பல தசாப்தங்களுக்கு மேலாக இலக்கியப் பணியாற்றிய பஷீர்

பஷீர் என்ற பெயரைக் கேட்டதும் இலக்கிய உலகின் எண்ணம் நேரடியாகச் செல்வது மலையாள இலக்கிய ஜாம்பவான் வைக்கம் முஹம்மது பஷீரை நோக்கித்தான். அந்தப் பஷீரின் கேரளப் பரம்பரையில் இருந்து இலங்கை மண்ணுக்குக் கிடைத்த சிறந்த படைப்பிலக்கியவாதிதான் மு. பஷீர்.
 
பெரும்பான்மை மக்கள் அதிகம் வாழும் கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரதேசத்தின் கல்லொளுவை என்ற கிராமத்தில் பிறந்த  பஷீர், அன்றைய தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாசறைகளில் வளர்ந்தவர். ஐந்து பெண் பிள்ளைகளுக்கும், ஒரு ஆண்மகனுக்கும் தந்தை.

சிறுகதை, கவிதை, ஆய்வு என முத்திரை பதித்துள்ள இவர், நான்கு தசாப்த  காலங்களாக வாழ்வின் இடர்களுக்கு மத்தியில் தொடர்ந்து இலக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றார். ஜெயகாந்தனின் சரஸ்வதி காலப் படைப்புகளால் ஆகர்ஷிக்கப்பட்ட இவர், மலையாள மண்ணின் எழுத்தாளர்களான வைக்கம் பஷீர், தகழி , பொற்றைக்கார்ட் , தோப்பில் மீரான் போன்றோரின் எழுத்துகளைப் பெரிதும் நேசிப்பவர்.
 
தந்தை வழி கேரளத்தோடு தொடர்புடைய மு.பஷீர் எழுதிய கதைகளில் மலையாள நெடி வீசுவதை நன்றாகவே உணரலாம். மேடைப் பேச்சுகளில் சிறந்தவரான இவர், நட்புக்கும் பழகுவதற்கும் மிக இனியவர். எவர் மனதையும் புண்படுத்தாத இயல்பு காரணமாக எல்லோராலும் நேசிக்கப்படுபவர். எனது நீண்ட கால இலக்கிய நண்பர். அதையும் விட எனது எழுத்து முயற்சிகளுக்குத் தொன்று தொட்டே உறுதுணையாக எனது எழுத்துலகக் குருநாதராக இருப்பவர்.
 
நீர்கொழும்பு கலை இலக்கிய வட்டம், மினுவாங்கொடை கலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் தலைவராக இருந்து பலகாலம் இலக்கியச் சேவைச் செய்து பிரதேசத்தின் புதிய எழுத்தாளப் பரிமாணத்திற்கு வித்திட்டவர். தொட்டதை அலம்பல் சிலம்பல் இல்லாமல் விஷயச் செறிவோடு நறுக்காகச் சொல்லும் படைப்பாற்றலைப் பஷீரின் கதைகளில் காணலாம். கலைத்துவம் மிக்க நடையில் படைக்கப்பட்டிருக்கும் இவர் கதைகளில் ஒவ்வொன்றும் உருவச் சிறப்பு மிக்கவை
 
மறைந்த மூத்த எழுத்தாளர் இளங்கீரனின் பஷீர் பற்றிய மதிப்பீடு இது.
 
“மு. பஷீர் அறுபதுகளில் எழுத்துலகினுள் பிரவேசித்த போதிலும், 68ஆம் ஆண்டிலேயே இவரது  முதலாவது சிறுகதையான 'மீறல்கள்'  வீரகேசரியில் பிரசுரமானது. அந்தக் கதைக்குச் சமூகத்தின் சில மேல் மட்ட  முஸ்லிம் பிரமுகர்களின் கடும் எதிர்ப்பு  வந்தது. சமூகச் சாடலும், முகமூடி கிழித்தமையுமே எதிர்ப்புக்குக் காரணம். 
 
