மீண்டும் முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி

அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமம் 21ஆம் திகதி முதல் 14 தினங்களுக்கு மீண்டும் முடக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்று காரணமாக 12 மாவட்டங்களின் 18 பொலிஸ் பிரிவுகளிலுள்ள 24 கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவற்றுள் வடக்கு கிழக்கில் மூன்று மாவட்டங்களில் மாத்திரம், அதாவது யாழ். மாவட்டத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் சாவற்காடு எனும் கிராமமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஏறாவூர்-2 பிரிவும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா கிராமங்கள், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமமும் முடக்கப்பட்டிருக்கின்றன.

வளத்தாப்பிட்டி கிராமத்தில் ஏற்கனவே இந்த மாதம் 4ஆம் திகதி முதலாவது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பயணத் தடையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இதுவோர் மேலதிக பாதிப்பாக இருந்தது. எனினும் அரசாங்கமும் பல அமைப்புகளும் உலருணவுகளை வழங்கியிருந்தன. அதன் தொடர்ச்சியாக மீண்டும் அக்கிராமம் முடக்கப்பட்டிருக்கிறது.

அம்பாறை நகரிலிருந்து கிழக்காக 9 கி.மீற்றர் தொலைவில் அம்பாறை- காரைதீவு பிரதான வீதியில் இக்கிராமம் அமைந்துள்ளது. சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 52 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் வளத்தாப்பிட்டி கிராமசேவையாளர் பிரிவு என்பது சுமார் 1200 குடும்பங்களைக் கொண்டது.

இக்கிராமசேவையாளர் பிரிவில் புதிய வளத்தாப்பிட்டி, பழைய வளத்தாப்பிட்டி, பளவெளி, இஸ்மாயில்புரம் எனும் நான்கு கிராமங்கள் வருகின்றன.

இந்நான்கு பிரிவுகளில் ஒன்றான புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் 450 குடும்பங்கள் வருகின்றன. அங்கு கொரோனா தாக்கம் தீவிரமாகி இதுவரை 85 தொற்றாளர்களின் இனங்காணப்பட்டு மீண்டும் முடக்கப்பட்டிருக்கின்றது. அங்கு ஒரு மரணமும் சம்பவித்திருக்கின்றது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின்படி 7 குடும்ங்களைச் சேர்ந்த 14பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே தொற்றுக்குள்ளாகியிருந்த அதே 6 குடும்பங்களைச்சேர்ந்த 12பேரும், புதிதாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2பேரும் இனங் காணப்பட்டுள்ளனர். இதுவே இரண்டாவது முடக்கலுக்கு காரணமாகும்.

முதலாவது முடக்கலையடுத்து 'உறவுகள்' என்ற பெயரில் ‘வட்ஸ்அப்’ குழுவொன்றை அமைத்து ஊர் விடயங்கள், நிவாரணங்கள் மற்றும் ஏனைய வேலைத் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாற காரணமாக இருந்த ஒருவர் வெ.ஜெயச்சந்திரன்.

புதிய வளத்தாப்பிட்டியை சேர்ந்த அவர் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளருமாவார்.

“கடந்த மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை மற்றும் 4ஆம் திகதி முதல் முடக்கம் என்பவற்றால் எமது மக்கள் பசி பட்டினியால் வாடும் நிலையை எதிர்நோக்கியிருந்தனர். எனினும் முதலாவது முடக்கல் நிலையின் போது அரசின் 5000 ரூபா தனிமைப்படுத்தல் பொதி கிடைத்தது. மேலும் பல நிறுவனங்கள், தனிநபர்களின் உதவிகளும் கிடைத்தன.

காரைதீவு தவிசாளர் ஜெயசிறில், கல்முனை இளைஞர்அமைப்புகள், புத்தங்கல பிக்குமார், அம்பாறை வர்த்தகர்கள், சம்மாந்துறை முஸ்லிம் பேக்கரி உரிமையாளர் றஹீம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் புஷ்பராசா, கல்முனை றோட்டரி கழகம் வழங்கிய உதவிகளுக்கு எமது நன்றிகள்” என்று ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

அக்கிராமத்தில் வீதிக்கு வீதி இராணுவமும் பொலிசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் வெளியே, உள்ளே செல்லாதவாறு தடையிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இரண்டாவது நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை. 14 நாட்களுள் இரண்டு நிவாரணங்களும் கிடைத்திருக்க வேண்டும். பிரதேச செயலாளர் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதை அறிவோம். இங்குள்ள அரச தொழிலாளர்கள் அடிமட்டத்திலுள்ளவர்கள். எனவே அவர்களை ஏனைய அரச தொழிலாளர் போல் கூடிய சம்பளம் பெறுபவர்கள் என நினைத்து நிவாரணத்தை நிறுத்தி விட வேண்டாமென தயவாகக் கேட்கிறோம்” என்று ஜெயச்சந்திரன் மேலும் கேட்டுக் கொண்டார்.


Add new comment

Or log in with...