சம்பந்தனின் ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க | தினகரன்

சம்பந்தனின் ஆசனத்தில் ரணில் விக்கிரமசிங்க

பாராளுமன்ற உறுப்பினராக நேற்று (23) சத்திய பிரமாணம் செய்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்த ஆசனத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இருந்தார்.

தற்போது ஆசன வரிசையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்தபடியாக ஆர்.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க காலை 10 மணிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்வதற்கு சபாபீடத்துக்கு வரும் நுழைவாயில் ஊடாக வந்தார். சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்த அவரை எதிர்க்கட்சியில் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு படைக்கல சேவிதர் அழைத்துச் சென்றார்.

இதன்போது ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களிலிருந்து எழுந்து மேசையில் தட்டி அவரை வரவேற்றனர்.

சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியை பார்த்து வணக்கம் தெரிவித்துக் கொண்டு, ஆளுங்கட்சியில் முன்வரிசையிலிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அமைச்சர்களை பார்த்து அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார்.

சுப்பிரமணியம் நிசாந்தன்


Add new comment

Or log in with...