‘தமிழ் அவை ஜெர்மனி’ அமைப்பு ஏற்பாட்டில் இணையவழி பன்னாட்டு இலக்கிய சந்திப்பு

தமிழ் அவை ஜெர்மனி 30. 05. 2021 அன்று நடத்திய இணையவழி பன்னாட்டு இலக்கியச் சந்திப்பு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உலகின் பல நாடுகளில் இருந்து கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இலங்கையிலிருந்து பேராசிரியர் மௌனகுரு அவர்களும், இந்தியாவில் இருந்து கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களும் உரையாளர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர் .

அமைப்பாளர் கௌசி அனைவரையும் வரவேற்று தன்னுடைய முன்னுரையில் உரையாற்றினார். பேராசிரியர் க. கைலாசபதி பற்றிய சிறிய வரலாற்றுப் பதிவை அவர் எடுத்துரைத்தார்.

பின்னர் இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட எழுத்தாளர் கவிஞர் மு.கீதா கவிஞர் நா. முத்துநிலவனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட கவிஞர் நா. முத்துநிலவன் ‘சங்க இலக்கியத்திற்கு புது வெளிச்சம் தந்த கைலாசபதி’ என்ற தலைப்பிலே உரையாற்றினார்.

சங்க இலக்கியங்கள் வாய்மொழி பாடல்கள் என்ற கோட்பாட்டை கைலாசபதி நிறுவியமை பற்றியும், புதுக்கவிதை இலக்கியத்தை ஆரம்பத்தில் பேராசிரியர் க. கைலாசபதி ஏற்றுக் கொள்ளாமை பற்றியும், பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டதையையும், பாரதியை போற்றிய அளவு பாரதிதாசனை போற்றவில்லை என்பதையும் பல விளக்கங்களுடன் அவர் எடுத்துக் கூறினார்.

பேராசிரியர் க. கைலாசபதி மேற்கொண்ட நவீன இலக்கியத்தின் ஆய்வுகள் வெளிவரவில்லை என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய பேராசிரியர் மௌனகுரு, பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் வாழ்க்கையின் பிரதான கட்டங்கள், எழுத்துக்கள் மூலம் ஆய்வுகள், அவருக்கும் தனக்கும் இருந்த உறவு, காலத்தின் பின்னணி என்ற நான்கு கட்டங்களாக ‘கைலாசபதி அவர்களை புரிந்து கொள்ளல்’ என்ற தலைப்பிலே தன்னுடைய உரையை மிகச் சிறப்பாக நடத்தினார்.

பேராசிரியர் கைலாசபதியின் மகள் திருமதி சுமித்ரா கலந்து கொண்டு பேராசிரியர் க.கைலாசபதி அவர்களுடைய இளமைப் பருவத்து வாழ்க்கையையும், எவ்வாறான கஷ்டங்களை மலேசியாவில் அனுபவித்து இருந்தார் என்பதையும் அவைதான் அவருடைய எழுத்துக்களுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் எடுத்துக் கூறினார். அவர் குறிப்பிட்ட பல விடயங்கள் அனைவரையும் கவர்ந்திருந்தன. இந்நிகழ்வில் மாணவர்கள் கலந்து கொண்டு தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். பார்வையாளர்கள் கருத்துரைகள் இடம்பெற்றன.

டென்மார்க்கில் இருந்து கலந்து கொண்டஎழுத்தாளரும் கவிஞருமாகிய திருமதி கலாநிதி ஜீவகுமாரன் நன்றியுரை கூறியதையடுத்து நிகழ்வு முடிவுற்றது.

இந்த நிகழ்வு முழுவதையும் Ilakkiya Maalai YouTube Channel மூலம் பார்த்து இரசிக்கலாம்.


Add new comment

Or log in with...