ரணில் எம்.பியாக நாளை சத்தியப்பிரமாணம்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்கமைய முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சி, தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசனத்தில் ஐ.தே.க. சார்பில் யார் பாராளுமன்றத்திற்கு செல்லப்போவது என்ற விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

எனினும் கட்சி உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரது வேண்டுகோளுக்கமைய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் பாராளுமன்றம் செல்வார் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.

இந்நிலையில் நாளை புதன்கிழமை ரணில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்யவுள்ளார்.

'பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான தனது இந்த நோக்கம் மக்களுக்கானது. அரசாங்கத்தை உரிய வகையில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உள்ளது. அதனை செய்வதே எனது நோக்கமாகின்றது' என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...