கொரோனா தடுப்பூசி: மிகுதி டோஸ்களை வறிய நாடுகளுக்கு சீராக வழங்க யூனிசெஃப் அழுத்தம் தருவது ஏன்?

பில்லீ எய்லிஷ், டேவிட் பெக்கெம் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

உலகின் செல்வந்த நாடுகள் தங்களின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்த கொரோனா வைரஸ் டோஸ்களில் மிகுதியானவற்றை ஒரே நேரத்தில் வறிய நாடுகளுக்கு அனுப்பி வைத்தால் அவை வீணாகும் அபாயம் இருப்பதாக குழந்தைகளுக்கான ஐ.நா அமைப்பான யூனிசெஃப் எச்சரித்துள்ளது.

இந்த விவகாரத்தில் வறிய நாடுகளுக்கு உதவ பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. ஆனாலும், அவை ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமாக தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்தால், அவற்றைப் பராமரிக்கக் கூட அந்த நாடுகளிடம் வசதி கிடையாது என்று யூனிசெஃப் கூறியுள்ளது. எனவே, ஒவ்வொரு வறிய நாட்டின் தேவைக்கு ஏற்ப தடுப்பூசி டோஸ்களை சீரான முறையில் அனுப்பி வைக்குமாறு யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.

யூனிசெஃப் அமைப்பின் இந்த வேண்டுகோளை அதன் நல்லெண்ண தூதர்களான திரை பிரபலங்கள் பில்லீ எய்லிஷ், டேவிட் பெக்கெம், ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ், ஓர்லேண்டோ ப்ளூம், கேட்டி பெர்ரி, ஜெம்மா சான், வூபி கோல்பெர்க், கிளாடியா ஷிஃபெர், கிறிஸ் ஹோஸ் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

யூனிசெஃப் அமைப்பின் தடுப்பூசி விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி லிலி கேப்ரானி பிபிசி நியூஸ்நைட் நிருபரிடம் பேசுகையில், "உலக நாடுகள் அனைத்தும் அவற்றின் சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது முக்கியம். அதுபோலவே, உலகின் மற்ற பகுதிகளில் வறிய நிலையில் உள்ள நாடுகளுக்கு அதிக வளம் உள்ள நாடுகள் உதவுவதும் அவசியமாகிறது," என்று தெரிவித்தார்.

ஒரு கட்டத்தில் நாம் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். ஆனால், இப்போது நாம் சமூகத்தில் பாதிப்புக்கு எளிதில் ஆளாகக் கூடிய சமூகங்களுக்கு உதவும் நடவடிக்கைக்கு முன்னுரிமை தர வேண்டும். அதற்கே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

எனவே, பிரிட்டன், ஜி7 அமைப்பில் உள்ள நாடுகள் அவற்றின் தேவைக்கு மிகுதியாக உள்ள தடுப்பூசி டோஸ்களை இந்த குறைந்த வருவாய் ஆதாரம் கொண்ட நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

கடந்த வாரம் பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் மேட் ஹான்காக், பிரிட்டனில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்களை அனுப்புவதை விட தமது நாட்டில் உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி டோஸ்களை வழங்கவே முன்னுரிமை தருவோம் என்று கூறியிருந்தார்.

உலகின் பிற நாடுகள் தங்களுடைய தடுப்பூசி திட்டங்களை தெளிவாக அறிவித்துள்ளன. ஆனால், பிரிட்டன் வறிய நாடுகளுக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கோவேக்ஸ் திட்டத்துக்காக எவ்வளவு தடுப்பூசி டோஸ்களை வழங்கப்போகிறது என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. அதே சமயம், மிகுதியாக உள்ள கொரோனா டோஸ்களை தருவோம் என்று மட்டும் அந்நாடு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில் தேவைக்கு அதிகமான டோஸ்கள் தங்களிடம் இல்லை என்றும் பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் யூனிசெஃப் தடுப்பூசி தலைமை அதிகாரி கேப்ரானி, ஜி7 நாடுகளிடம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வறிய நாடுகளுக்கு வரும் கோடை காலம் முழுவதுமாகவும் இந்த ஆண்டின் மீதமுள்ள மாதத்திலும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"குறைந்த வருவாய் ஆதாரமுள்ள நாடுகளுக்கு ஆண்டு முழுமைக்கும் கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. காரணம், அவற்றால், ஒரே நேரத்தில் அதிகப்படியான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பராமரிக்கும் வசதி கிடையாது," என்று கேப்ரானி தெளிவுபடுத்தினார்.

