ரிஷாட் பதியுதீனின் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகினார் ஏ.எச்.எம்.டி. நவாஸ்

ரிஷாட் பதியுதீனின் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகினார் ஏ.எச்.எம்.டி. நவாஸ்-Rishad Bathiudeen-Riyaj Bathiudeen-FR Petition-3rd Judge Recuses

- தனிப்பட்ட காரணம் என தெரிவிப்பு
- இம்மனுவை விசாரிப்பதிலிருந்து விலகும் மூன்றாவது நீதியரசர்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனு விசாரணைகளிலிருந்து, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸும் விலகியுள்ளார்.

குறித்த மனு இன்று (23) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​தனிப்பட்ட காரணங்களால் தாம் குறித்த மனு விசாரணைகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு முன்னர், உச்சநீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இவ்வாறு விலகியிருந்த நிலையில், தற்போது மூன்றாவது நீதியரசரும் இம்மனு விசாரணைகளிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தங்களை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது எனக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி அதிகாலை வேளையில் கொழும்பில் வைத்து CIDயினரால் கைது செய்யப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து அவரை பயங்கரவாத தடுப்பு சட்டுத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் அடிப்படையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...