பவள விழாக் காணும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி | தினகரன்

பவள விழாக் காணும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி

பவள விழாக் காணும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி-Platinum Jubilee for Akkaraipattu Muslim Central College

- தேசிய பாடசாலை 1946 - 2021

அறிமுகம்

75 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிய அரசினர் கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையே, இப்போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன் பவள விழா 10.06.2021 இல் கொண்டாடப்படுகிறது.

தோற்றம்

பவள விழாக் காணும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி-Platinum Jubilee for Akkaraipattu Muslim Central College1935 இல் அக்கரைப்பற்றில் உதயமான 'ஐனுல் ஹுதா' எனும் வாசிகசாலைச் சங்கமும், அதன் பின்னர் உருவாகிய 'ஹிதாயத்துல் இஸ்லாம்' இயக்கமும், இவ்வூரின் கல்வி, சமூக முன்னேற்றத்திற்காக சிந்தித்து செயலாற்றத் தொடங்கிய முக்கியமான அமைப்புகளாகும்.

இக்காலகட்டத்தில், Sir றாஸிக் பரீத் அவர்களது முயற்சி காரணமாக, சுபைத்து முகிதீன் என்பவர் பெரும்பாக இறைவரிப் பிரிவுக் காரியாதிகாரியாக (D.R.O) நியமனம் பெற்று அக்கரைப்பற்று வந்திருந்தார். தற்போதைய பிரதேச செயலாளருக்கு ஒப்பான பதவி இது. இப்பதவிக்கு முஸ்லிம் அதிகாரியொருவர் நியமனம் பெற்றமை, அன்றைய சூழலில் குறிப்பிடத்தக்கதொரு விடயமாக அமைந்திருந்தது.

இதே காலப்பகுதியில், விதானைகளாகவும் கிராமத் தலைவர்களாகவும் சிலர் புதிதாக நியமனம் பெற்றிருந்தனர்.

இவ்வாறு நியமனம் பெற்ற முஸ்தபா உடையார், ஏ.எல்.ஏ. முகையதீன், எம்.கே. உமறுலெவ்வை, எம்.ஐ.எம். மொஹிதீன் ஆகிய நால்வரும், சுபைத்து முகைதீன் DRO வைச் சந்திக்கச் சென்றனர்.

இது குறித்து மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் விதானையார் (Village Headman) அவர்களால் எழுதப்பட்ட ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஒரு முஸ்லிம் DRO அவர்களைப் போய்ச் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டோம். எங்கள் நான்கு பேரையும் முஸ்லிம் விதானைமார் எனக் கண்டதும் சந்தோஷப்பட்டார். அத்தோடு அக்கரைப்பற்று முஸ்லிம் - தமிழர்களின் நிலை, தராதரம், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய விடயங்களையும் அறிந்து கொண்டார்.

"இங்கு ஆங்கிலப் பாடசாலைகள் எத்தனை உள்ளன எனவும் கேட்டார். ஆங்கிலப் பாடசாலை ஒன்றுமில்லை எனப் பதிலளித்தேன். ஏனைய மூன்று விதானைமாரும் மௌனம் காத்தனர். எனது பதிலைக் கேட்டவுடன் கொஞ்ச நேரம் மௌனமாகவும் யோசனையாகவும் இருந்த DRO முகைடீன், கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் எத்தனை மைல் தூரம் எனக் கேட்க, நானே பதினைந்து மைல் எனப் பதிலளித்தேன். அதற்கு DRO அவர்கள், 15 மைல் தூரம் - அரை மணி நேரப் பிரயாணம். 65 வருடங்களுக்கு முன் கல்முனையில் ஆங்கிலப் பாடசாலை (கார்மேல்) பாத்திமா கொலிஜ் 1880 இல் நிறுவி இருக்க நான் கண்டேன். 65-70 வருடங்களுக்கு, அக்கரைப்பற்று மனிதர்களுக்கு ஓர் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பிக்க முடியவில்லையே என்றார். நாங்கள் மௌனம் சாதித்தோம்.

