மக்கள் பொருளாதார பலம் பெறுவதை சுயலாப சக்திகள் விரும்பவில்லை | தினகரன்

மக்கள் பொருளாதார பலம் பெறுவதை சுயலாப சக்திகள் விரும்பவில்லை

மக்கள் பொருளாதார பலம் பெறுவதை சுயலாப சக்திகள் விரும்பவில்லை-Douglas Devananda

இலுப்பைக் கடவை கடற்றொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் தொழில்சார் முரண்பாடுகளுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களின் குறுகிய நோக்கத்திற்காக மக்களின் வளமான எதிர்காலத்தினை பலி கொடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னார், இலுப்பைக் கடவைக்கான விஜயத்தினை இன்று (19) மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போது, சுமார் 130 கடற்றொழிலாளர் குடும்பங்களைக் கொண்ட இலுப்பைக்கடவை கிராமத்தில், கடலட்டைப் பண்ணை அமைத்தல், நண்டு வளர்த்தல்  போன்ற திடடங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் இருவேறான கருத்துக்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக, குறுகிய காலத்தில் கிராம மக்களின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய, கடலட்டை பண்ணை தொடர்பாக தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

மேலும், மக்கள் பொருளாதார ரீதியில்  வளர்ச்சியடைவதை விரும்பாத சில சுயலாப சக்திகள், இலுப்பபைக் கடவை மக்களில் ஒரு பகுதியினருக்கு கடலட்டை உற்பத்தி தொடர்பான தவறான புரிதல் ஏற்படுத்தியிருப்பதாவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, குறுகிய நோக்கங்களுக்காக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முரண்பாடு சுமூகமாக தீர்க்கப்பட்டு, குறித்த கிராம மக்கள், யாருடைய ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்க்காமல் வாழக்கூடிய வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...