பாகிஸ்தான் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு | தினகரன்

பாகிஸ்தான் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தேவையான பல கோடி ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குமென இலங்கைக்கான பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மொஹமட் ஸாட் அல் காட்டக் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலை அன்னாரது பேருவளை இல்லத்தில் சனி (12) உயர் ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து இங்கு கருத்துத்தெரிவித்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர், பாகிஸ்தான் இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். அன்று முதல் இன்று வரை பாகிஸ்தான் இலங்கையுடன் அனைத்து நடவடிக்கைகளிலும் நட்புறவை பேணி வருகிறது.

அதேபோல் இலங்கையும் பாகிஸ்தானுடன் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒரு தோழனாக நின்று நட்புறவுடன் செயற்பட்டு வருகிறது. அந்த ஒற்றுமை தொடரப்பட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிகவும் உறுதியாக உள்ளார். அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் அனைத்து விடயங்களிலும் பாகிஸ்தானுடன் மிகவும் நட்புடன் செயற்பட்டு வருதாக தெரிவித்த உயர் ஸ்தானிகர் மொஹமட் ஸாட் அல் காட்டக், தற்போதைய கொரோனா சூழ்நிலையில் இலங்கை மக்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களை பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது என்றார்.

மேற்படி பாகிஸ்தானின் உதவி ஒத்தாசைக்கு அரசாங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்ட இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானில் உயர் கல்வியை தொடர புலமைப் பரிசில்களை பெற்றுத்தருமாறு உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட உயர் ஸ்தானிகர், முதல் கட்டமாக இலங்கை மாணவர்கள் 250 பேருக்கு பாகிஸ்தானில் உயர் கல்வியைத் தொடர புலமைப் பரிசில் வழங்குவதாக உறுதியளித்தார். இதன் பின்னர் பேருவளை பிரதேச செயலக காரியாலயத்தில் அரச அதிகாரிகளுடன் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றது.


Add new comment

Or log in with...