பவள விழாக் காணும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி-Platinum Jubilee for Akkaraipattu Muslim Central College

"பின் DRO அவர்களுடனான சம்பாஷணைகள் முடிந்தவுடன், நாங்கள் நால்வரும் வீடு நோக்கினோம். அக்கரைப்பற்று மக்களால் ஓர் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பிக்க இயலாத நிலை இருந்துள்ளதே என்றவாறான DRO அவர்களின் உறுத்தலான வசனங்களும், எங்கள் அனைவரினது மௌனமும் எமது நெஞ்சில் ஆழப்பதிந்த ஒன்றாயின. வரும் வழியில் இரவு எட்டரை மணியளவில், அருளானந்தரின் வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நிழல் வாகை மரத்தடியில் நாங்கள் நால்வரும் ஒன்றுகூடி 'ஒரு ஆங்கிலப் பாடசாலையை அமைப்போம்' என்ற திடசங்கற்பத்தோடு வீடு திரும்பினோம்."

"இத் திடமான முடிவோடு, நாங்கள் அனைவரும் மற்றும் ஹிதாயத்துல் இஸ்லாம் உறுப்பினர்களும் ஒன்றாகி துலாம்பரமான உபாயங்களை வகுத்துச் செயற்பட ஆரம்பித்தோம்."

ஹிதாயத்துல் இஸ்லாம் சபையானது, அக்காலத்தில் இவ்வூரின் துடிப்பான சமூக ஆர்வலர்களைக் கொண்டு இயங்கியது. கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையின் உருவாக்கத்தில் இவர்களது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இதன் தலைவராக மர்ஹூம் சீனிமுகம்மது வெவ்வை உடையார் (கல்விப்பணிப்பாளர் மர்ஹூம் எஸ்.எம்.எம்.ஏ. கபூர் அவர்களின் தந்தை) செயற்பட்டார்.

இவர்களது தொடர் முயற்சியின் ஒரு கட்டமாக, அப்போது அரசாங்க சபையில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதி அங்கத்தவராக இருந்த (Member of State Council - MSC) திருவாளர் எஸ். தருமரெத்தினம் வன்னியனாரை, மர்ஹூம்களான எம்.ஐ.எம். மொஹிதீன் (4 ஆம் குறிச்சி விதானை), எம்.பி. முகம்மதுத் தம்பி ஆசிரியர் ஆகியோர் சந்தித்தனர்.

ஹிதாயத்துல் இஸ்லாம் சபையின் அங்கத்தவர்களான இவ்விருவரும், அக்கரைப்பற்றில் ஒர் ஆங்கில கனிஷ்ட பாடசாலையை அமைத்துத் தருமாறு தருமரெத்தினம் வன்னியனாரிடம் கோரிக்கை விடுத்தனர். தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு இவ்வாறான ஆங்கிலப் பாடசாலையொன்று அவசியம் என்பதை மனங்கொண்ட தர்மரெத்தினம் வன்னியனார் விரைந்து செயலாற்றத் தொடங்கினார்.

ஏறத்தாழ ஒரு வார காலத்தின் பின்னர், ஹிதாயத்துல் இஸ்லாம் சபையின் உப செயலாளர் எம்.பி. முகம்மதுத் தம்பி ஆசிரியருக்கு, அவர் தந்தியொன்றை அனுப்பினார் . அதில் "உப்புக் குதம் அமைந்திருக்கும் இடத்தில் ஆங்கிலக் கல்லூரி தொடங்குவதற்கு இரு ஆங்கில ஆசிரியர்களுடன் 10.06.1946 ஆம் திகதி வருகிறேன். திறப்பு விழாவிற்கு உரிய ஆயத்த வேலைகளைச் செய்யுங்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தந்தியின் பிரகாரம், முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றிணைந்து, ஆயத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.

பவள விழாக் காணும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி-Platinum Jubilee for Akkaraipattu Muslim Central College

பாடசாலைத் திறப்பு விழா

அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலுக்கு அருகே அம்பாறை வீதியில் அமைந்திருந்த உப்புக் குதக் கட்டடத்தில்தான் (உப்பு களஞ்சியசாலை) இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

முழு ஊருமே கொண்டாடிக் களித்த ஒரு நிகழ்வாக இது இருந்துள்ளது. எம்.ஐ.எம்.மொஹிதீன் விதானை அவர்களின் பதிவுகளில் இத் திறப்பு விழா வைபவம், கீழ்வருமாறு அழகாக விபரிக்கப்பட்டுள்ளது.

