தடுப்பூசி பகிர்வதில் அரசியல் பாகுபாடு

பிரதமர் மோடியை சாடும் கே.எஸ். அழகிரி

மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையிலும், தொற்று எண்ணிக்கை அடிப்படையிலும்தான் தடுப்பூசி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல் பாகுபாடு காட்டுவதன் மூலம் பிரதமர் மோடி கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு விரோதமாகவும், அரசியல் பாகுபாட்டோடும் நடந்து கொள்கிறார் என கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று விடுத்துள்ள அறிக்கையில்:

“2020 ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த திங்கட்கிழமை வரை கொரோனா தொடர்பாக 9 முறை நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். இதற்கு முன்பு 8 முறை அவர் உரையாற்றியதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. ஒவ்வொரு முறையும் மக்களை எச்சரிக்கும் பிரதமர் மோடி, தானே முன்னெச்சரிக்கையாக இல்லாமல் தடுப்பூசி உற்பத்தியில் கோட்டை விட்டுவிட்டார். அதன் காரணமாக, இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம்.

ஜூன் 21ஆம் திகதி முதல் புதிய தடுப்பூசிக் கொள்கை அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது உரையில் இதுவரை நாடு முழுவதும் 23 கோடியே 18 இலட்சம் பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதில் 4 கோடியே 51 இலட்சம் பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி கூறுவது மாயாஜால வித்தை போலிருக்கிறது. மாநிலங்களுக்குத் தடுப்பூசி வழங்குவதிலும் மிகுந்த பாரபட்சத்தை மத்திய அரசு காட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி போடத் தகுதியுள்ளவர்களில் 13.8 சதவிகிதத்தினருக்கு ஒரு டோஸும், 3.6 சதவிகிதத்தினருக்கு இரண்டு டோஸும் போடப்பட்டுள்ளன. ஆனால், தேசிய சராசரியாக ஒரு டோஸ் போட்டவர்கள் 20 சதவிகிதமும், இரண்டு டோஸ் போட்டவர்கள் 3.3 சதவிகிதமாகவும் உள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி போடத் தயக்கமான நிலை இல்லாமல் அனைவரும் ஆர்வத்துடன் போட்டுக் கொள்ள முனைகின்றனர். ஆனால், மத்திய அரசு குறைவான தடுப்பூசிகளைத் தமிழகத்திற்கு ஒதுக்குவதால் தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இத்தகைய அணுகுமுறையைப் பிரதமர் மோடி உடனடியாகக் கைவிட்டு, தடுப்பூசி விநியோகம் செய்வதில் தமிழகத்திற்கு நியாயம் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


Add new comment

Or log in with...