போலி கடனட்டைகள் மூலம் ஏழு இலட்சம் ரூபா மோசடி

சீன பிரஜை உட்பட நால்வர் கைது

போலி கடனட்டைகளை பயன்படுத்தி பணமோசடியிலீடுபட்ட சீனப் பிரஜை உட்பட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணைய வழியூடான பொருள் விற்பனை நிறுவனம் ஒன்றின் முறைப்பாட்டுக்கமையவே இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி குறித்த நிறுவனத்திடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்து, ஏனையயோருக்கு விற்பனை செய்துள்ளனர். இவர்களால் வழங்கப்பட்ட கடனட்டையிலிருந்து நிறுவனத்தால் பணத்தை பெற்றுக் கொள்ள முடியாதபோதே அவை போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. இவ்வாறு இந்த சந்தேக நபர்களால் 7,87,000 ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் முறைப்பாடளித்துள்ளது.

சந்தேக நபர்கள் கைது செய்யப்படும்போது , அவர்களிடமிருந்து போலி கடனட்டைகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் 30 போலி கடன் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. சீன பிரஜையின் உதவியுடனே ஏனைய சந்தேக நபர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது. அதற்கமைய கண்டி, வரக்காபொல மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...