"உப்புக் குதம் இருந்த கட்டட வளவு பந்தல்கள் யாவும் குருத்தோலையாலும் வண்ணத் தாள்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. (ஹிதாயத்துல் இஸ்லாம்) சங்க அங்கத்தவர்கள் அனைவரும் விழாவுக்குச் சமுகமளித்திருந்தனர்.

"இத் திறப்பு விழாவுக்கு உயர் திரு தருமரெத்தினம் MSC அவர்களுடன் அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களும் வந்திருந்தார். இவ்விருவரும் இரு யானைகளில் ஊர்வலம் வந்த காட்சி, அக்கரைப்பற்று என்றுமே கண்டிராத ஒரு புதுமையாகும். இதிற் குறிப்பிடத்தக்கதொரு விடயம் யாதெனில், MSC அவர்கள் ஊர் வரும்போது அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தார்.

கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபராக இருந்த மர்ஹூம் அஸீஸ் அவர்களைக் கொண்டே பாடசாலையைத் திறக்கப் பண்ணினார். MSC அவர்களின் தனி விருப்பம் இது."

"தருமரெத்தினம் MSC அவர்கள், S.A.ஹுஸைன், S.B.C. ஹலால்டீன் எனும் இரு முஸ்லிம் ஆங்கில ஆசிரியர்களுடன் வருகை தந்திருந்தார். இவ்விரு ஆசிரியர்களும் மாலையிட்டு வரவேற்கப்பட்டனர்.

"தலைவர் சீனி முகம்மது வெவ்வை உடையார் தலைமை வகித்தார். அரசாங்க சபை அங்கத்தவர் திருவாளர் S.தருமரெத்தினம் வன்னியனார் MSC (இப்போதைய பரிபாஷையில் MP) பூமாலை சூட்டி வரவேற்கப்பட்டார். பட்டாசு வெடிகளின் ஓசையும் பெண்களின் குரவை ஓலியும், பொல்லடி விளையாட்டுக் காட்சியும் சீனடி சிலம்படி விளையாட்டுக்காரர்களின் கோலாகலமான ஆரவாரமும் என ஒரே விழாக் கோலமாக விளங்கியது."

"10.06.1946 அன்று பி.ப. 4 மணிக்கு ஆங்கிலப் பாடசாலை 'கிறாஅத்' - 'துஆ' பிரார்த்தனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. சபைக்கு சோடா, மிட்டாய், தாம்பூலத்துடன் புகைத்தலும் விநியோகிக்கப்பட்டு, மகிழ்ச்சி ததும்ப 'அல்லாஹு அக்பர்', அல்லாஹு அக்பர் வொலில்லாஹில் ஹம்து' எனத் தக்பீர் ஸலவாத்து முழங்க, அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களால் திறப்பு விழா நடந்தேறியது."

இப் பாடசாலையின் உருவாக்கத்தில் தருமரெத்தினம் வன்னியனாரின் செயலூக்கம் மிக்க பங்களிப்பை இவ்வூர் மக்கள் மிகுந்த நன்றியுடன் நினைவு கூர்கின்றனர். அதேபோல இதில் Sir றாஸிக் பரீத் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத் தக்கது. Sir றாஸிக் பரீத் அவர்களும் கலாநிதி T.B.ஜாயா அவர்களும், அக்காலத்தில் பாடசாலையைத் தரிசித்தமை பற்றிய சம்பவத் திரட்டுப் பதிவுகள் உள்ளன.

