மெல்பேர்ன் கொவிட் கொத்தணிக்கு காரணம் இலங்கையிலிருந்து சென்றவர்?

மெல்பேர்ன் கொவிட் கொத்தணிக்கு காரணம் இலங்கையிலிருந்து சென்றவர்?-Melbourne COVID Cluster Begins From Sri Lankan

- ஆதாரங்களைத் தேடும் அவுஸ்திரேலிய அதிகாரிகள்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பரவி வரும் புதிய கொரோனா கொத்தணி, இலங்கையிலிருந்து மெல்பேர்ன் திரும்பிய ஒருவரிடமிருந்து ஆரம்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் டெல்டா கொரோனா திரிபு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவிலும் கொவிட்-19 பரவல் ஏற்பட்டு, மெல்பேர்ன் நகரம் இரு வாரங்கள் முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மே 08 ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்னுக்கு சென்ற நபருக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதோடு, அவர் மூலமாகவே குறித்த கொத்தணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

40 வயதான குறித்த இலங்கையிலிருந்து வந்த நபர், அந்நாட்டுக் சென்ற தினத்தில் மேற்கொண்ட PCR சோதனையில், அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. பின்னர் மே 14ஆம் திகதி அவர் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்து, மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று அவர், கடந்த மே 23ஆம் திகதி சிகிச்சை நிலையத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளார்.

ஹோட்டல் தனிமைப்படுத்தலின் போது அவரிடமிருந்து கொவிட்-19 தொற்று பரவயுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் மூலம் இரு குடும்பங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக புதிய கொத்தணியொன்று மெல்பேர்னில் உருவாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னரே அங்கு இரு வாரங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலில் அவர் மூலம் ஏனையவர்களுக்கு எவ்வாறு வைரஸ் பரவியது என்பது தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Add new comment

Or log in with...