இதனால் பஷீர் சற்றேனும் மனம் தளர்ந்து சோர்ந்து போய் விடவில்லை. அடுத்து ‘பெண் எப்படி இருப்பாள்' என்ற கதை வீரகேசரியில் பிரசுரமான போது பல மட்டத்திலிருந்தும் பாராட்டுகள் வந்தன. அக்கதையை அக்கரைமுத்து என்பவர் வீரகேசரியில் காரண காரியங்களோடு ஆழமாக விமர்சித்து, விதந்து பாராட்டி இருந்தார். முகம் தெரியாத  ஒருவரிடமிருந்து வந்த இந்த விதந்துரைப்புகள் பஷீருக்கு உற்சாகமூட்டின. அதனையடுத்து புனைகதைத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டார்.

இதுவரையில் மு.பஷீர் சுமார் 50 சிறுகதைகளை தினகரன், வீரகேசரி, மல்லிகை, தினக்குரல், ஆகிய இதழ்களில் எழுதியுள்ளார். கவிதை, கட்டுரை என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

தனது வளர்ச்சிப் பாதையில் மல்லிகைக்குச் சிறப்பான இடமுண்டு என்று நன்றியறிதலோடு பஷீர் எப்போதும் குறிப்பிட்டுக் காட்டத் தவறியதில்லை .

இங்கு இன்னொரு முக்கிய விடயத்தை நினைவுக்குக் கொண்டு வந்தாக  வேண்டும். 58க்கும் 60க்கும் இடைப்பட்ட காலம் என நினைக்கின்றேன். அன்று இந்திய அரசு காரணம் எதுவுமேயின்றி கேரளக் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைத்தது. இதனால் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பு  ஆர்ப்பாட்டங்கள் எழுந்தன.
 
இலங்கையில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பாகப் பெரிய அளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்று மு.பஷீர் தீவிர  கம்யூனிஸ்ட் ஆதரவாளனாக இருந்தமையால் அந்தப் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டார். அது அவரது இளமைக் காலம் என்பதால் எதிர்ப்பு வேகம் சற்றுக் கூடியதாகவே காணப்பட்டது.

இதனால் பஷீர் பொலிசாரின் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன் ஒரு வார  காலத்துக்கும் கூடுதலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று இலங்கையில் இந்தியத் தூதுவராகக் கண்டேவியா என்பவர் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். பஷீரைப் பற்றிக் குறிப்பிடும் போது  இதனைக் கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும் என்பதாலேயே இங்கு எழுத விரும்பினேன்.
 
பஷீரின் படைப்புகள் பல தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மீறல்கள்', 'தலைமுறை இடைவெளி' என இரண்டு சிறுகதை நூல்கள் வெளியாகியுள்ளன.
 
1999ஆம் ஆண்டில் அரசின் கலாபூஷண விருதைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். 2002ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறந்த படைப்பாளிக்கான விருதையும் பொற்கிழியையும் பெற்றார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாழும் கதைகள் (சிறுகதைகள் மீள்அறிமுக) நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வழங்கி இருக்கின்றார்.

மானுட நேயப் படைப்பிலக்கியவாதியான மு. பஷீரின் கதைகள்  கலைத்துவம் மிக்கவை. யதார்த்தபூர்வமானவை. மனித வாழ்வின் ஆழங்களை புரிந்து சிருஷ்டிக்கப்பட்டவை. சுட்டெரிக்கும் உண்மைகளை அச்சமோ, தயக்கமோ இன்றி எழுதும் வல்லமை கொண்டவர் அவர்.
 
2003இல் இவர் 'இது இவர்களின் கதை' என்ற நாவலொன்றைப் படைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போதும் பஷீருக்கும் எனக்குமிடையிலான சுமார் நாற்பது ஆண்டு கால நட்புறவு சிறிதளவும் சரிவின்றி உறுதியாகவே இருந்தது.

எனது தந்தையும் அவரது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். எங்களிருவரைப் பற்றி அன்று அவர்கள் கடுமையாக விமர்சித்தமை மறக்கப்பட முடியாது. இன்று அவர்கள் உயிருடன் இல்லை. ‘வேலை மெனக்கெட்டவனுகள்’ என்று சொன்ன அவர்கள் இன்றிருந்தால் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகின்றேன்.

எம். ஏ. எம். நிலாம்
(சிரேஷ்ட ஊடகவியலாளர், எழுத்தாளர்)


Add new comment

Or log in with...