பாடசாலையின் இடமாற்றம்

இவ்விடத்தில் பாடசாலை தொடர்ந்தும் இயங்கி வந்தது. எனினும், பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோரும், இங்கு நிலவும் இடப் பற்றாக்குறை குறித்து மிகுந்த கரிசனை கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக, ஊரின் மத்தியிலிருந்த இவ் உப்புக் குதத்திலிருந்து, ஊரின் மேற்குப் புறமாக தில்லையாற்றின் மருங்கில் இருந்த விசாலமான நிலப்பரப்பான நரிப்புட்டிக்கு இப்பாடசாலை இடமாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக அப்போது கடும் வாதப் பிரதிவாதங்கள் இருந்தன. இருப்பினும், காலவோட்டத்தில் இதுவே தொலைநோக்குள்ள முடிவாகத் தெரிகிறது.

1946.06.10 முதல் 1952.12.31 வரை உப்புக் குதத்தில் இயங்கிய பாடசாலை, 1953.01.01 முதல் தற்போது பாடசாலை இருக்கும் நரிப்புட்டியில் இயங்கத் தொடங்கியது.

120 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, அதில் 5 வகுப்பறைகள் அமைக்கப்பட்டன.

1946 இல் 26 மாணவர்களோடு இயங்கிய இப்பாடசாலை, 1953 வரை 125 மாணவர்களையே கொண்டிருந்தது.

இந்த இடமாற்றத்தினால் மாணவர் தொகையில் மேலும் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது.

தமக்கு அருகிலுள்ள பழைய பாடசாலைகளான எம்.எம். ஸ்கூல், ஆர்.சீ.எம். ஸ்கூல் போன்ற பாடசாலைகளில் கல்வி கற்பதையே அப்போது பலரும் விரும்பினர்.

இதனால், மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அப்போதைய அதிபர் வீ.நாகையா மாஸ்டர் பெரும் முயற்சி எடுத்தார். இதில் பலரும் அவருக்கு உதவியாக இருந்தனர்.

இங்கு நியமனம் பெற்ற சங்கீத ஆசிரியர் ஏ. எம். இஸ்மாயில் அவர்கள், மாணவர்களைச் சேர்க்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார். பெற்றோரையும் மாணவர்களையும் சந்தித்து அவர்களை ஊக்குவித்தார். இவரது உடனிருப்பு, அதிபர் நாகையா மாஸ்டருக்கு பெரும் உற்சாகத்தையும் உந்துசக்தியையும் அளித்தது. சங்கீத மாஸ்டரின் பங்களிப்பு இல்லாவிட்டால் பாடசாலை தூர்ந்து போயிருக்கும் என்று சொல்கிறார்கள்.

அக்கரைப்பற்றின் கல்வி வளர்ச்சியில், மட்டக்களப்பைச் சேர்ந்த வீ. நாகையா மாஸ்டரின் காலத்தை பொற்காலம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர். அவரை இவ்வூர் மக்கள் பெரிதும் மதிக்கின்றனர்.

மாணவர்களது எண்ணிக்கையை அதிகரிப்பதில், அக்காலப் பெற்றோரினதும் மூத்த சமூக ஆர்வலர்களினதும் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மிக முக்கியமானவை.

இதில் மர்ஹூம்களான மொஹிதீன் கங்காணியார், லெப்பைக்கனி புலவர், மரைக்கார் தம்பி (VC அங்கத்தவர்), முகம்மதிஸ்மாயில் முஅத்தினார், சீனி முஹம்மது ஓடாவியார், சாலி ஓடாவியார், சீனி முகம்மது மரைக்காயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாணவர் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியதால், 1958-59 களில் கட்டிடம் போதாத நிலை ஏற்பட்டது. அப்போது மொஹிதீன் கங்காணியார், தனது வீடொன்றைப் பிரித்து வந்து, பெரிய கட்டிடத்திற்குக் கிழக்குப் பக்கமாக வகுப்பறையொன்றை அமைத்துக் கொடுத்தமை மறக்க முடியாத வரலாற்றுப் பதிவாகும்.

விஞ்ஞான கூட சர்ச்சை

1958 இன் அரச கல்விக் கொள்கை, சிரேஷ்ட பாடசாலைகளின் விஞ்ஞானக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியது. இதன் அடிப்படையில் சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் (Senior School Certificate - SSC) சிறந்த அடைவுகளைப் பெற்ற பாடசாலைகளே, விஞ்ஞான ஆய்வு கூடங்களைப் பெற்றுக் கொள்ளத் தகுதியானவையாகக் கருதப்பட்டன.

