இன்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டுக்கு ஒருவருக்கு அனுமதி

இன்றும், மே 31, ஜூன் 04ஆம் திகதிகளிலும் தற்காலிக நீக்கம்

 

நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள பயணத் தடை எதிர்வரும் ஜூன் மாதம் 07ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமையில் நேற்று (24) சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், சுகாதாரத்துறை உயரதிகாரிகள், இராணுவத்தளபதி மற்றும் துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட முக்கிய பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று இரவு பதினொரு மணி வரையிலான காலத்திலும் எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை மற்றும் ஜூன் மாதம் நான்காம் திகதி அதிகாலை 04.00 மணி முதல் அன்றையதினம் இரவு 11.00 மணி வரையும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக பயணத் தடை கட்டுப்பாட்டைத் தளர்த்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வழிகாட்டல்களை முறையாக கடைப்பிடித்து  பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இத் தீர்மானம் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணதுங்க, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா,பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண ஆகியோரும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;

நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள பயணத் தடை இன்று அதிகாலை 04.00 மணிக்கு தளர்த்தப்படாது. பயணத் தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனினும்

இன்றைய தினம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்வதற்காக மட்டும் அதிகாலை 04.00 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மீண்டும் இரவு 11.00 மணிக்கு அமுல் படுத்தப்படும்.

அதற்காக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரமே திறக்கப்பட்டிருக்கும்.

ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரமே பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டுக்கு மிக அருகிலுள்ள விற்பனை நிலையத்திற்கு செல்ல முடியும். அச் சந்தர்ப்பங்களில் வாகனங்களில் செல்வதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இன்று இரவு 11.00 மணிவரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை வரை நாடு முழுவதும் பயணத்தடை நடைமுறையிலிருக்கும். எதிர்வரும் 31ஆம் திகதியன்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டும் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் 04ஆம் திகதி மீண்டும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான மட்டுமே சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து அன்று இரவு 11.00 மணிக்கு மீண்டும் நாடு முழுவதும் பயணத் தடை அமுலுக்கு வரும். இதனையடுத்து எதிர்வரும் ஜூன் 07ஆம் திகதிவரை பயணத் தடை அமுலிலிருக்கும்.அதேவேளை நடமாடும் சேவை மூலம் மக்கள் தமக்கான அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று விவசாயிகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளை எந்த தடையுமின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும். அதற்கு அரசாங்கம் எந்த தடையையும் விதிக்கவில்லை.

நாட்டில் முதலாவது கொரோனா வைரஸ் அலை இருந்த போது அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவை மூலம் பெற்றுக்கொடுத்தவர்கள் அதனை இம்முறையும் தொடர்ச்சியாக மேற்கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அத்தகையோரின் சேவை பெரும் பங்களிப்பாக அமையும். லொறி,வேன், முச்சக்கரவண்டி அல்லது துவிச்சக்கரவண்டி மூலமும் அவ்வாறான நடமாடும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...