நாட்டையே நான்கு சுவர்களுக்குள் முடக்கியுள்ள கொடிய கொரோனா! | தினகரன்

நாட்டையே நான்கு சுவர்களுக்குள் முடக்கியுள்ள கொடிய கொரோனா!

உலகம் பூராவும் 172 மில்லியன் மக்களை தொற்றாளர்களாக்கி, 3.7 மில்லியன் மக்களின் உயிரைப் பறித்த covid-19 வைரஸால் பாதிப்படைந்த இலங்கையர்களின்

எண்ணிக்கை இவ்வார இறுதியில் இரண்டு இலட்சத்தை அடைந்துள்ளது. அத்துடன் தற்போது வைரஸ் விரைவாக பரவுவதையும் காணக் கூடியதாக உள்ளது.

கடந்த மூன்றாம் திகதி 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக அளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். அந்த எண்ணிக்கை 1004 ஆகும்.

கடந்த 2ஆம் திகதி நிறைவடைந்த 10 நாட்களுக்குள் இந்நாட்டில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 296 ஆகும். அதேவேளை வார இறுதியில் மரணங்களின் எண்ணிக்கை 1600 ஐ தாண்டி இருந்தது.

அவ்வாறு காணப்பட்ட போதிலும் நாடு பூராவும் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை காரணமாக எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் தொற்றால் மரணம் அடைந்த நபர் ஒருவரின் குடும்ப அங்கத்தவர்கள் 11 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதாக கடந்த 4ஆம் திகதி அறிக்கைகள் தெரிவித்தன .

இதைத் தவிர தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத்தில் கொரோனா தொற்றால் மரணமடைந்த நபர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தொற்றுக்கு ள்ளாகி உள்ளார்கள். இந்த அறிக்கைகள் மூலம் வைரஸானது விரைவாக பரவுகின்றது என்ற முடிவே பெறப்படுகிறது.

கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை இம்மாதம் 8ஆம் திகதி தொடக்கம் மேலும் 12 மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டிருந்தார். அம்மாவட்டங்களாவன மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுளை ,அநுராதபுரம், புத்தளம், அம்பாறை ,மட்டக்களப்பு ,மொனராகலை மற்றும் பொலன்நறுவை ஆகியனவாகும்.

அம்மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகளவு பாதிக்கப்படக் கூடிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. மேல் மாகாணத்திற்கு அடுத்ததாக குருநாகல் ,மாத்தறை, காலி ,இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகின்றது.

கொரோனா தொற்றால் கடந்த முதலாம் திகதி களுபோவில வைத்தியசாலையில் ஏழாவது கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் நிகழ்ந்ததாக அறிக்கைகள் தெரிவிப்பதாக குடும்ப சுகாதார பணிமனையின் தாய் மற்றும் சிறுவர் சுகாதார பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்திரமாலி த சில்வா கூறினார். தொற்றுநோய் தொடர்பான ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய கர்ப்பிணிப் பெண்களுக்கு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சைனோபாம் தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். சுகாதார அமைச்சால் அதற்கான சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சிக்கல்கள் உடைய கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு ஒக்சிஜன் மூலம் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் நூற்றுக்கு 120 வீதமாக அதிகரித்துக் காணப்பட்டது என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கொவிட் தொடர்பாடல் மத்திய நிலையத்தின் தரவுகளுக்கு அமைய கடந்த மே 27ஆம் திகதி வரை வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் உதவியினால் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 149 ஆகும். மே 28 அந்த எண்ணிக்கை 230 ஆகவும், மே 29ஆம் திகதி 237 ஆகவும், 30ஆம் திகதி இவ்வாறான நோயாளர்களின் எண்ணிக்கை 310 ஆகவும் அதிகரித்திருந்தது. மே 31ஆம் திகதி இந்நோயாளர்களின் எண்ணிக்கை 330 ஆகவும் அதிகரித்துக் காணப்பட்டது.

