கடவுளின் மௌனத்திற்கு அர்த்தம் தேடும் முயற்சியே மனிதனின் இறை நம்பிக்கை

பொதுக்காலத்தின் 12ஆம் ஞாயிறு கடந்த ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகமானது நமது நம்பிக்கையின் ஆழத்தை சோதிப்பதாக அதுவும் இறைவனே சோதிப்பதாக அமைகின்றது.

உண்மையில் நம் வாழ்க்கை நம்பிக்கையின் மேல் கட்டி யெழுப்பப்பட்டுள்ளதா? அல்லது சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் நமது நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படுகின்றதா இந்தவாரம் அதனை சிந்திப்பதற்கு திருச்சபை நம்மை அழைக்கின்றது.

கொந்தளிக்கும் வாழ்க்கைக் கடலில் படகு போல் அலைக்கழிக்கப்படுகிறான் மனிதன்.

புயல் இல்லாத வாழ்க்கை ஏது? அப்பொழுதெல்லாம் “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?" (மார்க். 4:38) என்று கூக்குரல் இடுகிறான்.

கடவுளோ உரிமையோடு கடிந்து கொண்டு கேட்பது, ''ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மார்க் 4:40) என்பதுதான்.

மனிதன் மீது அக்கறை இல்லாதவரா கடவுள்? விடுதலைப் பயணம் 3:7இல் ஆண்டவர் கூறியது: "எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலைக் கேட்டேன். ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்"

"அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையானவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை" (யோபு. 1:8) என்று இறைவனே பெருமிதம் கொண்ட யோபுவின் இறை நம்பிக்கையே கொஞ்சம் ஆட்டம் கண்டபோது ஆண்டவர் சூறாவளியினின்று யோபுவுக்கு அருளிய பதிலே கடந்த ஞாயிறு திருப்பலியின் முதல் வாசகம்.

"கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபோது அதனைக் கதவிட்டு அடைந்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி காரிருளைப் பொதி துணியாக்கி எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாள்ப்பாளையும் பொருத்தி இதுவரை வருவாய் இதற்கு மேல் அல்ல. உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க' என்று நான் இயம்பிய போது எங்கிருந்தாய் நீ?" (யோபு. 38:8-11). வாழ்வினில் இழப்புகள் , இடர்பாடுகள், விபத்துக்கள், வேதனைகள் போன்றவற்றைச் சந்திக்கும் போது நாம் மனம் உடைந்து போகிறோம். அதிலும் காரணமின்றி இழப்புக்களைச் சந்திக்கும்போது, நேர்மையாக வாழ்ந்தும் இடர்களுக்கு ஆளாகும்போது நம் இறை நம்பிக்கை அசைக்கப்படுகிறது; ஆட்டம் காண்கிறது.

இத்தகைய சூழல்களில் இறைவனின் அன்பை, ஆற்றலை, உடனிருப்பை மறந்து விடக்கூடாது என்பதே கடந்த ஞாயிறு வழிபாடு சொல்லும் செய்தி! " உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்” (1 பேதுரு 5:7)

செல்வச் செழுமைமிக்க வணிகர் அவர். அதே வேளை நேர்மையான இறை நம்பிக்கையாளர். கடற்கரை மணலில் நடந்து கொண்டிருந்தார். யாரோ தன்னைத் தொடர்வது போன்ற உணர்வு. திரும்பிப் பார்க்கிறார். யாருமில்லை. ஆனால் நான்கு காலடித்தடங்கள் காணப்படுகின்றன.

கடவுளே தன்னோடு நடந்து வருவதாக எண்ணிக் கடவுளைப் போற்றத் தொடங்கினார். காலங்கள் கடந்தன. வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்புக்கும் இடர்களுக்கும் உள்ளானார். அமைதி இழந்து கடற்கரையில் நடக்கிறார். அப்போது திரும்பிப் பார்க்க வழக்கமான நான்கு காலடிச் சுவடுகளைக் காணோம். இரண்டு காலடித் தடங்கள் மட்டுமே காணக்கிடக்கின்றன.

கடவுளை நோக்கிப் புலம்பத் தொடங்கி விட்டார். "என் அருமைத் தெய்வமே, என் வாழ்வில் எப்பொழுதும் நீ என்னோடு நடந்து வருகிறாய் என்ற நம்பிக்கையில் நிறைவும் நிம்மதியும் கண்டவன் நான். ஆனால் இந்தத் துன்ப நேரத்தில் மனிதர்கள் தான் கைவிட்டு விட்டனர் என்றால் நீரும் என்னைக் கை நெகிழ்ந்துவிட்டீரே. என்னோடு நடந்து வரும் உன் காலடிச் சுவடுகள் எங்கே?" என்று தனது தவிப்பை வெளிப்படுத்தினார்.

