வவுனியா வைத்தியசாலைக்கு ரூ. 35 மில்லியன் பெறுமதியான பி.சி.ஆர் ஆய்வுகூடம் | தினகரன்

வவுனியா வைத்தியசாலைக்கு ரூ. 35 மில்லியன் பெறுமதியான பி.சி.ஆர் ஆய்வுகூடம்

வவுனியா பொதுவைத்தியசாலையில் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிசிஆர் ஆய்வுகூடத்தொகுதி ஒன்றினை விரைவில் அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை ஆராயும் நோக்குடன் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சுதத் தர்மரட்ண நேற்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் பிசிஆர் மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளிற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதனால் காலதாமதம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு பிசிஆர் ஆய்வுகூடத்தொகுதி ஒன்றை வழங்குமாறு வவுனியா வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பல்வேறு தரப்பினர்களாலும் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது.

அதனடிப்படையில் வவுனியா வைத்தியசாலைக்கு விஜயம்செய்த சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் சுதத் தர்மரட்ண (ஆய்வுகூடம்) வவுனியா வைத்தியசாலையில் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிசிஆர் ஆய்வுகூட தொகுதியினை இயக்குவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்திருந்தார். குறித்த செயற்பாட்டிற்கு வவுனியா வைத்தியசாலையின் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக திருப்தியடைந்த அவர் விரைவில் ஆய்வுகூடத்தினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினையும் எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள கொவிட்-19 விடுதியை பார்வையிட்ட அவர் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிராந்தியத்தின் கொவிட்-19 நோய் நிலமை மற்றும், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பிசிஆர் பரிசோதனைகளின் அதிகரிப்பு தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலனால் பிரதிப்பணிப்பாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க. ராகுலன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் க, மகேந்திரன் மற்றும் சுகாதார சேவைகள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வவுனியா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை ஆய்வுகூடம் இயங்கும் பட்சத்தில் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமின்றி மிகவிரைவாக அறிந்துகொள்ளும் நிலமை ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை விஷேட நிருபர்


Add new comment

Or log in with...