கிழக்கின் முன்னணி பாடசாலையாக திகழும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி

இன்று ஜூன் 10 பவள விழா

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஏழு தசாப்தங்களுக்கு மேலாக முதன்மையான கல்விக் கூடமாக திகழ்ந்து வருகின்றது. கிழக்கின் முதலாவது தேசியக் கல்லூரியாக அது இயங்குகின்றது. 1946.06.10ஆம் திகதி 26 மாணவர்களுடன் ஆரம்பமான இக்கல்லூரி இன்றுடன் 75வது அகவையை பூர்த்தி செய்துள்ளது.

இக்கல்லூரியின் ஸ்தாபக அதிபரான எஸ்.ஏ ஹூஸைனின் நிர்வாகத்தோடு ஆரம்பமான இப்பாடசாலை, இற்றை வரையும் 24 அதிபர்களின் சீரிய நிர்வாகத்துடனும் அர்ப்பணிப்புகளுடனும் கிழக்கு மாகாணத்தின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்றது.

1946 இல் கனிஷ்ட வித்தியாலயமாக உருவான இக்கல்லூரி, 1958 சிரேஷ்ட கல்லூரியாக உயர்ந்து 1963இல் மகாவித்தியாலயமாக வளர்ச்சியடைந்தது. 1979இல் மத்திய மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்ட இக்கல்லூரி, 1992இல் கிழக்கின் முதலாவது தேசியப் பாடசாலையாகியது.

2013 இல் 1ஏபி விசேட தரம் (1ஏபி சுப்பர்) என வளர்ச்சியடைந்தது. இக்கல்லூரியை வளர்த்தெடுத்த அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டியவர்களாவர்.

இக்கல்லூரியில் 1960 இல் உயர்தர கலைப்பீடமும், 1969 இல் உயர்தர விஞ்ஞான பிரிவுகளும் ஆரம்பிக்கப்பட்டன. 1964 முதல் பல்கலைக்கழகங்களுக்கு நன்மாணாக்கரை அனுப்பி வருகின்றது. பாடவிதான செயற்பாடுகளில் மட்டுமன்றி இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் இலங்கையிலும், சர்வதேசத்திலும் தன் காலடிகளை பதித்துள்ளது.

அரசியல் பிரமுகர்களினதும் நலன்விரும்பிகளினதும் பாடசாலை எஸ்.டி.ஈ.சி, பி.பி.ஏ மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு கிளைகளின் பரோபகாரங்களினதும் உதவியினால் பல்வேறு பௌதீக வளங்களையும் பெற்று இக்கல்லூரி அபிவிருத்தி அடைந்துள்ளது. அவற்றில் ஆராதனை மண்டபம், நீச்சல் தடாகம், வகுப்பறை கட்டடங்கள் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

தற்போதைய கொவிட்-19 நிலைமையிலும் கூட 'சூம்' நவீன தொழில்நுட்பம் ஊடாக மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. இங்கு கற்ற அநேகர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.

பவள விழாக் காணும் இக்கல்லூரியின் அபிவிருத்தி சங்க நிறைவேற்றுக் குழுச் செயலாளரான பொறியியலாளர் என்.ரி.எம். சிராஜுதீன் குறிப்பிடுகையில், “இக்கல்லூரி, சுயச்சார்பு பொருளாதார முறைமையும் வலுவான அரசியல் இருப்பும், இயற்கைச் செழிப்பும், கவின் கலையில் சிறப்பும் பெற்றுள்ள பிரதேசத்தில் அமைந்திருப்பதை இக்கல்லூரியின் தோற்றமே வெளிப்படுத்தி நிற்கின்றது” என்றார்.

இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் எம்.என். நஜுமுதீன் கூறுகையில், மாணவர் சமூகத்திற்கு வழிகாட்டும் வளவாளர்களையும், அர்ப்பண சிந்தனையாளர்களையும், ஆளுமைமிக்க அரும் தொண்டர்களையும், சாதனையாளர்களையும் கொண்டு ஒரு குழுமமாக இருப்பது இக்கல்லூரியின் உறுதியான வெற்றியின் இரகசியம்' என்கிறார்.

இக்கல்லூரியின் தற்போதைய அதிபரான ஏ.பி.முஜீன் குறிப்பிடும் போது, 'உயிரோட்டமுள்ள ஒரு சமூகத்தின் உருவாக்கத்திற்காக பிறப்பெடுத்த இக்கல்லூரியின் 75 வருட அனுபவத்திற்கு அதன் அடைவுகளும், சாதனைகளும் சிறந்த சான்றுகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. 75 வது வருடப் பூர்த்தியை நிறைவு செய்யும் மகிழ்ச்சிக்குரிய இத்தினத்தின் பதிவு தினகரன் தேசியப் பத்திரிகையின் இதழில் மலர்வது இக்கல்லூரியின் வரலாற்றில் பெருமைக்குரிய ஒரு விடயமாகும்’ என்றார்.

“நவீன உலகின் பன்முகத்தன்மை வாய்ந்த சவால்களுக்கு முகம் கொடுப்பதுடன், ஆரோக்கியமான பல மாற்றங்களையும் இக்கல்லூரி தன்னுள் கொண்டுள்ளது. கொவிட் -19 தொற்றின் சவால்களுக்கு மத்தியிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றின் ஊடாக மாணவர்கள் பயன் பெற்று, தம் சுயதேடலையும் அயராத முயற்சியையும் கைக்கொண்டு தமது எதிர்காலத்தை வெற்றி கொள்ள வேண்டும்” என்றும் அதிபர் ஏ.பி.முஜீன் மேலும் குறிப்பிட்டார்.

இப்பாடசாலையின் முன்னேற்றத்தில் அதிபர், ஆசிரியர் குழாத்தினர், பாடசாலை அபிவிருத்திக்குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், மாவட்ட அரசியல்வாதிகள், உள்ளிட்டோர் தம் அர்ப்பணிப்பை நல்கி இக்கல்லூரியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். அவர்களது பணிகளும் சேவைகளும் என்றும் மறக்கப்பட முடியாதவையாகும்.


Add new comment

Or log in with...