1954 இற்குப் பின்னுள்ள பருவங்களில் குறித்த இப்பரீட்சைகளில் முதலாம் தர- இரண்டாம் தரப் பிரிவுகளில், இப் பாடசாலையிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவர்கள் சித்தியடைந்தனர்.

இதனால் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை அமைக்க அப்போதைய அரசு அனுமதியளித்திருந்தது. இதற்கமைய 09.12.1958 அன்று அப்போதைய தலைமையாசிரியர் திரு வீ.நாகையா மாஸ்டர் தலைமையில் பாடசாலை சமூகத்தினர் இதற்கான அடிக்கல்லை நட்டி கட்டிட நிர்மாணத்தை ஆரம்பித்து வைத்தனர்.

எனினும், வெளியூர் அரசியல்வாதிகளின் குரோதம் காரணமாக, இவ் விஞ்ஞான ஆய்வு கூடம் முளையிலேயே கருக்கப்பட்டது.

ஊர் மக்களிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டிக்கும் வகையில், "வீறு கொண்டெழுவோம். விஞ்ஞான கூடம் பெறுவோம்" போன்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் பொதுமக்களது பங்கேற்புடன் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. புதுப்பள்ளி வீதி - பிரதான வீதி - சந்தைச் சதுக்கத்தின் ஊடாக இவ் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்தேறியது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருந்த உயர்திரு வீ.நாகையா அவர்கள், அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானார். அவரை உதவி ஆசிரியராகப் பதவி இறக்கி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்தனர்.

அக்கரைப்பற்று மக்கள் மிகவும் மதித்த நாகையா அதிபரினதும் ஏனைய சில ஆசிரியர்களதும் இடமாற்றத்தால் SSC பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு பல சவால்களைக் கடந்தே இப்பாடசாலை வளர்ந்து வந்துள்ளது.

பாடசாலையின் வரலாற்றில் முக்கிய கட்டங்கள்.

1946 இல் இப் பாடசாலை அரசினர் கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலையாக (Govt. Junior English College) தோற்றம் பெற்றது.

பின்னர் 1958 இல் அரசினர் சிரேஷ்ட பாடசாலையாகவும் ( Govt. Senior School), 1963 இல் மகா வித்தியாலயமாகவும்,1979 இல் மத்திய மகா வித்தியாலயமாகவும் தரமுயர்ந்தது.

29.09.1992 இல் தேசியப் பாடசாலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டது மிக முக்கியமானதோர் அடைவாகும். இதுவே கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது தேசியப் பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2013 இல் 1 ஏபி சுப்பர் (1AB Super) பாடசாலை என்ற அங்கீகாரத்தைப் பெற்றமை இன்னொரு முக்கியமான அடைவாகும்.

உயர்தரப் பிரிவுகளும் ஏனைய அடைவுகளும்

1960 இல் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 1969 இல் வணிகப் பிரிவும் 1971 இல் உயர்தர விஞ்ஞானப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பயனாக பல்வேறு மாணவர்கள் பல்கலைக்கழக மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்று, கல்வியிலும் சமூக பொருளாதார வாழ்விலும் பெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்.

1960 களில் இங்கு விஞ்ஞானக் கல்வி சிறப்பாகப் போதிக்கப்பட்டது. அக்காலத்தில் விஞ்ஞான ஆசிரியராக நியமனம் பெற்று வந்திருந்த மாத்தளையைச் சேர்ந்த ஏ.சீ.எம்.செய்றுதீன் B.Sc அவர்களது அர்ப்பணிப்பு மிக்க பன்முகப் பங்களிப்பை பலரும் பாராட்டிப் பேசுகின்றனர்.

பாடவிதான செயற்பாடுகளில் மட்டுமல்லாது, இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் இப்பாடசாலை பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது.

இதேபோல பௌதீக அபிவிருத்தியிலும் பாரிய முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

1973 இல் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களுக்கு இப்பாடசாலையில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிபர்களின் பணி

இதுவரை இருபத்து நான்கு அதிபர்கள் (தற்போதைய அதிபர் உட்பட) இங்கு கடமையாற்றியுள்ளனர்.

