இலக்கியப் பரப்பில் இமயம் கவிக்கோ

கவிக்கோ அப்துல் ரகுமானின் நான்காவது நினைவு தினம் நேற்று (02.06.2021) ஆகும். தமிழ் இலக்கியம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் மாபெரும் இலக்கிய ஆளுமையாக வாழ்ந்து மறைந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

பன்மொழிப் புலமை வாய்க்கப் பெற்றதனால், பரந்துபட்ட இலக்கியத் தேடலுடன் கூடிய நவீன இலக்கிய ஈடுபாட்டினால் தமிழ் இலக்கியத்துக்கு இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இலக்கிய வடிவங்கள் இவருக்கு சிறப்பான பெருமைகளை ஈட்டிக் கொடுத்தன.
1937  நவம்பர் 9 இல் மதுரை கிழக்கு சந்தைப் பேட்டையில் சையத் அஹமத் (மஹதி)-ஸைனப் பேகம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் அப்துல்ரகுமான்.
தொடக்கக் கல்வியையும் உயர் கல்வியையும் மதுரையில் உள்ள கல்லூரிகளில் பெற்ற பின்னர் இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

புதுக்கவிதையில் குறியீடு எனும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர்(Phd) பட்டம் பெற்றார். இவரது தகப்பனாரும் தாத்தாவும் உருதுக் கவிஞர்களாவர். மனைவி காலமான பின்னர் மகனுடனும் மகளுடனும் சென்னையில் அவர் வாழ்ந்து வந்தார்.

தமிழில் முதுகலை(MA) பட்டம் பெற்றதும் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் 1961 இலிருந்து பல படித்தரங்களில் பணியாற்றி பேராசிரியராகி பின்னர் விருப்பு ஓய்வு பெற்றார்.

1960 களில் தோற்றம் பெற்ற ‘வானம்பாடி’ அமைப்பின் முதன்மைக் கவிஞராக அடையாளம் காணப்பட்ட கவிக்கோ, படிமக் கவிதை அமைப்பின் உச்சம் தொட்டு நின்றவர்; உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் மூலம் தமிழ்க் கவிதைகளில் புதுமைகளைப் புகுத்திய முன்னோடியாவார். ஹைக்கூ கஜல் கவிதைகளிலும் அவர் பங்களிப்பு கணிசமானது.

கவியரங்க கவிதைகளை சபையினர் முன்வைப்பதில் அவர் கையாண்ட உத்திகள் இளம் தலைமுறைக் கவிஞர்களை பெரிதும் கவர்ந்தன. இவர் எழுதிய 'பால் வீதி' இவரை ஒரு பரிசோதனைப் படைப்பாளியாக இனங்காட்டியது. 'ஆலாபனை' கவிதைத் தொகுதிக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்தது. கவிதை, கட்டுரை, ஆய்வு ஆகியவற்றில் 40  நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சுமார் 14 விருதுகள் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இலக்கியத்தை சமய நல்லிணக்கத்துக்காக பயன்படுத்தி ஒரு மாபெரும் தனி இயக்கமாக நின்று செயலாற்றியவர் கவிக்கோ. இதை நான் அவருடன் பழகிய காலம் தொடக்கம் நன்கறிவேன்.

தமிழ்நாடு, மலேஷியா, இலங்கையில் நடைபெற்ற தமிழ் இலக்கிய, இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகளில் சிறப்பதிதியாக கலந்து கொள்வதிலும் முன் நின்று நடத்துவதிலும் கவிக்கோ பெரும் அக்கறையுடன் செயல்பட்டு வரலானார்.

இலங்கை கம்பன் கழகத்தின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வந்ததுடன் 'மகரந்தச் சிறகு' எனும் விருதும் அவர் பெயரில் நிறுவப்பட்டு  ஆண்டு தோறும் விருது வழங்கப்படுகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் அனைத்திலும் அவரது பங்களிப்பு கணிசமானது.

இலங்கை, மலேசிய எழுத்தாளர்களுடனும் இலக்கியவாதிகளுடனும் அவர் வைத்திருந்த தொடர்பு போல் எந்த வெளிநாட்டு தமிழ் இலக்கிய ஆளுமைகளும் வைத்திருக்கவில்லை.

கவிக்கோவைப் பாராட்டி 2015 ம் ஆண்டு சென்னையில் உலக சினிமா கலை இலக்கிய ஜாம்பவான்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இரண்டு நாள் 'கவிக்கோ பவள விழா' தமிழ் இலக்கிய இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் காலத்தால் பேசப்படும் ஒரு விழாவாக அமைந்திருந்தது.

'இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கவிஞன்' எனப் போற்றப்படும் கவிக்கோ 'மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்' எனப் புகழாரம் சூட்டப்பட்டவர். அவர் பெயரில் தமிழ் நாட்டிலும் சிங்கப்பூரிலும் இலக்கிய மன்றங்கள் இயங்கி வருகின்றன.

பழந்தமிழ் இலக்கியத் தேடல், பக்தி இலக்கிய ஈடுபாடு, ஞான இலக்கிய ஞானம், மேல்நாட்டு பிற மொழி இலக்கிய ஒப்பீடு, மொழிபெயர்ப்பு இலக்கியம், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவுள்ள  இணையில்லா இமயமாய் கவிக்கோ திகழ்ந்தார். 02 .06  2017 இல் இவ்வுலகை விட்டுப் பிரிந்த அன்னாரின் இழப்பு முழு தமிழ் கூறும் நல்லுலகத்துக்கும் பேரிழப்பாகும்.

தாஸிம் அகமது


Add new comment

Or log in with...