பயணத் தடையை கடுமையாக்கியதன் மூலம் தொற்றார்களின் எண்ணிக்கை குறைவடையுமா என்ற வினா இங்கே எழுகின்றது. இரண்டு வார காலத்துக்கு பயணத் தடையை கடுமையாக அமுல் செய்தால் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டளவு குறையக் கூடும் என இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

ஆனால் இக்காலப் பகுதியில் மக்கள் முடிந்தளவு வீடுகளில் தங்கியிருந்து மற்றும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சுகாதாரப் பிரிவினருக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இரண்டு வார கால கடுமையான பயணத் தடைக்குப் பின்னர் கிடைக்கும் தரவுகளை ஆராய்ந்து எதிர்கால நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

சீனாவில் தயாரிக்கப்படும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் மற்றும் பைசர் தடுப்பூசிகள் 50 இலட்சமும் சில மாதங்களில் இந்நாட்டிற்கு கிடைக்க உள்ளதாக ஓளடத உற்பத்தி வழங்கல் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அதேவேளை பைசர் தடுப்பூசி 3 இலட்சம் எதிர்வரும் ஜூலை மாதமளவில் இந்நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அனைத்து தடுப்பூசிகளும் கிரமமாக மக்களுக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் ஒரு கோடி 40 இலட்சம் மற்றும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் 10 இலட்சமும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதோடு அதற்காக 22 கோடி அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவசரத் தேவைக்கு முகங்கொடுக்க அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பு அதிகளவில் தொடர்ந்து காணப்பட்டால் நாட்டில் பெரும் சிக்கல் நிலைமை தோன்றும் என சில வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இலங்கையில் தற்போது நாளந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அது எதிர்வரும் வாரங்களில் அதிகரித்தால் இருபதாயிரம் தொடக்கம் 30 ஆயிரம் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி நேரிடும். தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் மூன்றாவது அலை வேகமாக பரவும் மற்றும் விரைவில் தொற்றும் வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனால் அதிகளவில் தொற்று ஏற்பட்டு ஒக்சிஜன் வழங்கல் மூலம் அதிகமானோருக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என சுகாதார பிரிவு அரசுக்கு தெரிவித்துள்ளது.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளை மாகாண மட்டங்களில் அமைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அவ்வாறான அதிதீவிர சிகிச்சை பிரிவில் நூறு நோயாளிகளுக்காவது சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 25 வைத்தியசாலைகளில் இவ்வாறான அதிதீவிர சிகிச்சைப் பிரிவை அமைக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் 149 கொரோனா சிகிச்சை மையங்கள் காணப்பட்டன. அவற்றை இவ்வாரத்தில் 168 ஆக அதிகரிக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இந்நாட்டில் முதற்தடவையாக பிக்குகளுக்கான சிகிச்சை மத்திய நிலையம் கடந்த முதலாம் திகதி மல்வத்தை அஸ்கிரி உபய மக விகாரிய அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் தலைமையில் திறக்கப்பட்டு சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கண்டி தேசிய வைத்தியசாலை,பேராதனை போதனா மருத்துவமனை, கண்டி வைத்தியர்கள் சங்கம் மூலம் இந்த பிக்குகளுக்கான கொரோனா சிகிச்சை மத்திய நிலையம் செயல்படுகின்றது. இச்சிகிச்சை மையத்தில் ஒரே நேரத்தில் 50 பிக்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளதோடு அம்புலன்ஸ் வண்டி ஒன்றும் சிகிச்சை நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதிக வீரியம் உள்ள வைரஸ் மூலத்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி இயல், கல உயிரியல் கற்கைகள் பிரிவு தலைவர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்தார். இலங்கையின் பல பாகங்களிலிருந்து தொற்றாளர்களிடம் எழுமானமாக சேகரிக்கப்பட்ட96 சவ்வு படலங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகளை ஒரு வார காலத்துக்குள் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான ஆய்வுகள்ஏற்கனவே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.அதன் மூலம் உலகில் பரவிய 5 வகையான கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

