கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற சீன தடுப்பூசி வெற்றிகரமானதா?

- டொக்டர் சுகுணன் பகிர்ந்துள்ள தகவல்கள் ஊடாக அறிய வேண்டிய உண்மைகள்

கொரோனாவுக்கு எதிராக சீனா கண்டு பிடித்துள்ள Sinopharm என்ற தடுப்பூசி வெற்றிகரமானதா? அந்த தடுப்பூசி பாதுகாப்பானதா? கொவிட் தொற்றில் இருந்து சினோஃபாம் தடுப்பூசி மக்களுக்கு பாதுகாப்புத் தருமா? இவ்வாறான சந்தேகங்களுக்கெல்லாம் விளக்கம் தருகின்றது இந்தப் பதிவு.

Health Promotion Bureau இல் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களில் இருந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன் இது பற்றிய விடயங்களை எமக்கு வழங்கியுள்ளார். அவ்விபரங்களை தினகரன் வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம்.

Sinopharm தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது. இதனால், அது எந்த வகையிலும் உடலில் செயல்படவோ, பெருக்கமடையவோ முடியாது. எனவே, அத்தடுப்பூசி நோயை உண்டாக்குவதற்கு சாத்தியமில்லை.

கேள்வி: இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏன் Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை?
பதில்:
இதற்கான காரணம், கர்ப்பிணித் தாய்மார்களிடையே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் இதுவரை போதுமான அளவில் தெரிவிக்கப்படவில்லை என்பதனால் ஆகும். இருப்பினும், தடுப்பூசியின் தன்மை மற்றும் கூறுகளை கருத்தில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியின் செயல்திறனும் பாதுகாப்பும் கர்ப்பிணித் தாய்மார்களிடையேயும் மாற்றமின்றியே காணப்படும் என நம்புகிறது. எதிர்காலத்தில் இத்தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதா? எச்சந்தர்ப்பத்தில் வழங்குவது? போன்ற முடிவுகள் தடுப்பூசி தொடர்பாக நிகழ்கால புதிய தரவுகளுக்கு ஏற்ப தொற்று நோய் விஞ்ஞான ஆய்வகத்தால் மேற்கொள்ளப்படும்.

கேள்வி: எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் தடுப்பூசி பெற்றுக் கொள்வது சிக்கல்களை ஏற்படுத்துமா?
பதில்:
தடுப்பூசியைப் பெற முன் கர்ப்பத்தை பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தினை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யவில்லை. இத்தடுப்பூசி எந்த வகையிலும் ஒருவரில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது. எனவே, எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவர் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள எந்த தடையும் இல்லை. கர்ப்ப காலத்தில் கொவிட் நோய் உங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு முன்பே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது புத்திசாலித்தமாகத் தெரிகின்றது.

கேள்வி: கொவிட் தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா?
பதில்:
இந்த தடுப்பூசி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் எந்தவொரு வயதினருக்கும் எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசி வழங்கப்பட்ட மாதிரியில் (sample) வயதானவர்களில் எண்ணிக்கை குறைந்தளவு இருந்தமையால் இத்தடுப்பூசி முதன்முதலில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வயதானவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போதைய தரவுகளை மேலும் கருத்தில் கொண்டும், தற்போது இந்த நோய் இலங்கையில் பரவி வருகின்ற ஆபத்தைக் கருத்திற் கொண்டும் எந்தவொரு நோயாலும் பாதிக்கப்படாத 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்கூறப்பட்ட தகவல்கள் அனைத்திலும் இருந்து தெளிவாவது என்னவெனில், பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கலுக்கான முடிவுகள் சர்வதேச மட்டத்தில் மட்டுமன்றி பல உள்ளூர் நிபுணர்களின் பங்கேற்பு, ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதாகும். சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தியும் , நாட்டில் தொற்றுநோய் பரவும் தன்மையை கருத்திற் கொண்டும், நோய்க்கு எதிராக கிடைக்கக் கூடிய பாதுகாப்பிற்கான முழுப் பொறுப்பையும் நிச்சயப்படுத்தியே தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கேள்வி: Sinopharm ஒரு வெற்றிகரமான தடுப்பூசியா?
பதில்:
கொவிட் நோயைத் தடுப்பதற்கான வெற்றிகரமான தடுப்பூசி Sinopharm என்பதை சமீபத்திய ஆராய்ச்சித் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இத்தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பஹ்ரைன் போன்ற நாடுகளில் பெறப்பட்ட ஆய்வுத் தரவுகள் மூலம் மேலும் இது உறுதிப்படுத்தப்படுகிறது. தடுப்பூசி மூலம் மட்டும் ஒரு நாடு ஒரு தொற்றுநோயிலிருந்து மீள முடியாது. உரியவாறு பிற பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். எது எவ்வாறிருப்பினும், கொவிட் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் நம்மிடம் உள்ள மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் ஒன்று தடுப்பூசி ஆகும்.

உலகளாவிய அளவில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை நிலவும் இந்நேரத்தில், பெரும் முயற்சிகளின் பலனாகவே நம்நாடு இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டது. அதனால்தான், தடுப்பூசிப் பெற்றுக் கொள்ள உங்களுக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தால், முதல் முறையிலேயே அதைப் பெற்றுக் கொள்வது முக்கியமாகும்.

வி.ரி. சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)

Add new comment

Or log in with...