இக் கலாசாலையின் வளர்ச்சியில், முன்னாள் அதிபர்களான திரு. லீனா, திரு. வீ.நாகையா, ஜனாப் ரீ.இப்றாலெப்பை, முன்னாள் பொத்துவில் முதல்வர் ஜனாப் எம்.ஐ. உதுமாலெப்பை, முன்னாள் கொத்தணி அதிபர் ஜனாப் எம்.ஏ.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமைத்துவ ஆற்றல்களும் சாதனைகளும் மிகவும் சிலாகித்துச் சொல்லத்தக்கவை. கொத்தணி அதிபர் எம்.ஏ.உதுமாலெப்பை அவர்களே இங்கு அதிகூடிய காலம் அதிபராக இருந்துள்ளார்.

இதேபோல அதிபர்களான ஏ.அப்துல் அஸீஸ், ஏ.ஆதம்லெப்பை, எம்.ஐ.எம்.சஹாப்தீன் போன்றோரது பணிகளும் கவனத்திற்குரியவை.

குறிப்பாக எம்.ஐ.எம். சஹாப்தீன் அதிபரது காலத்தில், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் உதவியுடன், பெருமளவு பௌதீக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி இடம்பெற்றது.

முடிவுரை

இப்பாடசாலையில் கற்ற மாணவர்கள் பலர், தேசிய அளவிலும் சர்வதேச மட்டத்திலும் பல உயர் அடைவுகளைப் பெற்றுள்ளனர்.

1946 இல் இப்பாடசாலையில் சேர்ந்த முதல் மாணவரான ஜனாப் எம்.எஸ். அலாவுதீன் ஆசிரியர் இவ்வருடம் இறையடி சேர்ந்து விட்டதை இங்கு பதிவு செய்வது பொருத்தமானது.

அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், வலயத் தலைவர்கள், எண்ணற்ற ஆசிரியப் பெருந்தகைககள், மாணவர்கள், மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், செல்வந்தர்கள், சிற்றூழியர்கள், கல்விசாரா ஊழியர்கள் போன்ற பலதரப்பினரது இடையறாத அர்ப்பணிப்பும் பங்களிப்புமே, இக் கல்லூரியின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் பெருமளவு பங்களித்திருக்கிறது. அதனை இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறோம்.

கடந்த 75 வருட காலத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலேயே இப் பாடசாலை வளர்ந்து வந்துள்ளது.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களினதும், எண்ணற்ற உள்ளூர் மாணவர்களினதும், இங்கு கல்வி கற்ற கணிசமான வெளியூர் மாணவர்களினதும், சமூகத்தினதும் ஒளிவிளக்காக இக்கல்லூரி திகழ்கிறது.

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் பவளவிழாக் கொண்டாட்டத்தில் பாடசாலை சமூகத்தினரும், ஊரவர்களும், பழைய மாணவர்களும் பெருமகிழ்ச்சி கொள்கின்றனர். இங்கு கல்வியும் கலையும் பண்பாடும் செழிக்க வேண்டும். அதற்கு இப் பாடசாலை செயலூக்கத்துடன் தொடர்ந்தும் பங்களிக்க வேண்டும் என்பதே எல்லோரதும் வேணவாவாகும்.

உசாத்துணை:

1. மர்ஹூம் எம்.ஐ.எம்.மொஹீதீன் அவர்களது கையெழுத்துப் படி. (இதனை வாசித்துப் பதிவு செய்தவர் கே.எம்.நஜுமுதீன்).
2. முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.எம்.நஜுமுதீன் எழுதிய அச்சில் வெளிவராத கட்டுரை.
3. பாடசாலையின் பொன்விழா மலர்
4. பாடசாலையின் இணையத் தளம்

(இக்கட்டுரை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் நாட்டுக் கிளையினரின் (MCC PPA, Qatar Chapter) வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது)

- கே.எம். நஜிமுதீன்
(முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்)
- சிராஜ் மஷ்ஹூர்


Add new comment

Or log in with...