அப்போது கடவுளின் குரல் ஒலித்தது: "மகனே, நீ காணும் காலடித் தடங்கள் உன்னுடையது என்றா நினைக்கிறாய் ? நடக்க இப்போது உனக்கேது சக்தி? நீ காணும் அந்தத் தடங்கள் உன்னுடையவையல்ல. அவை என்னுடையவை. துவண்டு நிற்கும் உன்னை நான் என் தோளில் சுமந்து அல்லவா நடக்கிறேன்!''

''நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை. குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை. துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை. வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை ” (2 கொரி. 4:8-9) என்ற திருத்தூதர் பவுலின் மன உறுதிக்குக் காரணம் இயேசு அவரோடு இருந்து செயலாற்றுகிறார் என்ற உணர்வுதான்.

மனிதன் தூங்கலாம். கடவுள் தூங்கலாமா? கடவுள் தூங்கினால் இவ்வுலகம் இயங்குமா? அதனால் தான் ''உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிட மாட்டார். இதோ இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண் அயர்வதும் இல்லை. உறங்குவதும் இல்லை" (தி.பா. 121 : 3-4).

ஆனால் " அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிந்தார்" (மார்க். 4:38) என்கிறது நற்செய்தி. கடலின் கொந்தளிப்பில், அலைகளின் பேரிரைச்சலில், படகின் அலைக்கழிப்பில் ஒருவரால் உறங்க முடியுமா? இறைவனின் புரியாத * இந்தச் செயல்பாட்டைத்தான் தமிழன் திருவிளையாடல்' என்கிறானா?

இங்கிலாந்து நாடு, பனிக்காலம். நடுக்கும் குளிர் ஏழைத்தாய் ஒருத்தி கந்தையில் பொதிந்த மழலையைக் கையில் ஏந்தி காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் அவ்வழியே வந்த டெக்ஸி அவளைக் கண்டதும் நின்றது. ஏறிக் கொண்டாள். வண்டி வேகமாக ஓடியது. உறைய வைக்கும் குளிரின் வேகம் வேறு. குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது பற்கள் வெட வெட என ஆடின. முடிவில் இறுகக் கட்டிக் கொண்டன. வண்டிக்காரன் திரும்பிப்பார்த்தான். "அம்மா" என்றான். அவளால் வாய்திறக்க முடியவில்லை. நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி "கீழே இறங்கு'' என்றான் அதட்டலுடன். பயந்து நடுங்கி அவள் இறங்கிக் கொண்டிருந்தாள்.

வெடுக்கென பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு குதிரையைத் தட்டிவிட்டான். சிட்டாகப் பறந்தது. அவளோ "என் பிள்ளை , என் பிள்ளை " என்று கதறிக் கொண்டு வண்டிக்குப் பின்னாலேயே ஓடினாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திப் பதறிக் கொண்டு வந்த அவளிடம் பிள்ளையைக் கொடுத்தான்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிமிர்ந்து "ஏன் பா இப்படிச் செய்தாய் ? " என்று கேட்க, அவன் "இப்ப குளிருதா?" என்றான். ''இல்லை நன்றாக வியர்த்துவிட்டது" என்று அவள் சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான் : "இதற்காகத்தா

ஓடு ஓடு என்றால் நாம் ஓட மாட்டோம். அதனால் கடவுள் சிலசமயம் ஓட்டம் காட்டுகிறார்.

தெய்வத்தின் இந்தத் திருவிளையாடலைப் பற்றித்தான் திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்: "நானோ கலக்கமுற்ற நிலையில் உமது பார்வையினின்று விலக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொண்டேன். ஆனால் நான் உம்மிடம் உதவிக்காக வேண்டிய போது நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவி சாய்த்தீர்." (தி.பா. 32:22)

காக்கும் கடவுள் நம்மோடு பயணிப்பதை நம்பிக்கையின் வெளிச்சத்தில் பார்க்காமல் அவநம்பிக்கை கொள்ளும் போது அச்சத்தின் அலைகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். நம் இயேசு வல்லவர் உடனிருப்பவர்.

இயேசுவின் மெளனத்தைப் புரிந்து கொள்ளாதவன் அவரது வார்த்தையைப் புரிந்து கொள்ள முடியாது. கடவுளின் மௌனத்துக்கு எப்போதும் அர்த்தம் உண்டு. கடவுளின் மெளனத்துக்கு அர்த்தம் தேடும் முயற்சியே மனிதனின் இறை நம்பிக்கை.

இ.லூர்து ராஜ்


Add new comment

Or log in with...