பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் முழுமையான நஷ்டஈடு | தினகரன்

பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் முழுமையான நஷ்டஈடு

அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிறார் அலி சப்ரி

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களுக்கும் உரிய நட்ட ஈடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அத்தகைய மீனவர்களுக்கு அரசாங்கம் ஆரம்ப கட்டமாகவே திறைசேரி மூலம் 5,000 ரூபாவை தற்போது வழங்கி வருகின்றது. கப்பல் தீ அனர்த்தம் ஏற்பட்டதிலிருந்து மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்குரிய நட்ட ஈடு வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தீ அனர்த்தத்திற்குள்ளான கப்பலினால் நாட்டிற்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான முழுமையான நட்ட ஈடுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்துடன் வெளிவிவகார அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

கப்பலினால் கடற் பிரதேசங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், கடல் வளங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளென பல்வேறு இழப்புகள், பாதிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கான மதிப்பீடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பல் நிறுவனத்திடமிருந்து முழுமையான நட்ட ஈடுகளை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அந்த நட்டஈடு கிடைத்ததும் பாதிப்படைந்த மீனவர்களின் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...