MV X-Press Pearl: மன்னிப்பு கோரினார் CEO; இலங்கைக்குள் அனுமதித்தது ஏன்? மனு தாக்கல் | தினகரன்

MV X-Press Pearl: மன்னிப்பு கோரினார் CEO; இலங்கைக்குள் அனுமதித்தது ஏன்? மனு தாக்கல்

- CID குழுவினர் கப்பலுக்கு அருகில் விஜயம்
- சிங்கப்பூர் தொலைக்காட்சியில் தோன்றிய கப்பலின் CEO மன்னிப்பு கோரினார்

தீப்பிடித்து மூழ்கி வரும் MV X-Press Pearl கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த விதம் குறித்து, உரிய விசாரணைகளை முன்னெடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதி மையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் குறிப்பிட்ட சில மீனவர்கள் உள்ளிட்டோர் இணைந்து குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இம்மனுவின் பிரதிவாதிகளாக, இலங்கைத் துறைமுக அதிகாரசபை, சமுத்திர மாசடைவைத் தடுக்கும் அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நாரா நிறுவனம், துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை கடலுக்குள் அண்மையில் நுழைந்த குறித்த கப்பல் தீப்பிடித்து, மூழ்கியுள்ளமையானது, இலங்கைக்கு பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியயுள்ளதாக மனுதாரர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டுயுள்ளனர்.

மேலும், இதன் காரணமாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம், சுற்றுலா, கப்பல் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 9.5 கடல் மைல் தொலைவில் MV X-Press Pearl கப்பல் தீப்பிடித்ததோடு, பின்னர் அது அணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில், அது கடலில் மூழ்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பலுக்கு அருகில் இன்றையதினம் (04) குற்றப் புலனாய்வு பிரிவினர் (CID) சென்று பார்வையிட்டதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது,

இந்நிலையில் கப்பலுக்குச் சொந்தமான X-Press Feeders நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி, சாமுவேல் யோஸ்கோவிச் (Shmuel Yoskovitz) முதல் முறையாக ஊடகங்களின் முன் இன்று (04) தோன்றியிருந்தார்.

இச்சம்பவம் குறித்து இலங்கை மக்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்த அவர், அது தொடர்பில் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார்.

சிங்கப்பூரின் பிரபல தொலைக்காட்சியான Channel News Asia இற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

பேட்டியின் தமிழாக்கம்

கேள்வி:
இந்த பாரிய சுற்றாடல் பேரழிவு தொடர்பில் உங்கள் நிறுவனம் என்ன செய்யப்போகிறது?

பதில்:
முதலில் இந்த சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து இலங்கையர்களிடமும் மன்னிப்பு கோருகிறோம்.

இந்த பேரழிவால், இலங்கை மக்களின் சூழலும் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சிக்கல் எழுந்தவுடன் நாங்கள் பல சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றத் தொடங்கினோம்.

ஹைகோர்ப் அவற்றில் ஒன்றாகும். இதுபோன்ற எண்ணெய்க் கசிவை ஆராய உலகின் மிகச் சிறந்த நிபுணர்களில் ஒருவரே அவர்கள்.

தற்போது, சிங்கப்பூர் நேரம் அதிகாலை 5.00 மணியாகும். இதுவரை கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக எந்த தகவலும் வரவில்லை.
அது ஒரு நல்ல செய்தி.

கேள்வி:
யோஸ்கோவிட்ச் அவர்களே, எமக்கு புலப்படும் வகையில் கப்பல் தற்போது முற்றிலும் அழிந்துவிட்டது. இதன் மூலம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:
இது பற்றிய சரியான மதிப்பீட்டைப் பெறாமல், தற்போது சொல்வது மிகவும் கடினமாகும். அந்த மதிப்பீட்டைப் பெறுவதும் எளிதான காரியமல்ல.
ஆனால் நாங்கள் காப்புறுதி செய்யப்பட்டுள்ளோம். எனவே, எமக்கு ஏற்படும் நேரடி இழப்பு மிகக் குறைவாகவே உள்ளது.

கேள்வி:
இந்த சம்பவத்தின் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பு மற்றும் இழப்பீடு தொடர்பாக கேள்வியெழுகின்றது அல்லவா?

பதில்:
உண்மையில், இவ்விடயம் தொடர்பில் தற்போது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆனால் இது மிக நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை என்று நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

நாம் முதலில் இந்த சிக்கலை தீர்க்க வேண்டும், அதன் பின்னரே சேதத்தை மதிப்பிட வேண்டும். நாங்கள் தற்போது இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் இது தொடர்பில் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

அத்துடன் இலங்கை கடற்படையினர் கடற்கரையை சுத்தப்படுத்தி வருகின்றனர். இலங்கையில் தற்போது பயணக் கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆயினும் அத்தகைய சூழ்நிலையில் கூட அந்நடவடிக்கைக்காக பல கனரக வாகனங்களை நாம் ஈடுபடுத்தியுள்ளோம்.
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் செயற்பட்ட MEPA (கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை) இற்கும் கடற்படைக்கும் இவ்வேளையில் நாம் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

கேள்வி:
யோஸ்கோவிட்ச் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரினீர்கள். அத்துடன் இது தொடர்பாக நீங்கள் இலங்கையின் உரிய பிரிவுகளுடன் நெருக்கமாக பணியாற்றுகிறீர்கள் என்று கூறினீர்கள்; தற்போது அதிலுள்ள முன்னேற்றம் தொடர்பில் எமக்கு கூற முடியுமா?

