தீப்பிடித்த X-Press Pearl கப்பலுக்கு பொறுப்பான மாலுமி உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம்

தீப்பிடித்த X-Press Pearl கப்பலுக்கு பொறுப்பான மாலுமி உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம்-CID Records Statement for X-Press Pearl Ship Captain-Engineers

- அறிக்கை மேலதிக நடவடிக்கைக்காக சட்ட மாஅதிபருக்கு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் தீப்பிடித்த X-Press Pearl கப்பலுக்கு பொறுப்பான மூவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) தற்போது வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர்.

கப்பலின் மாலுமி, அதன் பிரதான பொறியாளர், உதவி பொறியாளர் ஆகிய மூவரிடமிருந்தே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூருக்குச் சொந்தமான, 37,000 தொன் எடை கொண்ட X-Press Pearl கப்பலானது, 1,486 கொள்கலன்களுடன் பயணித்த நிலையில் கடந்த மே 19 ஆம் திகதி இவ்வாறு தீப்பிடித்தது.

இதனைத் தொடர்ந்து சில நாட்களாக தொடர்ந்தும் தீப்பிடித்திருந்த கப்பலை, குறித்த கப்பலுக்கு உரித்தான சிங்கப்பூர் நிறுவனம், இந்தியா ஆகியவற்றின் தீயணைப்பு கப்பல்கள், இலங்கை கடற்படை மற்றும் வான்படை ஆகியன இணைந்து தீயணைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது குறித்த கப்பலிலிருந்து கொள்கலன்கள் மற்றும் பொருட்கள் கடலில் வீழ்ந்து, கரையை ஒதுங்கியதோடு, இதனால் கொழும்பிலிருந்து நீர் கொழும்பு, சிலாபம் வரையான கடற்கரைப் பகுதிகள் மாசடைவுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

தற்போது, குறித்த மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பான அறிக்கை சட்ட மாஅதிபர், சஞ்சய ராஜரத்தினத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


Add new comment

Or log in with...