆனார்கள். 

தன் போதனைகளை உள்ளூர் மொழிகளில் அல்லது வட்டார வழக்குகளிலேயே கற்பிக்க வேண்டும் என்று புத்தர் வலியுறுத்தினார்.  சிராவஸ்தி, ராஜகிரகம் மற்றும் வைசாலி நகர்களின் அருகே போதனைகளைத் தொடர்ந்த புத்தர், 80 வயதில் மரிக்கும் போது, ஆயிரக்கணக்கான பின்பற்றுநர்கள் அவருக்கு இருந்தார்கள்.

புத்தர் பெருமானின் மறைவை அடுத்த 400 ஆண்டுகளில் பல்வேறு உட்பிரிவுகள் பௌத்தத்தில் தோன்றலாயின. அவற்றுள் நிகாய பௌத்தங்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று  தேராவத எனும் நிகாய பௌத்தம் மாத்திரமே எஞ்சியுள்ளது. அடுத்து வந்த காலங்களில்,  மகாயான மற்றும் வஜ்ரயான, பிரிவுகள் உருவாகின.
புத்தர் பெருமானைப் பின்பற்றுபவர்கள், ஆரம்பத்தில் தம்மை சாக்கியன், சாக்கியபிக்கு என்ற பெயர்களில் அழைத்துக் கொண்டனர். பிற்காலத்தில் பௌத்தர் என்ற பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர்.

பௌத்த சமயம் தோன்றிய வரலாறு:

அரச வம்சத்தைச் சார்ந்த சித்தார்த்தர் என்பவர் தவம் ஆற்றி ஞானம் பெற்று, புத்தர் என்று வழங்கப்பட்டார். புத்தர் மக்களுக்கு அறிவுறுத்திய அறவுரைகள் பௌத்த நெறியாகின. அந்நெறியைப் பின்பற்றியோர் பௌத்தர் எனப்பட்டனர். அவர் தம் சமயம் ‘பௌத்த சமயம்’ என வழங்கப்படலாயிற்று. பௌத்த சமயம் வடக்கே தோன்றி வளர்ந்ததாயினும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் பின்பற்றப்பட்டு, சிறப்புப் பெற்றது. இந்தியாவில் மட்டுமன்றி இந்தியாவிற்கு வெளியிலும் பரவிய பெருமையை உடையது அது.

அசோக சக்கரவர்த்தியின் பங்களிப்பு:

பௌத்த சமயம் பல்வேறு இடங்களில் வேரூன்ற முக்கிய காரணமாக அமைந்தவர் அசோக மன்னர். வடக்கே தோன்றிய பௌத்த சமயம் இந்தியாவின் பல இடங்களிலும் பரவத் தொடங்கியது. தென்னிந்தியப் பகுதிகளிலும் அது வேரூன்றத் தொடங்கியது. அது மௌரிய மன்னர்களுள் சிறந்தவராகிய அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் நிகழ்ந்தது என வரலாறு குறிப்பிடுகிறது.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் ஏறக்குறைய இந்தியா முழுமையும் ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்ட சிறப்புக்குரியவர் அசோக சக்கரவர்த்தி. புத்தர் பெருமானின் அறநெறிகளில் மனத்தைப் பறிகொடுத்த அசோகர் பௌத்த சமயத்தைத் தழுவிய மாமன்னராவர். அவர் பௌத்த சமயத்தைச் சார்ந்ததோடு இந்தியாவிலும் அதற்கு அப்பாற்பட்ட இலங்கை போன்ற நாடுகளிலும் பௌத்த சமயத்தைப் பரவச் செய்த பெருமைக்கு உரியவர். அசோகரின் கல்வெட்டுச் சாசனமும் இச்செய்தியை உறுதி செய்கிறது. தமிழகத்தில் பௌத்த சமயம் கால்கொள்ளவும் அசோகமன்னரின் முன்னெடுப்புகளே காரணம் என்பதை அவர்தம் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.

இம்முறை 2329வது பொசன் தின நிகழ்ச்சிகள்:

நேற்று 23 மற்றும் இன்று 24 ஆம் திகதிகளில் மிஹிந்தலை ரஜமகா விகாரை மற்றும் சித்துல்பவ்வ ரஜமகா விகாரைகளில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையணி, நாட்டு மக்கள் மற்றும் உலக மக்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட கோரி அதிஷ்டான ஆசீர்வாத பூஜையும் அங்கு இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வுகள் யாவும் குறைந்த அதிதிகளின் பங்கேற்றலுடன் சுகாதார வழிமுறைகளை பேணியும் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரச பொசன் விழா  சமய வழிபாடுகள் மற்றும் புண்ணிய நிகழ்வுகள் மிஹிந்தலை ரஜமகா விகாரையில் இன்று 24ஆம் திகதி நடைபெறுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் சிறப்பு பங்கேற்புடன் இந்த நிகழ்வுகள் மிஹிந்தலையில் நடைபெறுகின்றன. அத்தோடு இணைந்ததாக  லேக் ஹவுஸ் நிறுவனம் வருடா வருடம்   சிறப்பாக நடத்தும், மிஹிந்தலை புனித பிரதேசத்திற்கு ஒளியூட்டும்  சிறப்பு நிகழ்வு இம்முறையும் நடைபெறுகின்றது .

