குமார் சங்கக்காரவுக்கு ICC யின் கௌரவம்

குமார் சங்கக்காரவுக்கு ICC யின் கௌரவம்-ICC Hall of Fame-Kumar Sangakkara

- Hall of Fame கௌரவம் பெறும் 10 வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) Hall of Fame (புகழரங்கம்) கௌரவத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன் முதலாக இடம்பெறவுள்ள (ஜூன் 18 - 22) டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் இணைந்தவாறு, குமார் சங்கக்கார உள்ளிட்ட 10 பேருக்கு இக்கௌரவம் வழங்கப்படுவதாக ICC அறிவித்துள்ளது.

 

 

அதற்கமைய, 1996 -2015 காலப் பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்களிப்புச் செய்த இரு வீரர்களில் ஒருவராக குமார் சங்க்காரவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப் பகுதிக்கான பெயர் பட்டியலில் சிம்பாப்வே அணி வீரர் அண்டி பிளவரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்கியவர்களாக இவர்கள் 10 பேரினதும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வகையில் இக்கௌரவத்தை பெறுபவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரிக்கிறது.

அந்த வகையில் Hall of Fame கௌரவத்தைப் பெறும் இரண்டாவது இலங்கை கிரிக்கெட் வீரராக குமார் சங்கக்கார இடம்பெறுவதோடு, ஏற்கனவே இக்கௌரவத்தை முத்தையா முரளிதரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமார் சங்க்கார 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12,400 ஓட்டங்களை, 57.40 எனும் சராசரியில் பெற்றுள்ளார். 182 பிடியெடுப்புகள், 20 ஸ்டம்பிங்குகளையும் மேற்கொண்டுள்ளார். மிக சிறப்பாக ஓட்டங்களை பெறும் வீரர் எனும் பெயருடன் தனது கிரிக்கெட் சகாப்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த சங்கக்கார, இரட்டை சதங்களை இலகுவில் பெறும் ஒரு வீரராக ICC அடையாளப்படுத்தியுள்ளது. 2014ஆம் ஆண்டில் பங்களாதேஷுடனான போட்டியில் 319 மற்றும் 105 ஓட்டங்களை பெற்ற சங்கக்கார, 2017 இல் 16 ஓட்டங்கள் குறைவான நிலையில் ஆட்டமிழந்த சங்கக்கார, தொடர்ச்சியாக 6 தடவை 100 ஓட்டங்களை முதற் தர போட்டிகளில் பெற்ற சாதனையை மயிரிழையில் தவறவிட்டிருந்தார்.

ICC யின் Hall of Fame கௌரவம் பெறும் 10 கிரிக்கெட் வீரர்கள்

- 1918 இற்கு முன்னர் பங்களிப்புச் செய்தவர்கள்
Aubrey Faulkner - South Africa
Monty Noble - Australia

- 1918 -1945 காலப் பகுதியில் பங்களிப்புச் செய்தவர்கள்
Sir Learie Constantine - West Indies
Stan McCabe - Australia

- 1946 -1970 காலப் பகுதியில் பங்களிப்புச் செய்தவர்கள்
Ted Dexter - England
Vinoo Mankad - India

- 1971 -1995 காலப் பகுதியில் பங்களிப்புச் செய்தவர்கள்
Desmond Haynes - West Indies
Bob Willis - England

- 1996 -2015 காலப் பகுதியில் பங்களிப்புச் செய்தவர்கள்
Andy Flower - Zimbabwe
Kumar Sangakkara - Sri Lanka


Add new comment

Or log in with...