பதில்:
நீங்கள் சொல்வது சரிதான். முதலில் கப்பலின் தற்போதைய நிலையை விளக்குகிறேன். நேற்று முதல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது.
தற்போது அதன் பின்பகுதி, 21 மீட்டர் ஆழமுள்ள கடலின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளது. 

முன் பகுதியும் மெதுவாக மூழ்கிக் கொண்டிருக்கிறது. கப்பல் கடலில் முழுமையாக மூழ்கும் வரை கப்பலின் நிலை குறித்து ஏதாவது சொல்ல வேண்டுமாயின், நாம் இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கும். அதன் பின்னரே நாம் உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்று பார்க்கலாம். அதன் பின்னர் எண்ணெய்க் கசிவு உள்ளதா, வேறு கழிவுப்பொருட்கள் கடல்நீரில் சேர்கிறதா என்றும் அவதானிக்கலாம்.

கேள்வி:
கப்பலிலிருந்து வீழ்ந்த பரவலடையும் கொள்கலன்களை அகற்றுவதற்கு இரண்டு துறைமுகங்களின் உதவியை கோரியுள்ளதை நாம் அறிகின்றோம். ஆனால் இது சம்பந்தமாக அவர்கள் உரிய ஆதரவை வழங்கவில்லை இது தொடர்பில் விளக்க முடியுமா? ஒருவேளை அவர்கள் சாதகமாக பதிலளித்திருந்தால், இப்பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்குமல்லவா.

பதில்:
முதலில் ஒரு கொள்கலனில் மட்டுமே கசிவு ஏற்பட்டது எனத் திருத்த விரும்புகிறேன். உண்மையில் தீ ஏற்படுவதற்கான காரணத்தை விளக்குவது மிகவும் கடினமாகும்.

ஒரு கொள்கலனில் ஒரு இரசாயன கசிவு ஏற்பட்டமையே பெரும்பாலும் இத்தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம். ஆயினும் இது இன்னும் 100 வீதம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

கடலில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய ஏற்பட்டுள்ளன, சில சமயங்களில் துறைமுகங்கள் உதவ ஒப்புக்கொள்கின்றன, சில சமயங்களில் அவை ஒப்புக்கொள்ளாது. அபாயகரமான பொருட்களை கடல் வழியாக கொண்டு செல்வது தொடர்பான சர்வதேச கொள்கைகளுக்கு இணங்க, அத்தகைய சூழ்நிலையை கட்டுப்படுத்துவது கப்பலின் பணியாளர்களின் பொறுப்பாகும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் சரியாக செயல்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. மே 20 ஆம் தேதி கப்பலில் சிறிது புகை வரும் வரை இது முறையாக இடம்பெற்றுள்ளது.

கேள்வி:
அபாயகரமான பொருட்களை முறையற்ற வகையில் ஒழுங்கின்றி வைத்ததனால் ஏற்பட்ட கசிவால் தீ ஏற்பட்டது என, தற்போதைய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றது. இதுபோன்ற இரசாயனங்களின் கசிவால் அவ்வப்போது கப்பல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமல்லவா?

பதில்:
நீங்கள் ஒரு நல்ல கேள்வியை கேட்டீர்கள். கப்பல் நிறுவனங்கள் இந்த கேள்விக்கு விடை காண பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து வருகின்றன.

இந்த கொள்கலன்கள் கப்பலில் சீல் வைக்கப்பட்டே ஏற்றப்படுகின்றன என்பதையும், கொள்கலனில் உள்ளவை சரியாக சேமிக்கப்பட்டுள்ளன என்பதையும் நாங்கள் கொள்கையளவில் நம்புகிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றைத் திறக்க எமக்கு அனுமதி இல்லை.

அச்செயற்பாடுகள் தொழில்துறை மட்டத்தில் நடந்தன என்று நாங்கள் நம்புகிறோம்.
அத்துடன் அதிலுள்ள உள்ளடக்கங்கள் உரிய வகையில் அறிக்கையிடப்பட்டுள்ளன எனவும் நாம் நம்புகிறோம்.
பல ஆண்டுகளாக, பல்வேறு சிக்கலான விடயங்கள் காரணமாக, எண்ணற்ற பல கப்பல்கள் தீப்பிடித்துள்ளன. அவை சில நேரங்களில் இரசாயன கசிவாலும் இடம்பெறுகின்றன.

மிக்க நன்றி சாமுவேல் யோஸ்கோவிட்ச்.


Add new comment

Or log in with...