கொரோனா தடுப்பூசியால் சில ஆண்டுகளுக்கு பிறகு பாதிப்பு வருமா? – சந்தேகங்களும் விடைகளும்

கொரோனா இருப்பது தெரியாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் என்னவாகும்? - சந்தேகங்களும், பதில்களும்

"அப்படி ஒரே நேரத்தில் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைத்தால், அது எந்த நோக்கத்துக்காக அனுப்பி வைக்கப்படுகிறதோ அது பயனற்றுப் போகலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

பல இடங்களில் லட்சக்கணக்கான தடுப்பூசி மருந்துகள் நீண்ட வாரங்களாக பயன்படுத்தாமல் வைத்திருப்பதால், ஒன்று அவை காலாவதியாகின்றன அல்லது பராமரிக்க முடியாத நிலையில் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நோக்கத்தை ஆதரித்தே ஜி7 நாடுகளுக்கு யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதர்களான பிரபலங்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள். அந்தக் கடிதத்தில், "உலக அளவில் வறிய நாடுகளுக்கு தடுப்பூசி டோஸ்களை யூனிசெஃப் வழங்கி வந்தாலும், இன்னும் 190 மில்லியன் டோஸ் மருந்துகளுக்கு தேவை இருக்கிறது," என்று கூறியுள்ளனர்.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஜி7 நாடுகள் தங்களுடைய தேவைக்குப் போக 20 சதவீத தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்கவுள்ளன. அப்படி செய்வதால் கோவேக்ஸ் திட்டத்துக்கு 150 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் இன்னும் பல நாடுகளில் பரவி வருகிறது. பல நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காணப்படுகிறது. இதனால் நாம் வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக எங்கிருந்து புறப்பட்டோமோ அங்கேயே மீண்டும் தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று யூனிசெஃப் தூதர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.

பிரிட்டனில் 400 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அந்நாட்டு அரசு ஆர்டர் செய்துள்ளது. அதைக்கொண்டு தமது மக்கள்தொகையின் பெரும் பகுதிக்கு பிரிட்டன் தடுப்பூசி போட்டுள்ளது. ஆனால், இப்போதும் பல நாடுகள் தங்களுடைய முதல் டோஸ் தடுப்பு மருந்துகளுக்கான சரக்கு பெட்டகத்துக்காக காத்திருக்கின்றன. உலகின் பல வறிய நிலை நாடுகள், கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் தானமாக வழங்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை மட்டுமே நம்பியுள்ளன.

ஒரு சில நாடுகள், இந்த ஆண்டு இறுதிக்குள் தாங்கள் உறுதியளித்த கொரோனா தடுப்பூசி மருந்துகளை கோவேக்ஸ் திட்டத்துக்காக வழங்குவதாக தெரிவித்துள்ளன. ஆனால், அந்த தடுப்பூசி மருந்தை இப்போதே வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த வாரம் ஜி7 உச்சிமாநாட்டில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "2022ஆம் ஆண்டு இறுதிக்குள்ளாக உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதிப்படுத்த இலக்கு நிர்ணயிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

ஆனால், கொரோனா தடுப்பூசி தொடர்பான பிரசாரக்குழுவினர் மற்றும் சில எம்.பி.க்கள், அந்த நடவடிக்கையை பிரிட்டன் இப்போதே தொடங்க வேண்டும் என்றும் பிரிட்டனுக்குள் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு தடுப்பு மருந்துக்கும் ஒரு டோஸை தானமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கோவேக்ஸ் திட்டத்துக்காக ஏற்கெனவே பிரிட்டன் அரசு 549 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இது தவிர பிற நாடுகளின் தேவைக்காக ஓக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராசெனெகாவும் சேர்ந்து தயாரித்த டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா தடுப்பூசி தேவை இலக்கை அடைவதற்கான முயற்சியில் பிரிட்டன் முன்னோடியாக திகழ்வதாக அந்நாட்டு அரசு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதியில் கோர்ன்வாலில் நடைபெறவுள்ள வருடாந்திர ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் மீண்டும் அவற்றின் தலைவர்கள் பேசவுள்ளனர். பிரிட்டன், அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகியவை கோவேக்ஸ் திட்டத்துக்கு எவ்வளவு டோஸ் தடுப்பு மருந்துகள் தானமாக வழங்கப்படும் என்பதை அறிவித்துள்ளன. பிரிட்டனும், கனடாவும் இன்னும் எழுத்து வடிவில் தங்களுடைய பங்களிப்பை உறுதிப்படுத்தவில்லை.


Add new comment

Or log in with...