தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு | தினகரன்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிப்பு

பொற்றோர் புகார்

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், செவிலியர்கள் அலட்சியத்தால், பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). விவசாயக் கூலியான இவருக்கும், பிரியதர்ஷினி (வயது 20) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி, ஓராண்டு ஆன நிலையில், கருவுற்று இருந்த ப்ரியதர்ஷினிக்கு கடந்த 25ம் திகதி, தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் குழந்தை பிறந்ததால், அதற்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும் எனவே தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்ததால், குழந்தைக்கு கையில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதால், மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் கையில் இருந்த ஊசியை செவிலியர்கள் அகற்றுவதற்கு டாக்டர்கள் உத்தரவிட்டனர். தொடர்ந்து செவிலியர் ஒருவர், குழந்தையின், கையில் இருந்த பேண்டை கையால் அகற்றாமல், கத்திரிக்கோலை வைத்து அகற்றியதால் குழந்தையின் கட்டை விரல் துண்டானது.

இதனால் குழந்தையின் விரல் துண்டானதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும். இதுவரை உரிய விளக்கம் அளிக்காததால், செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Add new comment

Or log in with...