வைரஸ் வளிமண்டலத்தில் பரவி உள்ளது எனக் கூறுவது கட்டுக்கதையாகும் என வைரஸ் தொடர்பான பிரபல விஞ்ஞானியான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். வைரசுக்கு வெளி சூழலில் வளர்ச்சி அடையும் திறனில்லை. அவை உயிரி சவ்வு படலங்களிலேயே வளர்ச்சி அடைவதாக அவர் சுட்டிக் காட்டினார். சாதாரண வெப்பநிலையில் அவை அழிவதோடு, தொற்றுக்குள்ளான நபரின் எச்சில் துளிகள் மூலம் மற்றொரு நபரின் சுவாசத் தொகுதியைத் அடையும் திறன் வாய்ந்தது எனவும் முகக்கவசம் அணிவதன் மூலமும் இடைவெளியை பேணுவதன் மூலமும் அவ்வாறு வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

ஆயினும் பகுறிப்பிட்ட சில மேற்பரப்புகளில் சிறிது நேரம் தங்கி இருக்க முடியும் என்பதால் கைகளை கழுவுவதன் மூலம் வைரஸ் அழிக்கப்படும் என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் கிளினிக்குகளுக்கு செல்ல முடியாத நோயாளிகளின் நன்மை கருதி அரச வைத்தியசாலை கிளினிக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கே பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்று 4 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சும் தபால் திணைக்களம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

அதன்படி அரச வைத்தியசாலை கிளினிக்கில் பதிவு செய்துள்ள நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான மருந்து வகைகள் வெவ்வேறாக பொதி செய்யப்பட்டு தபால் நிலையங்களுக்கு ஊடாக அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நோயாளர்கள் பதிவு செய்யும் போது வழங்கப்பட்ட முகவரிக்கு மருந்துகளை விநியோகிக்க உள்ளதாகவும், முகவரியில் மாற்றம் இருந்தால் அதனை உடனடியாக குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அறிவிக்கும்படியும் சுகாதார அமைச்சு நோயாளிகளுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை 0720720072 அல்லது 0720606060 என்னும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சீனாவின் சினோவாக் நிறுவனம் தயாரிக்கும் சினோவாக் தடுப்பூசி covid-19 இற்கான பாதுகாப்பான, பலன் தரக் கூடிய, தரமான, அவசர தேவைகளின் போது பாவிக்கக் கூடிய தடுப்பூசி என உலக சுகாதார அமைப்பு அண்மையில் அறிவித்துள்ளது.

அதன்படி உலக சுகாதார அமைப்பின் அனுமதி பெற்ற இரண்டாவது சீன தடுப்பூசி இதுவாகும். மற்றைய தடுப்பூசி இலங்கையிலும் பயன்படுத்தப்படும் செனோபாம் தடுப்பூசி ஆகும் . இவ்விரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தடவைகள் செலுத்தப்பட வேண்டியவைகளாகும். இத்தடுப்பூசிகளை இலகுவாக களஞ்சியப்படுத்த முடியும் என்பதால் குறைந்த வளங்களை உடைய பிரதேசங்களுக்கும் மிகவும் பொருத்தமானது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டுகின்றது.

covid-19 பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கி சிவப்பு அறிவித்தலை அந்நாடு விடுத்துள்ளது. இந்த புதிய சட்ட விதியை எதிர்வரும் எட்டாம் திகதியிலிருந்து அமுல்படுத்த பிரித்தானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையைத் தவிர அப்பட்டியலில் ஆப்கானிஸ்தான்,பஹரைன்,எகிப்து, கோஸ்டாரிகா, சூடான், டிரினிடாட்மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இலங்கையையும் உள்ளடக்கியதாக அண்மையில் அறிக்கைகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவிடம் மேலதிகமாக உள்ள covid-19 தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கத்துக்கு பல தரப்பினரும் கடும் அழுத்தத்தை அளித்திருந்தார்கள். தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட நிர்வாகத்தினர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும் முகமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கடந்த 3 ஆம் திகதி தடுப்பூசிகளை விநியோகிக்கும் திட்டமொன்றை அறிவித்தார். தடுப்பூசி விநியோகத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் ஏசியா, லத்தீன் அமெரிக்க நாடுகள், கரீபியன் வலயம் மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு 25 மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. அதன் மூலம் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினி, தாய்வான் போன்ற நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். ஜூன் மாத இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சுரேக்கா நில்மினி இலங்கோன்
(தமிழில்: வீ.ஆர்.வயலட்)


Add new comment

Or log in with...