தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உடலில் கொரோனா எதிர்ப்பு திறன் அதிகரிப்பு | தினகரன்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு உடலில் கொரோனா எதிர்ப்பு திறன் அதிகரிப்பு

அமெரிக்க ஆய்வில் வெளிவந்த உண்மை

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு, நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பிற்கு உள்ளான 63 பேரை தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த ஆய்விற்கு உட்படுத்தினர்.

பரிசோதனைக்கு உள்ளானவர்களில் குறைந்த பட்சம் ஒரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்திக் கொண்ட 26 பேரின் உடலில் ஏற்பட்ட மாறுபாடுகளின் அடிப்படையில் சில விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவர்களின் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு திறன் உடைய மூலக்கூறுகளின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கண்காணிப்பை தொடர்ந்தனர். அப்போது, மனித உடலில் நோய் எதிர்ப்பு திறன் உடைய கலங்கள், கொரோனாவை உருவாக்கும் வைரசின் திறனை செயலற்றதாக மாற்றுவது உறுதியானது. பிரிட்டன், தென் ஆபிரிக்கா மற்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசையும் எதிர்க்கும் திறன் அவர்களிடம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுஒருபுறமிருக்க கொவிஷீல்ட் தடுப்பூசியை இரண்டு 'டோஸ்'களுக்கு பதிலாக ஒரு டோஸ் தடுப்பூசியாக மாற்றுவது குறித்து இந்திய மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஒஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசி தயாரித்தன. இதை, மஹாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து விநியோகிக்கிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் கொவிஷீல்ட் என்றும், மற்ற நாடுகளில், 'வொக்ஸேவ்ரியா' என்றும் அழைக்கப்படுகிறது.

மொத்தம் இரண்டு டோஸ்களாக போடப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 4 - 6 வாரங்களில் இருந்து, 12 - 16 வாரங்களாக இந்திய மத்திய அரசு சமீபத்தில் அதிகரித்தது.

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி லைட் மற்றும் அமெரிக்காவின் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகள் ஒரு டோஸ் மட்டுமே போடப்படுகின்றன. இதைப் போல கொவிஷீல்டையும் இரண்டு டோஸ்களுக்கு பதிலாக ஒரு டோஸ் தடுப்பூசியாக மாற்றினால் அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது:

தடுப்பூசி போடும் தினசரி எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. மாதம் ஒன்றுக்கு 20 - 25 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும். ஜூலை மத்தியில் இருந்தே நாடு முழுதும் நாள் ஒன்றுக்கு 1 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

அதற்குள் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் உள்நாட்டு தயாரிப்பும் தொடங்கி விடும். எதிர்காலத்தில் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. தற்போது இரண்டு டோஸ்களாக செலுத்தப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசியை ஒரு டோஸாக மாற்றினால், அதன் செயல்திறன் எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் மதிப்பீடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...