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் 23,24, 25 ஆம் திகதிகளில் இந்த நிகழ்வுகள்  நடைபெறுகின்றன.

நாடளாவிய ரீதியில் விமரிசையாகவும் பக்திபூர்வமாகவும் கொண்டாடப்படும் பொசன் பண்டிகை கொண்டாட்டங்கள், சமய வழிபாடுகள், தானதர்ம புண்ணிய வைபவங்கள்  உள்ளிட்ட இதர நிகழ்வுகள் கொவிட் காரணமாக இம்முறை நடைபெறவில்லை.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையை கவனத்திற் கொண்டு அனைத்து நிகழ்வுகளும் கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வீடுகளில் இருந்தவாறே பொசன் சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு பௌத்த மதத் தலைவர்களால்  பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எமது நாட்டில் இம்முறை ‘உலக மக்கள் அனைவரும் நலம் பெறுக’ என்ற தொனிப்பொருளுடன்  அரச பொசன் பண்டிகை விழா இவ்வருடமும் மிக எளிமையாகக் கொண்டாடப்படுவதுடன், கடந்த 21ஆம் திகதி அதற்கான நிகழ்வுகள் சமய நிகழ்வுகளாக மட்டும் ஆரம்பிக்கப்பட்டன.

வணக்கத்துக்குரிய மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் பொசன் பண்டிகை இம்முறை 2329வது பொசன் பண்டிகையாக அனுஷ்டிக்கப்படுகிறது.

பொசன் பண்டிகை என்றாலே மிஹிந்தலை களைகட்டும். எனினும் இம்முறை பக்தர்கள் அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமது வீடுகளில் இருந்தே மஹிந்த தேரர் தமது வீடுகளுக்கு வருகின்றார் என்பதாக உருவகித்து  பிராத்தனைகளை வீட்டிலேயே  மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வீடுகளில் பௌத்த கொடிகளை பறக்க விடுமாறும், மஹிந்த தேரருக்காக புத்த பூஜைகளை வீடுகளில் நடத்த முடியும் என்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனவெவே தம்ம ரத்ன தேரர் அனைத்து  பௌத்த மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மிஹிந்தலை ரஜமகா விகாரை இலங்கையின் நாகரிகத்தின் வரலாற்றையும், பௌத்த மதம் இலங்கைக்கு வந்த வரலாறையும் மஹிந்த தேரரோடு இணைந்ததான வரலாற்றையும்  ஒன்றுசேர கொண்டுள்ள புனித பூமியாகும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியுள்ள இந்த குன்றுப் பகுதி மஹிந்த தேரரின் வருகைக்குப் பின்னர் புனித பிரதேசமாக மாற்றம் பெற்றுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள், தொல்பொருட்கள் என்பவற்றை அந்தப் பிரதேசம் கொண்டுள்ளது. இவை அனுராதபுர இராச்சிய காலப் பகுதிக்கு உரித்துடையவையாகும்.

இந்த புனித பூமியானது மிஹிந்தலை மலை, எத்வெஹெர மலை, ஆனைக்குட்டி மலை, மற்றும் ராஜ கலலென  மலை என நான்கு மலைகளை உள்ளடக்கியுள்ளது. பொசன் போயா தினம் ஒன்றில்  அசோக சக்கரவர்த்தியின் மகனான மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து தேவநம்பியதீசன் மன்னனிடம் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்தியதாக மகாவம்சம் கூறுகின்றது.

மஹிந்த தேரர் மிஹிந்தலைக்கு வருகை தந்ததை நினைவு கூரும் வகையில் லேக் ஹவுஸ் நிறுவனம் நிர்மாணித்து வழங்கிய அவரது புனித பாதம் அங்கு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த புனித பாதம் சில வருடங்களுக்கு முன்பதாக ஹெலிகொப்டர் மூலம் அந்த மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெ.யோகராஜ்
(சிரேஷ்ட ஊடகவியலாளர்)
email:yogaraj35Shgmail.com


Add new comment

Or log in with...