டோக்கிய ஒலிம்பிக் பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா | தினகரன்

டோக்கிய ஒலிம்பிக் பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய அமெரிக்கா

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தி அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதன்பின்னர் வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது. பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24ம் திகதி தொடங்கி செப்டம்பர் 5ம் திகதி வரை நடைபெறும்.

ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் விளையாட்டு போட்டிகளை காணுவதற்காக தங்களது நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த மே 25ம் திகதி அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வை முன்னிட்டு ஜப்பானுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தி அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், ஜப்பானில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் பயணம் செய்வது மறுபரிசீலனை செய்து கொள்ளப்பட வேண்டும்.

ஜப்பானுக்கு செல்வதற்கு முன் தங்களுடைய சுகாதார நலன் சார்ந்த விடயங்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களுடன், அமெரிக்க மக்கள் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பயணம் பற்றி கலந்து விவாதித்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், 3ம் நிலை பயண சுகாதார நோட்டீசை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பின் எச்சரிக்கை பற்றி கவனமுடன் இருக்க வேண்டும். நோய் தொற்றுள்ள நபர்களிடம் தொடர்பு கொள்ளாமல் தவிர்ப்பது நலம் என்றும் தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...