நுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு | தினகரன்

நுவரெலியாவில் மலர் வளர்ப்பாளர்களும் பாதிப்பு

பயணக் கட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி செய்கையாளர்கள், வீட்டுத் தோட்ட செய்கையாளர்கள் உள்ளிட்டோருடன் பூச்செடிகள், மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தங்களது நாளாந்த வருமானத்தையும் இழந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த அசாதாரண காலப்பகுதியில் பொது வைபவங்கள் மற்றும் வீட்டு வைபவங்கள், ஆலய வைபவங்கள் போன்றவை தடைப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் குறித்த வைபவங்களை நம்பி தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொண்டு வரும் நுவரெலியா மாவட்ட மலர் செய்கையாளர்கள் பெரும் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

திருமணங்கள், வீட்டு வைபவங்கள், ஆலய நிகழ்வுகள் உள்ளிட்ட பொது வைபவங்களுக்கு பாவிக்கப்படும் மலர்களை உற்பத்தி செய்வதும் விற்பனைக்கு கொண்டு செல்வதையும் தொழிலாளாக கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் செடியிலிருந்து உரிய காலப்பகுதியில் பூக்களை அகற்ற முடியாததால், மழையால் பழுதாகியும் வீணே உதிர்ந்தும் கொட்டும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் நுவரெலியா மாவட்டத்தில் மலர் செய்கை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தமது ஜீவனோபாய வாழ்க்கை வருமானத்தை இழந்துள்ள நிலையில், பாரிய பொருளாதார சிக்கலுக்கும் மலர்கள் வளர்ப்புக்காக செய்த செலவுகளையும் ஈடுகட்ட முடியாது கடன் சுமைகளுக்கும் ஆளாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஹக்கலை, மீப்பிலிமான, சாந்திபுர, டொப்பாஸ், பிளக்வூல், லபுக்கலை போன்ற இன்னும் பல பிரதேசங்களில் விலையுயர்ந்த பூக்கள் வளர்ப்பாளர்கள் மற்றும் பூக்களை கொள்வனவு செய்து விற்பனை செய்வோரும் தமது நாளாந்த வருமானத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதேநேரத்தில் பூ வளர்ப்பவர்களின் வாழ்வாதார பாதிப்புக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விவசாயம் மற்றும் சுயத்தொழில் துறை அமைச்சுக்கள் கவனமெடுத்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும் என பூஉற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ஹற்றன் சுழற்சி, நுவரெலியா தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...