20,000 கோடி ரூபாய் குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

அரசின் அத்தியாவசிய தேவை மற்றும் கொரோனா கட்டுப்பாட்டுத் தேவைகளுக்காக 20ஆயிரம் கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கொவிட்19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 20ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணையை ஆளுங்கட்சி கொரடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இக்குறைநிரப்பு பிரேரணைமீது நேற்று புதன்கிழமை முழுநாள் விவாவதம் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டதுடன், எதிர்க்கட்சிகள் பிரேரணைக்கு எதிரான கருத்தையே முன்வைத்திருந்தன. என்றாலும் எந்தவொரு கட்சியும் பிரேரணைக்கு எதிராக வாக்கெடுப்பை கோரவில்லை என்பதால் வாக்கெடுப்பின்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தியென பாராளுமன்றத்திலுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்குபற்றியிருந்தன. குறைநிரப்பு பிரேரணையில் மீண்டெழும் செலவீனங்களுக்காக 133 மில்லியன் நிதியும் மூலதனச் செலவாக 69 பில்லியனுமாக 200 பில்லியனுக்கான நிதி ஒதுக்கீடுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...